Published:Updated:

`இப்படியொரு கூட்டம் எப்படிச் சாத்தியமானது?' - அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த அ.ம.மு.க

இந்த வழக்கில், `அவர் சிறைக்குச் செல்வார்; அ.ம.மு.க காணாமல் போய்விடும்' என்றெல்லாம் பேசி வந்தனர். இன்றைக்குக் கூடிய கூட்டத்தின் மூலம் அந்தப் பிரசாரம் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

`இப்படியொரு கூட்டம் எப்படிச் சாத்தியமானது?' - அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த அ.ம.மு.க
`இப்படியொரு கூட்டம் எப்படிச் சாத்தியமானது?' - அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த அ.ம.மு.க

ஜெயலலிதா சமாதியில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம் ஆளும்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. `எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தினகரன் பக்கம் செல்வதாக இதை எடுத்துக்கொள்ளலாம். சமாதியில் கூடிய கூட்டத்தை ஸ்டாலினும் கவனித்திருக்கிறார்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று காலை வாலஜா சாலையிலிருந்து ஜெயலலிதா சமாதி வரையில் அமைதிப் பேரணியை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. இந்தப் பேரணியில் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கறுப்புச் சட்டை அணிந்து சோகமாகக் காட்சியளித்தார் எடப்பாடி பழனிசாமி. இதே இடத்திலிருந்து தினகரனும் அமைதிப் பேரணியைத் தொடங்கினார். ஆளும்கட்சிக்குக் கூடிய கூட்டத்தைவிட தினகரனுக்காக வந்து சேர்ந்த கூட்டம், அமைச்சர்களுக்குக் கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தக் கூட்டத்தைக் கண்ட தி.மு.க நிர்வாகிகளும் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். 

இதுதொடர்பாக அறிவாலயத்தில் பேசிய தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர், ``தினகரன் எப்படியும் களத்தில் நிற்பார். அவர் களத்தில் நிற்பதன் மூலமாக அ.தி.மு.க-வின் வாக்குவங்கி பிளவுபடும். இனி எடப்பாடி பழனிசாமியைக் காட்டி யாரும் தி.மு.க-வை மிரட்டிவிட முடியாது. சிறிய கட்சிகளுக்குத் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை விட்டால் வேறுவழியில்லை. இவர்களில் சிலர் எடப்பாடி பழனிசாமியைக் காரணம் காட்டி எங்களை மிரட்டுகின்றனர். அதில் சிலர், எடப்பாடி பழனிசாமியை அடிக்கடி சந்திக்கின்றனர். தமிழக அரசையும் மறைமுகமாகப் பாராட்டுகிறார்கள். வரக்கூடிய தேர்தலில் தினகரனுக்குப் பத்து சதவிகித வாக்குகள் கிடைக்கலாம் என்ற பேச்சும் உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அபிமானிகள் தினகரன் பக்கம் செல்லவே விரும்புகின்றனர். எனவே, மெரினாவில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம், எங்களுக்கு ஒருவகையில் சாதகமானதுதான். அ.தி.மு.கவின் வாக்குவங்கி பிளவுபடும்போது தி.மு.கவுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம்" எனப் பேசியிருக்கிறார். 

``கூட்டத்தைத் திரட்ட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?" என அ.ம.மு.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``இதற்கென எந்தத் திட்டமும் வகுக்கப்படவில்லை. `சமாதிக்கு வாருங்கள்' என அறிக்கை மட்டுமே வெளியிட்டார் தினகரன். தே.மு.தி.க தொடங்கிய காலத்தில் விஜயகாந்த் தன் சொந்தக் காசை செலவழித்ததால், எங்கே கூட்டம் நடந்தாலும் பெரும் கூட்டம் ஒன்று தேடி வந்தது. அதேபோல்தான், இப்போது தினகரனுக்கும் கூட்டம் கூடுகிறது. புதிய மாற்றுக்கான உணர்வாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. தினகரனுக்குக் கூட்டம் வந்தால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆபத்து எனச் சிலர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இப்படித்தான் ஆர்.கே.நகரையும் கவனித்தார் ஸ்டாலின். கடைசியில் டெபாசிட்டைப் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஜெயலலிதா இறந்த பிறகு வேறு எந்தக் கட்சிக்கும் சாரை சாரையாக அ.தி.மு.க தொண்டர்கள் இடம்பெயர்ந்ததாகத் தகவல் இல்லை. ஆட்சி மாறினால் காட்சி மாறும். அப்போது வேண்டுமானால், கட்சி நிர்வாகிகள் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்தக் கூட்டம் உணர்த்துவது ஒன்றைத்தான். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இரட்டை இலைக்கு லஞ்சம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேற்று குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொண்டார் தினகரன். இந்த வழக்கில் அவர் சிறைக்குச் செல்வார்; அ.ம.மு.க காணாமல் போய்விடும் என்றெல்லாம் பேசி வந்தனர். இன்றைக்குக் கூடிய கூட்டத்தின் மூலம் அந்தப் பிரசாரம் முறியடிக்கப்பட்டிருக்கிறது" என்றார் விரிவாக.