Published:Updated:

அமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன?

அமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
அமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன?

ஓவியம்: நெடுமாறன்

‘‘கலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்துகள் இருக்கின்றன. ஒன்று தி.மு.க. இன்னொன்று அழகிரி - ஸ்டாலின். இந்தச் சொத்து அந்தச் சொத்தைக் காப்பாற்ற வேண்டும். அந்தச் சொத்து இந்தச் சொத்தைக் காப்பாற்ற வேண்டும்.’’ - 2010-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமணத்தில் இப்படிச் சொன்னார் ரஜினிகாந்த். 

அமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன?

கருணாநிதி சமாதியின் மீது தூவப்பட்ட அஞ்சலி மலர்கள் கருகுவதற்கு முன்பே, ‘‘தி.மு.க-வின் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது’’ எனத் திரி கொளுத்திப் போட்டார் அழகிரி. எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி சொன்ன தீர்க்கதரிசனம் இப்போது நிதர்சனமாகியிருக்கிறது.  

ரஜினிகாந்த் இன்னொன்றையும் சொன்னார். ‘‘அழகிரியைவிட ஸ்டாலினை எனக்கு 30 வருடங்களுக்கு முன்பே நன்றாகத் தெரியும். என் பேச்சுலர் வாழ்க்கையில் கோபாலபுரம் ஏரியாவில் மாடி வீடு ஒன்றின் மொட்டை மாடியில் நான்கைந்து பேருடன் அரட்டையடிப்போம். இரவு 10 மணிக்கு மேல் ஒருவர், மூன்று நான்கு பேரோடு பேசிக்கொண்டு போவார். அது ஸ்டாலின். அதேபோல், பத்துப் பதினைந்து பேரோடு இன்னொருவர் போவார். அவர் அழகிரி. அப்போதிருந்தே அழகிரி பின்னால் கூட்டம் அதிகம் இருக்கும்’’ என்றார் ரஜினி. அவர் சொன்னது போலவே இன்று வரையிலும் அழகிரியைச் சுற்றிச் பரிவார வட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன.

தி.மு.க-வின் நம்பர் 2 பேராசிரியர் அன்பழகன் போலீஸ் பாதுகாப்போடு வலம் வந்ததெல்லாம் பலர் அறியாத செய்தி. காரணம் அழகிரியை அவர் கட்சியை விட்டு நீக்கியதுதான். அந்த அளவுக்கு அழகிரியின் ஃபிளாஷ்பேக் கொஞ்சம் கரடுமுரடானது. சேத்துப்பட்டு எம்.சி.சி. ஸ்கூலில் படித்த அழகிரி, திருமணம் முடிந்த கையோடு, முரசொலியைக் கவனித்துக்கொள்ள மதுரைக்குப் போனார். அன்றிலிருந்து மதுரைக்கு வந்தது சோதனை. ‘அழகிரியா... ஸ்டாலினா?’ என்கிற வாரிசுச் சண்டை 18 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. சென்னைக் கடற்கரையில் 2000-த்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ‘தி.மு.க-வின் அடுத்த வாரிசு ஸ்டாலின்’ எனக் கொம்பு சீவப்பட... கொதித்தார் அழகிரி. ‘‘தி.மு.க-விலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுங்குகிறேன்’’ என அதிரடியாக அறிவித்தார். அன்றைக்கு அழகிரி ஆதரவு மாவட்டச் செயலாளர்களாக இருந்த தளபதி, வேலுச்சாமி, மூர்த்தி ஆகியோர் முப்பெரும் விழாவைப் புறக்கணித்தனர். ‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, தொண்டர்களின் கட்டுக்கோப்பைக் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அழகிரியோடு தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என அறிவித்தார் அன்பழகன்.

