Published:Updated:

சேது சமுத்திர திட்டத்திற்கு மூடு விழா: அ.தி.மு.க அரசு மீது கருணாநிதி குற்றச்சாட்டு

சேது சமுத்திர திட்டத்திற்கு மூடு விழா: அ.தி.மு.க அரசு மீது கருணாநிதி குற்றச்சாட்டு
சேது சமுத்திர திட்டத்திற்கு மூடு விழா: அ.தி.மு.க அரசு மீது கருணாநிதி குற்றச்சாட்டு
சேது சமுத்திர திட்டத்திற்கு மூடு விழா: அ.தி.மு.க அரசு மீது கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் தி.மு.க.விற்கு பெயர் கிடைத்து விடும் என்பதால் அதற்கு மூடு விழா நடத்த அ.தி.மு.க அரசு காழ்ப்புணர்வோடு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1955ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளும் தொழில்நுட்ப ரீதியாக சேது சமுத்திர திட்டம் சாத்தியமானதுதான் என்றே நிரூபித்திருக்கின்றன. இதில் எள்ளளவு ஐயமும் யாருக்கும் இருந்தது இல்லை.
புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர், பா.ஜ.க.வைச் சேர்ந்த அருண் ஜெட்லி, 9.3.2001 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஆய்வு பொறுப்பு, 2001 அக்டோபரில் "நீரி" நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகபுரியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் "நீரி" என்ற சுற்றுச்சூழல் ஆய்வு மையம் அதனை ஆய்வு செய்து, எந்த கேடும் வராத, குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற, சிறந்த தடம் ஆறாம் வழித்தடமான, "ஆதாம் பாலம்" பகுதியில் அமைவதுதான் என்று கூறிவிட்டது.

இறுதியாக 31.3.2005 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகம் தனது முறையான நடைமுறைகளுக்கும், விரிவான ஆய்வுகளுக்கும் பிறகு, இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் ஒப்புதலை வழங்கியது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள் ஆகியவற்றின் மூலம் இந்த "ஆதாம் பாலம்" கடல் பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு கட்டுமான அமைப்பும் இருப்பதற்கான உருப்படியான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

நேற்றையதினம் (29.4.2013) தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "சேது சமுத்திர திட்டத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும், ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும், ராமர் பாலத்தைச் சேதப்படுத்தவோ, உடைக்கவோ கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறி, அ.தி.மு.க. அரசு இப்போது இத்திட்டத்தை எதிர்க்கிறது.

சேது திட்டம் நிறைவேற்றப்படுமானால், அதன் மூலம் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகும்; நாட்டின் அன்னிய செலாவணி வருவாய் அதிகரிக்கும்; கப்பல்களின் பயண நேரம் 30 மணி அளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது. கணிசமான எரிபொருள் சேமிப்பும், அன்னிய செலாவணி சேமிப்பும் ஏற்படும். கப்பல் வாடகை கட்டணத்தில் கணிசமான சேமிப்பு ஏற்படும்.

பயண நேரம் குறைவதால் கப்பல்கள் கூடுதல் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் கூடுதல் சரக்குகளைக் கையாள இயலும்; தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்கு பெட்டக போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்பு துறைமுகமாக மேம்படுத்தப்படும்; தூத்துக்குடி துறைமுகம் பெருமளவில் வளர்ச்சி அடையும்; கடற்படை மற்றும் கடலோரப்படை கப்பல்கள் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதிகளுக்கு அதிவிரைவில் செல்ல இயலும்.

##~~##
இதன் மூலம் இந்திய படைத்திறன் பெருமளவில் மேம்படுத்தப்படும்; ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டமைப்பு வளர்ச்சி பெருகும். சேது சமுத்திர திட்டம் பூர்த்தியடைந்து விட்டால் தி.மு.க.விற்கு பெரும் பெயர் வந்து விடுமே என்ற காரணத்தால், இந்த திட்டத்திற்காக 829 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கும் மூடு விழா நடத்த அ.தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என்பதுதான் உண்மை.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.