Published:Updated:

`ஆணாதிக்க அரசியலில்...!' - கருணாநிதி அறையில் கலங்கினாரா கனிமொழி?!

இதே இடத்தில் கருணாநிதி இருந்திருந்தால், `கூட்டத்துக்கு வாம்மா..' என அழைப்பு அனுப்பியிருப்பார். கனிமொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதை தி.மு.க தலைமை விரும்பவில்லை என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.

`ஆணாதிக்க அரசியலில்...!'  - கருணாநிதி அறையில் கலங்கினாரா கனிமொழி?!
`ஆணாதிக்க அரசியலில்...!' - கருணாநிதி அறையில் கலங்கினாரா கனிமொழி?!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றோடு இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. `ஆண்கள் ஆதிக்கம் செலுத்துக் கூடிய அரசியலில் ஒரு பெண்ணாக இருந்து வெற்றி பெற்றார் ஜெயலலிதா எனக் குறிப்பிட்டிருக்கிறார் கனிமொழி எம்.பி. இந்த வார்த்தைகளின் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3 அன்று, `நீயற்ற நாட்கள்' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியிருந்தார் கனிமொழி. அதில், `ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை, கைகள் சோர்ந்து நம்பிக்கை இற்று விழும்முன் வா. உன் கரகரத்த குரல் வாளெடுத்து எழுத்துக் கேடயம் ஏந்தி வா. வீதிகளெங்கும் காத்திருக்கிறோம் ரட்சகனுக்காக' எனப் பதிவு செய்திருந்தார். ஸ்டாலினுக்கு எதிரான கவிதையாகவே இதைக் கவனித்தனர் உடன்பிறப்புகள். கழகம் துவண்டு போய்க் கிடப்பதைத்தான் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார் கனிமொழி. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அரசியல்ரீதியான நடவடிக்கைகளில் எந்த வேகத்தையும் அவர் காட்டவில்லை.

தி.மு.க தலைவராகப் பதவியேற்ற ஸ்டாலின், சி.ஐ.டி காலனிக்கே சென்று ராஜாத்தி அம்மாளிடம் ஆசிவாங்கினார். இதுவும்கூட, அழகிரியின் ஆட்டத்தால் வந்த விளைவுகள்தான் என தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் பேச்சு எழுந்தது. கருணாநிதி இருந்தவரையில் அரசியல்ரீதியான கூட்டங்களில் கனிமொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், கடந்த சில வாரங்களாக எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படாததை உணர்ந்து அமைதியாக இருக்கிறார் கனிமொழி. `இந்தக் கோபத்தைத்தான் ஜெயலலிதா நினைவுநாளான இன்று வெளிப்படுத்தியிருக்கிறார்' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

இன்று அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், `ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாள்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதே வரிகளை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது, `Surviving as a woman in a male dominated political world is not an easy task' எனப் பதிவு செய்திருக்கிறார். அதாவது, `ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியலில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்றது சாதாரணம் அல்ல' என்கிறார். 

``கடந்த சில நாள்களாக தி.மு.க தலைமையின் செயல்பாடுகளைத்தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``நெல்லையில் எம்.பி நிதியில் கட்டப்பட்ட நூலகக் கட்டடத்தைத் திறப்பதற்காகக் கடந்த வார இறுதியில் சென்றார் கனிமொழி. நூலகப் பயன்பாட்டுக்கென மு.க.ஸ்டாலின் கொடுத்த 5,000 புத்தகங்களும் அங்கு வழங்கப்பட்டன. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சங்கர் சிமென்ட் நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையில் அவர் தங்கினார். அங்கிருந்த நிர்வாகிகளிடம், `தலைவர்(கருணாநிதி) வந்தால் பயன்படுத்தும் அறையைத் திறந்து காட்டுங்கள்' எனக் கேட்டார். இதனால் ஆச்சர்யமான விருந்தினர் மாளிகை நிர்வாகிகள், கருணாநிதி பயன்படுத்தும் அறையைத் திறந்துவிட்டுள்ளனர். அந்த அறைக்குள் மௌனமாக சில நிமிடங்கள் நின்றார். வேறு எந்த வார்த்தைகளையும் அவர் பேசவில்லை. தன்னுடைய மனக்குறைகளை அவர் கருணாநிதியிடம் பேசியதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இப்படியொரு மௌனத்தின் பின்னணியில் சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மேக்கே தாட்டூ அணை விவகாரத்தில் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். எம்.பி என்ற முறையிலும் மாநிலங்களவை குழுத் தலைவர் என்ற முறையிலும் கனிமொழிக்கு அழைப்பு அனுப்பியிருக்கலாம். 

அதேபோல், திருச்சியில் நடந்த தோழமைக் கட்சிகளின் கண்டனக் கூட்டத்திலும் கனிமொழிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதே இடத்தில் கருணாநிதி இருந்திருந்தால், `கூட்டத்துக்கு வாம்மா..' என அழைப்பு அனுப்பியிருப்பார். கனிமொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதை தி.மு.க தலைமை விரும்பவில்லை என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்ய விரும்பினார் கனிமொழி. அந்தப் பகுதிகளுக்குப் பத்தாயிரம் கிலோ அரிசி, 5 ஆயிரம் கிலோ பருப்பு, எண்ணெய் என வாரிக் கொடுத்திருந்தார். அந்த மக்களின் வேண்டுகோளை ஏற்றுப் பயணம் செய்ய முடிவெடுத்திருந்தார் கனிமொழி. இதற்குத் தலைமை அனுமதி கொடுக்காததால், பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டார். அதேநேரம், கட்சிக்குள் உதயநிதி முன்னிறுத்தப்படுவதையும் கவனித்து வருகிறோம். இன்று சீர்காழியில் நடக்கவிருக்கும் கட்சியின் இளைஞரணி நிகழ்ச்சியில் உதயநிதி முன்னிறுத்தப்படுகிறார். இதனை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதேசமயம், கழகத்தின் சீனியராகவும் மகளிரணிச் செயலாளராகவும் இருக்கும் கனிமொழிக்கு, தலைமை உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம்" என்றார் விரிவாக.