மதுரையை எரித்த கண்ணகியைப்போலப் பொங்கினார் அழகிரி. பேருந்துகளை எரித்தார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். கல்வீச்சு, கலவரம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என மதுரையே பற்றியெறிந்தது. சுமார் ஒரு கோடி ரூபாய் சொத்துகள் சேதமடைந்தன. தி.மு.க. ஆளும் கட்சி என்பதால் போலீஸ் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. மதுரை திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து, தனது ஆதரவாளர் வட்டச் செயலாளர் முத்துவை மீட்டார் அழகிரி. இத்தனைக்கும் பிறகுதான் அன்பழகனே, காக்கிகள் புடைசூழ நடமாடினார். மதுரை மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தை, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனிடம் ஒப்படைத்தனர். நிலைமை சீராகவில்லை. ஆற்காடு வீராசாமியும் தயாளு அம்மாளும் மதுரைக்கு வந்து சமாதானம் பேசினார்கள். ஆனாலும், அழகிரியின் கொதிப்பு அடங்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன?

இந்தச் சம்பவங்கள் அரங்கேறிய சில மாதங்களிலேயே 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அழகிரியின் கோபம்  எதிரொலித்தது. தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக ‘அழகிரி பேரவை’ என்ற பெயரில் 12 தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களைக் களமிறக்கினார் அழகிரி. அதனால், மூத்த தலைகளே தோற்றுப்போனார்கள். வெறும் 708 ஓட்டுகள் வித்தியாசத்தில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மண்ணைக் கவ்வினார். தென் மாவட்டங்களில் மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி ஆகியவற்றில் ஓர் இடத்தில்கூட தி.மு.க-வால் ஜெயிக்க முடியவில்லை. திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் தலா ஓர் இடத்தில் மட்டுமே வென்றது. ஆட்சியையும் இழந்தது தி.மு.க.

யுத்த காண்டம் முடிந்து, சமாதான காண்டம் தொடங்கியது. ‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கும்’ என்ற அண்ணாவின் பொன்மொழியைத் துணைக்கு அழைத்துக்கொண்டார் கருணாநிதி. அழகிரியைக் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டார்கள். அதற்குள் வந்து சேர்ந்தது 2006 சட்டமன்றத் தேர்தல். கூட்டணி தயவில் ஆட்சியில் அமர்ந்தது தி.மு.க. அப்போது நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தலில் அழகிரி பயன்படுத்திய ‘விட்டமின் எம்’ ஃபார்முலா, தமிழகத் தேர்தல் வரலாற்றில் மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கியது. தென் மண்டல அமைப்புச் செயலாளரானார் அழகிரி. 2009 நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க. ஜெயிக்குமா என ஆரூடங்கள் கிளம்பிய நிலையில் அதிக இடங்களைத் தி.மு.க. கைப்பற்றியது. மதுரையில் அழகிரி வென்று மத்திய உர மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் ஆனார்.

ஐந்தாண்டுகள் பதவி சுகம் அனுபவிக்கும் வரையில் எந்தப் பிரச்னையுமில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்தபோது புகைச்சல் ஏற்பட்டது. ‘நீக்கப்பட்ட மதுரை மாவட்ட தி.மு.க-வினரைக் கட்சியில் சேர்க்க வேண்டும்’ எனப் போர்க்கொடி தூக்கினார் அழகிரி. விஜயகாந்துடன் கூட்டணி போட முயன்றுகொண்டிருந்தது தி.மு.க. ‘‘விஜயகாந்துடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி தான்’’ என கருணாநிதி சிக்னல் வேறு காட்டினார். அதைக் குலைக்கும் வகையில் விஜய்காந்தைத் தாக்கிப் பேசினார் அழகிரி. ‘‘விஜயகாந்தை ஒரு அரசியல்வாதி யாகவே நான் மதிக்கவில்லை. அவரிடம் அரசியல் நாகரிகமே இல்லை. டெல்லி சட்டசபைத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்டு வெறும் இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகள்தான் வாங்கியிருக்கிறார். அவருடன் சேர்ந்தால் கூட்டணி எப்படி உருப்படும்?’’ என்றார். அழகிரிக்குக் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. வேறுவழியில்லாமல் அழகிரியைக் கட்சியை விட்டே தற்காலிகமாக நீக்கியது தி.மு.க.

