Published:Updated:

எம்.ஜி.ஆர் மறைவு; ஜெயலலிதா மறைவு - அ.தி.மு.க-வில் என்ன வேறுபாடு?

எம்.ஜி.ஆர் மறைவு; ஜெயலலிதா மறைவு - அ.தி.மு.க-வில் என்ன வேறுபாடு?
எம்.ஜி.ஆர் மறைவு; ஜெயலலிதா மறைவு - அ.தி.மு.க-வில் என்ன வேறுபாடு?

1987 டிசம்பர் 24-ம் தேதி நள்ளிரவில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் மறைந்தார். அதற்குப் பிறகு தமிழக அரசியல் களத்திலும், அ.தி.மு.க. -வின் மீதும் எழுப்பப்பட்ட மிகப்பெரிய கேள்வி கட்சிக்கு அடுத்த தலைமை யார் அல்லது யாருக்குப் பின்னால் இனி அ.தி.மு.க என்பதுதான். இதே கேள்வி மீண்டும் 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னரும் எழுப்பப்பட்டது.  ஜெ. மறைவுச் செய்தியை டிசம்பர் 4, 2016 இரவில் அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தபோது, ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது. இனி அ.தி.மு.க. என்னாகுமோ என்ற கேள்வி ஒருபுறம் கட்சிக்காரர்களிடையே எழுந்ததையும் மறுக்க முடியாது. அந்தக் கேள்விக்கான விடையைத் தேடுவதிலேயே நகர்ந்துள்ளது கடந்த இரண்டாண்டு கால தமிழக அரசியல்.

எம்.ஜி.ஆர் மறைவு; ஜெயலலிதா மறைவு - அ.தி.மு.க-வில் என்ன வேறுபாடு?


எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் ஜெயலலிதா மட்டுமல்லாமல், அ.தி.மு.க. வில் ஏராளமான தலைவர்கள் வரிசைகட்டி நின்றனர். திராவிட இயக்கப் போராட்டங்களின் மூலம் அரசியலுக்கு வந்து அண்ணாவின் தம்பியாக செல்வாக்கு பெற்று. பேச்சு, எழுத்து, அரசியல்  என அனைத்திலும் ஆளுமை பொருந்திய நெடுஞ்செழியன் அப்போது முன்னணியில் இருந்தார். எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியதிலிருந்து அவருடனேயே பயணித்து கட்சியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்த ஆர்.எம்.வீரப்பன் மற்றும் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி எனப் பலரும் கட்சித் தலைமைப் பதவியை ஏற்க விரும்பினர். அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, தனக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்காலும், 1989-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தன் அணியைச் சேர்ந்தவர்களின் வெற்றியாலும் பின்னாளில் அ.தி.மு.க. -வின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று இறுதிவரை அந்தப் பதவியில் இருந்தார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பிளவை எதிர்கொண்டு அதிமுக (ஜா) அணி , அதிமுக(ஜெ) அணி என இருகட்சிகளாகச் செயல்பட்டதை நினைவுகூர வேண்டும். ஆட்சியை எம்.ஜி.ஆர் விட்டுச் சென்றபோது, ஜானகிக்கு ஆதரவாக இருந்தது 90 எம்.எல்.ஏ-க்கள், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தது 29 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே. ஜானகி முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு மூன்று வாரத்துக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொன்னார் ஆளுநர். தி.மு.க. ஆதரவளிக்க மறுத்துவிட்டது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை ஜெயலலிதா சந்தித்துப் பேசிய பிறகு காங்கிரஸ் கட்சியும் ஜானகிக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டது. வெறும் 29 எம்.எல்.ஏ-க்களை  மட்டும் வைத்துக்கொண்டு அப்போது ஆட்சியைக் கலைத்தார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர் மறைவு; ஜெயலலிதா மறைவு - அ.தி.மு.க-வில் என்ன வேறுபாடு?

கட்சிகள் பிளவுபட்டிருக்கும்போது பெரும்பாலும் அவற்றில் ஓர் அணிக்குத்தான் மத்தியில் ஆளுங்கட்சி ஆதரவு அளிக்கும் என்பது பொதுவான இயல்பு. ஆனால், இப்போதைய சூழ்நிலையில் எடப்பாடி, ஓ.பி.எஸ் இணைந்த அ.தி.மு.க ஓர் அணியாகவும், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. மற்றொரு அணியாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், எந்தப் பிரிவுக்கு மத்திய அரசு தற்போது ஆதரவு அளிக்கிறது என்பதுதான் குழப்பமான நிலையை ஏற்படுத்துகிறது. ஏனெனில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, தினகரன் என இருவருமே பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் 1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும் ஜானகி அணியைவிட அதிக தொகுதியில் ஜெ.தலைமையிலான அணி அதிக இடங்களைக் கைப்பற்றியதால், கட்சித்தலைமைப் பதவிக்கு வர, அது ஜெயலலிதாவுக்கு உதவிகரமாக இருந்தது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு முக்கியமானதாகக் கருதப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்குச் சாதகமான சூழல் அமைந்தாலும், 'அ.தி.மு.க. எங்களுடைய கட்சி' எனச் சொல்லிவந்தவர்,  இப்போது அ.ம.மு.க. என்ற புதியக் கட்சியைத் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார் அவர். நம்பிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளும், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களும் இன்னும் ஆறு மாதத்தில் இந்த ஆட்சி இருக்காது எனச் சொல்லி வந்த நிலையில், எடப்பாடி தலைமையிலான ஆட்சி இரண்டு ஆண்டுகளைக் கடந்து ஆட்சியை நகர்த்திக் கொண்டிருக்கிறது. எனினும் எத்தனை நாள்களுக்கு இந்த அரசு நீடிக்கும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. 

`எங்க அத்தையைப் பார்க்கக்கூட விடல’எனச் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து அதன் மூலம் அரசியல் கால்பதித்த ஜெ.திபா அவருடைய கணவர் மாதவன் எல்லாம் ஆளுக்கொரு கட்சிகள் தொடங்கி. கட்சி அலுவலகங்களும் திறந்து விட்டனர். ஆனால் கட்சிகளுக்குத் தேவையான கொள்கைகளும் தொண்டர்களும் மட்டும் இன்னும் அவர்களைச் சென்று சேரவில்லை.

தினகரனின் சகோதரர் பாஸ்கரன் விளம்பரங்களின் மூலம் தான் நடிகரானதை அறிவித்ததைப் போல, தான் தொடங்கியுள்ள கட்சியையும் தமிழகம் முழுக்க விளம்பரப்படுத்திவிட்டார். சசிகலாவின் சகோதரர் திவாகரனும் தன் பங்குக்கு அவரின் மகன் ஜெயானந்தை முன்னிறுத்தி `அண்ணா திராவிடர் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இனிவரும் காலங்களில் தமிழக கட்சிகளின் வரலாற்றை எழுதும்போது மன்னார்குடி கட்சிகள் என்ற புது அத்தியாயத்தையே உருவாக்க வேண்டிய அளவுக்கான சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.

அ.தி.மு,க-விலிருந்து இவ்வளவு கட்சிகளும், கொடிகளும் உருவான பிறகும், அந்தக் கட்சிக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கேள்வி என்னவோ, இனி யாருக்குப் பின்னால் அ.தி.மு.க என்பதுதான். இந்தக் கேள்விக்கு விடை எப்போது கிடைக்குமோ?