Published:Updated:

`கூட்டணியில் வைகோ, திருமாவளவன் நீடிப்பார்களா?!' - ஸ்டாலின் மௌனம் ஏன்?

கூட்டணித் தொடர்பான வார்த்தைகளை வெளியிடுவதில் மிகுந்த கவனத்தோடு இருக்கிறார் ஸ்டாலின். அதேநேரம், `கம்யூனிஸ்ட்டுகள் இருந்தால் மைனஸ் வாக்குகள் வராது; பாசிட்டிவ் வாக்குகள்தான் வந்து சேரும்' எனவும் கணக்குப் போடுகிறார்.

`கூட்டணியில் வைகோ, திருமாவளவன் நீடிப்பார்களா?!' - ஸ்டாலின் மௌனம் ஏன்?
`கூட்டணியில் வைகோ, திருமாவளவன் நீடிப்பார்களா?!' - ஸ்டாலின் மௌனம் ஏன்?

தி.மு.கவின் தோழமைக் கட்சிகளான ம.தி.மு.கவும் வி.சி.கவும் கருத்துமோதலில் ஈடுபட்டு வருகின்றன. `கூட்டணிக்குள் கம்யூனிஸ்ட்டுகள் இருப்பதை விரும்புகிறார் ஸ்டாலின். ம.தி.மு.க, வி.சி.க இருப்பது மைனஸ்தான் என்ற விவாதமும் நடந்து வருகிறது' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

தி.மு.க கூட்டணி குறித்து துரைமுருகன் எழுப்பிய கேள்விகளால் ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திருமாவளவனையும் வைகோவையும் நேரடியாக அறிவாலயத்துக்கு வரவழைத்துப் பேசினார். `பொருளாளர் கூறிய வார்த்தைகளைப் பொருட்படுத்த வேண்டாம்' என ஸ்டாலின் கூறியதாகத் தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள், தனியார் ஊடகத்துக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், `என்னுடைய வீட்டில் பணிபுரிகிறவர்கள் எல்லாம் தலித்துகள்தான்' எனக் கூறியிருந்தார். `பண்ணை மனோபாவத்தில் பேசுகிறார் வைகோ. அவரிடமிருந்து இப்படியொரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை' எனக் கண்டனம் தெரிவித்திருந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு. இந்த மோதல்கள் அடுத்த சர்ச்சைக்கு வித்திடவே, `வைகோவின் கோபம் என் மீதா, இல்லை வன்னியரசு மீதா? எதிர்ப்பை நேரடியாகப் பதிவுசெய்வதை தவிர நான் யாரையும் தூண்டிவிடுவதில்லை. வைகோ பற்றி வன்னியரசு பதிவு செய்த கருத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல. சர்ச்சைக்குள்ளான அந்தப் பதிவை நீக்கிவிட்டு, தனது வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டார்' என விளக்கம் அளித்திருக்கிறார் திருமாவளவன். `வன்னியரசுவை எழுத வைத்தது யார்?' என நேற்று வைகோ எழுப்பிய கேள்விக்குப் பதிலாக, இந்த விளக்கத்தை அளித்தார் திருமா. 

``நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதற்குள் தி.மு.க கூட்டணிக்குள் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்ற கேள்விக்கு விதை போட்டுள்ளதாகவே இந்தச் சர்ச்சைகளைப் பார்க்க முடிகிறது," என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``துரைமுருகன் பேட்டியைத் தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. `நான் பிராக்டிகலாக உண்மையைச் சொன்னேன். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை' எனச் சிரித்தபடியே நிர்வாகிகளிடம் பேசினார் துரைமுருகன். தி.மு.க-வில் தற்போது இருக்கும் கூட்டணி அப்படியே தொடரும். தேர்தல் நெருக்கத்தில் வைகோவும் திருமாவளவனும் கூட்டணியில் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை வாழ்வா... சாவா பிரச்னையாகப் பார்க்கிறார் ஸ்டாலின். தன்னுடைய தலைமைக்கு விடப்பட்ட சவாலாகத்தான் இந்தத் தேர்தலைப் பார்க்கிறார்.

அப்படியிருக்கும்போது, `கூட்டணிக்குள் யார் யார் இருப்பது நன்மையைத் தரும்?' என்ற விவாதமும் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு கட்சியைப் பற்றிய பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்கள் அலசப்படுகின்றன. இதைப் பற்றிப் பேசிய சீனியர் ஒருவர், `வைகோவுக்கு ஒரு சதவிகித வாக்குகள்தான் இருக்கின்றன. அவர் இருந்தால் கூட்டணிக்குள் எந்த லாபமும் இல்லை. ம.தி.மு.கவுக்கு வரக்கூடிய பாசிட்டிவ் வாக்குகளைவிட நெகட்டிவ் வாக்குகள்தான் அதிகம். கடந்த தேர்தலில் 0.75 சதவிகித வாக்குகளை எடுத்திருந்தார் திருமாவளவன். இவர்கள் இருவரும் நமது அணிக்குள் இருப்பதில் எந்தவித லாபமும் இல்லை' எனக் கூறியிருக்கிறார். 

துரைமுருகன் கருத்தால் சர்ச்சை ஏற்பட்டபோது, திருமாவளவனையும் வைகோவையும் அறிவாலயத்துக்கே அழைத்துப் பேசினார் ஸ்டாலின். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, `தி.மு.க கூட்டணியில் வைகோவும் திருமாவளவனும் இருக்கிறார்களா?' என ஸ்டாலின் தெளிவுபடுத்தவில்லை. அவர் அப்படிச் சொல்ல வேண்டும் என இந்த இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் எதிர்பார்க்கின்றனர். கூட்டணி தொடர்பான வார்த்தைகளை வெளியிடுவதில் மிகுந்த கவனத்தோடு இருக்கிறார் ஸ்டாலின். அதேநேரம், `கம்யூனிஸ்ட்டுகள் இருந்தால் மைனஸ் வாக்குகள் வராது; பாசிட்டிவ் வாக்குகள்தான் வந்து சேரும்' எனவும் கணக்குப் போடுகிறார். `பா.ம.க உள்ளே வந்தால் வடமாவட்டங்களில் அதிக இடங்களில் வெல்ல முடியும்' என துரைமுருகன் விரும்பினார். இதற்கு ஆ.ராசா மூலமாக செக் வைத்தார் ஸ்டாலின். `அவர்கள் வந்தால் எங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு' என பா.ம.க, தே.மு.தி.கவுக்கு எதிராகப் பேட்டியளித்தார் ராசா. தி.மு.க அணிக்குள் ராமதாஸ் வருவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக், ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க அணியில் இருக்கின்றன. இவர்களைத் தவிர, கொங்கு மண்டலம், வடமாவட்டங்கள் என ஒவ்வொரு பகுதியிலிருந்தும் யாரையாவது ஒருவரைக் கூட்டணிக்குள் கணக்குக் காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். `அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்காக இருக்கும் நபர்களைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால், தேர்தலில் இரண்டாவது இடத்தை நோக்கித் தள்ளப்பட வேண்டியது வரும்' என்ற உண்மையையும் சீனியர்கள் உணர்ந்து வைத்துள்ளனர். அதனால்தான், கூட்டணி தொடர்பாக ஊடகங்களில் எந்தவித வார்த்தைகளையும் வெளிப்படுத்தாமல் மௌனம் காக்கிறார் ஸ்டாலின்" என்றார் விரிவாக.