இப்படியான சூழலில்தான் 2014 ஜனவரி 24-ம் தேதி கோபாலபுரத்தில் அதிகாலையில் ஒரு பூகம்பம் நடந்தேறியது. அப்போது நடந்ததை, கருணாநிதி இப்படி விவரிக்கிறார், ‘‘ஸ்டாலினைப் பற்றி வெறுக்கத் தக்க வார்த்தைகளையெல்லாம் பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார் அழகிரி. என் இதயம் நின்றுவிடக் கூடிய ஒரு சொல்லைச் சொன்னார். ‘ஸ்டாலின் இன்னும் நான்கு மாதங்களுக்குள் செத்துவிடுவார்’ என உரத்த குரலில் கர்ஜித்தார்’’ என்றார் கருணாநிதி. இதன்பிறகு அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

பி.ஜே.பி. கூட்டணி, அ.தி.மு.க. ஆளுமை... இவற்றுக்குச் சமமாக ‘அழகிரி எதிர்ப்’பையும் தேர்தலில் எதிர்கொண்டது தி.மு.க.

தே.மு.தி.க. - பி.ஜே.பி கூட்டணி யினரும், காங்கிரஸ் வேட்பாளர் களும் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரினார்கள். ‘‘கருணாநிதி பொம்மலாட்ட பொம்மையாகி விட்டார். என்னை நீக்கியவர்களை மக்களே நீக்கிவிடுவார்கள்’’ என பதிலடி கொடுத்தார் அழகிரி. அவர் சொன்னதுபோல நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் இடத்தில்கூட  தி.மு.க. கூட்டணி ஜெயிக்கவில்லை. ‘‘தி.மு.க. மூன்றாவது இடத்துக்குப் போக வேண்டும்’’ எனச் சொல்லி உள்ளடி வேலைகள் பார்த்தார்கள் அழகிரி ஆதரவாளர்கள். தி.மு.க. தோல்வியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் அழகிரி ஆதரவாளர்கள். ‘‘அழகிரியை மறந்துவிட்டேன். அவரைப் பற்றிப் பேச விரும்பவில்லை. அப்படி ஒரு பிள்ளையே எனக்கில்லை. அழகிரி தி.மு.க-வில் இருந்தபோதும் இரண்டு மூன்று முறை தி.மு.க. தோல்வியைச் சந்தித்திருக்கிறது’’ எனச் சொன்னார் கருணாநிதி.

2014-ல் கட்டம் கட்டப்பட்ட அழகிரி இன்றுவரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. முதுமை காரணமாகக் கருணாநிதி ஓய்வில் இருந்தபோது, ‘‘தலைவர் அழைத்தால் தி.மு.க-வில் இணைவேன்’’ என அழகிரி காட்டிய சிக்னலை அறிவாலயம் கண்டுகொள்ளவில்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. டெபாசிட்டைப் பறிகொடுத்த போது ஸ்டாலினைக் கடுமையாகச் சீண்டினார் அழகிரி. அதன்பிறகு அழகிரி சில நேரங்களில் கோபாலபுரம் வந்து போனதோடு சரி. கருணாநிதி மறைவுக்குப் பிறகு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறார். அழகிரி இப்போது கட்சியில் உறுப்பினரே இல்லை. ஆனால் ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவராகவே ஆகிவிட்டார்.

2007-ல் திருநெல்வேலியில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டில் பேசிய கருணாநிதி, ‘‘இங்கு கூடியுள்ள தொண்டர் களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும். ஸ்டாலின் என்னவெல்லாம் ஆவார் என்பது அப்போது தெரிந்து கொள்வீர்கள்’’ என்றார். இப்படி கருணாநிதி சொன்ன ஒன்றரை ஆண்டுக்குப் பிறகுதான் ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்பட்டார். பிறகு பொரு ளாளர் ஆக்கப்பட்டார்.  “‘வாரிசுகளைத் தலைவராக்க தி.மு.க. ஒன்றும் சங்கரமடம் அல்ல’ என, கலைஞரே சொல்லியிருக்கிறாரே’’ என்றார் அழகிரி. இதன் பிறகுதான் ‘‘தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை முன்மொழிவேன்’’ என 2013 ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு மீடியாவிடம் சொன்னார் கருணாநிதி. ‘‘தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வரக் கூடாதா? வாய்ப்பு கிடைத்தால் ஸ்டாலின் பெயரை தி.மு.க. தலைவர் பதவிக்கு முன்மொழிவேன். தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு? கட்சியின் பொதுச் செயலாளரான அன்பழகன், ஏற்கெனவே ஸ்டாலின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். அன்பழகன் முன்மொழிந்த பின்னர் நான் வழிமொழிந்ததாகவே அர்த்தம்’’ என விளக்கமும் கொடுத்தார் கருணாநிதி.

அமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன?கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இனி, அழகிரி தி.மு.க.வின் உறுப்பினராகி, உட்கட்சித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது சந்தேகமே.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், ‘செப்டம்பர் 5-ம் தேதி அமைதிப்பேரணி’ என்று அறிவித்து, தன் அதிரடிகளை ஆரம்பித்திருக்கிறார் அழகிரி. இதை எப்படி ‘தலைவர்’ ஸ்டாலின் எதிர்கொள்ளப் போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால், தலைவர் பதவியை எல்லாம் தாண்டி, அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே சில அஜென்டாக்கள் இருக்கின்றன. இந்த இரண்டு குடும்பத்துக்குள் இருக்கும் டீலிங்குகளுக்கு அண்ணா உருவாக்கிய ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ பகடைக்காயாக உருண்டுகொண்டிருக்கிறது. தர்மபுரி பஸ் எரிப்பில் மூன்று மாணவிகளைத் தீக்கிரையாக்கிய அ.தி.மு.க-வுக்கு, தி.மு.க. கொஞ்சமும் சளைத்ததில்லை. தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பில் அப்பாவிகள் மூன்று பேர் கொல்லப்பட்ட பிறகு மூண்ட பகை, ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்து, தி.மு.க-வும் மாறன் சகோதரர்களும் கைகோத்துக்கொண்டார்கள். அப்படியான ‘சமரசங்கள்’ அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே முடிவுக்கு வரும்போது, ‘கண்கள் பனித்தது. இதயம் இனித்தது’ என இரண்டாவது முறை ரைமிங் பாடி, உடன்பிறப்புகள் காதில் மலர் வளையத்தை மாட்டக்கூடிய சூழலும் வரலாம், அல்லது, அழகிரி கடைசிவரை தி.மு.க-வில் இணையவே முடியாத சூழலும் நிலவலாம்.

தி.மு.க-வின் தலைவராக முடியாது எனத் தீர்க்கமாகத் தெரிந்த பிறகும் புதுக்கட்சி, அமைதிப்பேரணி என பிளான் செய்து கொண்டிருக்கிறார் அழகிரி. ‘`என்னைச் சேர்த்துக் கொள்வது கட்சிக்கு நல்லது... கட்சியைக் காப்பாற்றவே தி.மு.க-வில் இணைய விரும்புகிறேன்... என்னைக் கட்சியில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார்’’ என்றெல்லாம் நூல் விடுகிறார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஒரு சதவிகித ஓட்டு வித்தியாசத்தில் தோற்கக் காரணம் வைகோ. அவரின் மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்துடன் கூட்டணி போட்டது.  வைகோ-வைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட ஸ்டாலின்,  சகோதரன் அழகிரியை மட்டும் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை? காலம் எல்லாவற்றையும் காத்திருந்து பார்க்கப்போகிறது.

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி