
ரோடு போடுவதில் ஆர்வம்... தெரியுமா அந்த ரகசியம்?
#EnnaSeitharMP
#MyMPsScore
பொள்ளாச்சி ஏரியாவில் ஒரு கோடி தென்னை மரங்கள் இருக்கின்றன. இயற்கை வளங்களுக்குப் பஞ்சமில்லாத பொள்ளாச்சி தொகுதியில், அந்த மக்களும் வளமாக இருக்கிறார்களா? மக்களின் தேவைகளை எம்.பி மகேந்திரன் (அ.தி.மு.க) எப்படிக் கையாண்டார்? விசாரித்தோம்.
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியுள்ள தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், நான்கு கோவை மாவட்டத்திலும், இரண்டு திருப்பூர் மாவட்டத்திலும் இருக்கின்றன. இவற்றில் மடத்துக்குளம் தவிர மற்ற ஐந்திலும் 2016 தேர்தலில் அ.தி.மு.க ஜெயித்தது. இவற்றில் மூன்று, வி.ஐ.பி தொகுதிகள். தொண்டாமுத்தூர் தொகுதியின் எஸ்.பி.வேலுமணி, சகல செல்வாக்குகளும் நிறைந்த உள்ளாட்சித் துறை அமைச்சர். உடுமலை தொகுதி ராதாகிருஷ்ணன், கால்நடைத் துறை அமைச்சர். பொள்ளாச்சி தொகுதி ஜெயராமன், துணை சபாநாயகர். இவர்களில் வேலுமணியுடனும் ஜெயராமனுடனும் ராசியாக இருக்கிறார் மகேந்திரன். உடுமலைக்காரரான மகேந்திரனுக்கும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் கடும் கோஷ்டிப் பூசல். அரசியலில் இருவரும் அக்னி நட்சத்திரங்களாக மோதிக்கொள்கிறார்கள்.

தொகுதி மக்களில் பலரும் நம்மிடம் முறையிட்ட விஷயம்... ‘‘பத்துக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உடைந்துகிடக்கின்றன. அவற்றை முறையாகப் பராமரிக்காமல் விட்டிருப்பதால், இப்போதைய பெருமழையில் வந்த தண்ணீர் கேரளப் பகுதிக்குள் பாய்கிறது. அரிதாக வந்த மழைநீரை வீணாக்கிவிட்டோம்’’ என்பதுதான். விவசாயிகள் சங்கத்தினர் பலமுறை சொல்லியும், ஆளுங்கட்சி எம்.பி மகேந்திரனோ, பொதுப்பணித் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடியோ கண்டுகொள்ளவில்லை.
கிணத்துக்கடவு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆ.துரை, “பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின்கீழ் வரும் கால்வாயில் போதிய உபரிநீர் இருந்தும் கோதவாடி குளத்துக்குத் தண்ணீர் திறந்துவிடவில்லை. கண்துடைப்புக்காகக் கொஞ்சம் திறந்துவிட்டு, பிறகு நிறுத்திவிட்டார்கள். நொய்யல் ஆற்றில் புதிதாகக் கால்வாய் அமைத்து மழைக்காலத்தில் வரும் உபரிநீரை வெள்ளலூர் என்கிற இடத்திலிருந்து செட்டிபாளையம், காரைச்சேரி, வடசித்தூர் வழியாகக் கோதவாடி குளத்துக்குக் கொண்டுசெல்வதாக எம்.பி வாக்குறுதி கொடுத்தார். ஆனால், செய்யவில்லை. அதனால், உபரிநீர் வீணானது. தொண்டாமுத்தூரில் நொய்யல் ஆறு முழுவதும் சீரழிந்துகிடக்கிறது. இதனால், நிலத்தடி நீர் அசுத்தமாகிவிட்டது.
பொள்ளாச்சி தொகுதியில் தென்னை மட்டையை அடிப்படையாகக் கொண்டு நார், நார்க்கழிவு, மெத்தைகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 500-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. இந்தத் தொழிற்சாலை நடத்துகிறவர்களுக்குப் பிரச்னையாக இருப்பது, ஓரிரு தனியார் கம்பெனிகள். அவர்கள் மின்சாரம் தயாரிப்பதற்காக தென்னை மட்டைகளைச் சில சமயங்களில் எரிக்கின்றனர். அவர்கள் மட்டையை எரிப்பதை அரசு தடுக்க வேண்டும் என்பது தென்னைப் பொருள் உற்பத்தியாளர்களின் கோரிக்கை. அரசு தரப்பில் இதற்குத் தடை இருந்தும் அதிகாரிகள் சரியாக அமல்படுத்தவில்லை’’ என்றெல்லாம் பிரச்னைகளை அடுக்கினார்.
ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், ‘‘மத்திய அரசின் பெரிய திட்டங்கள் எதையும் மகேந்திரன் கொண்டு வரவில்லை. ஏற்கெனவே பிள்ளையார்சுழி போட்ட அகல ரயில்பாதைத் திட்டம், மகேந்திரன் பதவிக்காலத்தில் நிறைவுற்றது. தொகுதிக்கென்று புதிய ரயில் திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. கோவை - பொள்ளாச்சி ரயில் பாதையில் செட்டிப்பாளையம், கோவில்பாளையம் ஆகிய இரண்டு ஊர்களிலும் ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கேட்கிறார்கள். இதற்காக நாங்களும் போராட்டம் நடத்தினோம். எம்.பி தலையிட்டு எதையும் செய்யவில்லை. கோவை - பொள்ளாச்சி நான்குவழிச் சாலையில் கோவில்பாளையம், தாமரைக்குளம் போன்ற ஊர்களில் சாலையைக் கடப்பதற்கு வழியைச் சரியாகத் திட்டமிடவில்லை. மக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த சாலையில்
எல் அண்டு டி பைபாஸ் சந்திப்பில் நிச்சயமாக மேம்பாலம் தேவை. மலுமிச்சம்பட்டியிலும் மேம்பாலம் தேவை. இவை இல்லாததால், விபத்துகள் அதிகம் நடக்கின்றன. கிணத்துக்கடவு நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி ரோட்டுக்கு இந்தப்பக்கம் உள்ளது. அந்தப்பக்கம் மைதானம் இருக்கிறது. இதை சரிவர கணிக்காமல் ரோட்டின் குறுக்கே மேம்பாலம் கட்டிவிட்டனர். கிராஸ் பண்ண முடியாமல் மாணவர்கள் தவிக்கிறார்கள்’’ என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும் திருப்பூர் மாவட்டச் செயலாளருமான எஸ்.ஆர்.மதுசூதனன், ‘‘எம்.பி ஏன் ரோடு போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் தெரியுமா? நெடுஞ்சாலைகள் அமையும் ஏரியாவை ஒட்டி, பினாமி பெயரில் நிலம் வாங்கிப் போடுகிறார். இவரும், தொகுதியைச் சேர்ந்த ஓர் அமைச்சரும் இதே வேலையைச் செய்கிறார்கள். பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீர் திருட்டு நிறைய நடக்கிறது. அதைத் தடுக்கவேண்டிய பொறுப்பில் உள்ள எம்.பி-யின் உறவினர்கள்தான், ஏழுகுளம் என்கிற பகுதியில் தண்ணீரை எடுக்கிறார்கள். நாங்கள் போராட்டம் நடத்தியும் பயனில்லை’’ என்கிறார்.
எம்.பி-யான மகேந்திரனிடம் பேசியபோது, ‘‘டெல்லியில் பணியாற்றும் தமிழக கேடர் அதிகாரிகளை நான் அடிக்கடி சந்தித்து உதவிகளைக் கேட்பேன். அவர்கள் ஒத்துழைப்புடன், பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடைத்து. ஆனைமலை நல்லாறு திட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் ஏழு தடவை பேசினேன். மேல் அமராவதி திட்டம் பற்றிப் பேசி, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறேன். தொகுதிக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ரோடுகள், பாலங்கள் கொண்டு வந்திருக்கிறேன். கோவை புறவழிச்சாலை 1,000 கோடி ரூபாய் திட்டம். அதில் 70 சதவிகிதம் என் தொகுதிக்குள் வருகிறது. வேலை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. திண்டுக்கல் - பொள்ளாச்சி சாலை... மூவாயிரம் கோடி ரூபாய் திட்டம். நிலம் கையகப்படுத்தும் வேலை நடக்கிறது. எல் அண்டு டி பைபாஸ் சந்திப்பில் மேம்பாலம் வருவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அது தீர்ந்ததும், நிச்சயமாக மேம்பாலம் வரும். மலுமிச்சம்பட்டியில் மேம்பாலம் தேவையில்லை. அதற்குப் பதிலாக ஈச்சனாரி கோயில் முன்புறமும் சுந்தராபுரத்திலும் மேம்பாலங்கள் வர இருக்கின்றன. தொண்டாமுத்தூர் தொகுதியில் நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகளைக் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. பொள்ளாச்சி தொகுதியின் க்ளைமேட் நன்றாக இருக்கும். இதை அடிப்படையாக வைத்து ஐ.டி போன்ற தொழில் நிறுவனங்களைக் கொண்டுவருவதுதான் என் ஆசை. அதற்காகத்தான் தொகுதி உள் கட்டமைப்பை இந்த ஐந்து வருடங்களில் பலப்படுத்தினேன். என் சொந்தங்கள் தண்ணீர் திருடுவதாகச் சொல்வது எல்லாமே வதந்தி. அப்படி ஏதும் இல்லை. அதேபோல், புதிய ரோடு வரும் இடங்களில் பினாமி பெயரில் இடம் வாங்கியதாகச் சொல்வதும் அப்பட்டமான பொய்’’ என்றார்.
புதுப்புது ரோடுகள் ஆங்காங்கே தெரிந்தாலும், பாரம்பரியமான தென்னை விவசாயம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பல இடங்களில் நிறைய மரங்கள் காய்ந்து கிடப்பதைப் பார்க்கமுடிந்தது. தண்ணீர்ப் பிரச்னையால் தென்னைகள் காய்வது பல விவசாயிகளை வீதியில் நிறுத்தியிருக்கிறது. இதுதவிர, வெள்ளை ஈ தாக்குதலாலும் தென்னை மரங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன. மடத்துக்குளம் தொகுதியில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் நன்றாக இயங்கிய அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த சில வருடங்களாக செயல்படாமல் கிடக்கிறது.
வெள்ளலூரில் உள்ள மாநகராட்சி குப்பைமேடு பிரச்னையைத் தீர்க்க எம்.பி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். குப்பை மேடு அடிக்கடி தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்படுகிறதாம். ‘‘அதை இப்போதைக்கு மாற்றுவது கஷ்டம். நவீன முறையில் சரிசெய்ய ஏற்பாடு நடக்கிறது’’ என்கிறார் மகேந்திரன்.
பல்வேறு தரப்பில் விசாரித்தபோது, மகேந்திரனின் கை சுத்தம் என்று சொல்லுகிறார்கள். அ.தி.மு.க-வுக்கு பொள்ளாச்சி வரும் தேர்தலில் ப்ளஸ் ஆக அமையலாம்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதள பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- ஆர்.பி., எம்.புண்ணியமூர்த்தி
ஓவியம்: கார்த்திகேயன் மேடி
தொகுதி மேம்பாடு நிதி செலவழித்தல்!
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு எம்.பி-க்கும் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியை மகேந்திரன் பயன்படுத்திய விவரம் இங்கே...



மனுவே வரவில்லை!
எம்.பி அலுவலகத்துக்குத் தொகுதி மக்கள் அனுப்பும் கடிதங்களுக்கு என்ன ரெஸ்பான்ஸ் இருக்கிறது? டெஸ்ட் செய்து பார்த்தோம். பொள்ளாச்சி தொகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் என்பவர் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு விவகாரம் தொடர்பாக எம்.பி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசியபோது, ‘‘விரிவான கடிதத்தை எம்.பி-யின் வீட்டு முகவரிக்கு அனுப்புங்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து, டேனியல் ஜூலை 30-ம் தேதி கடிதத்தை அனுப்பிவிட்டார்.
ஆகஸ்ட் 16-ம் தேதி எம்.பி ஆபீஸின் செயல்பாடு எப்படியிருக்கிறது என அறிய நேரடியாகச் சென்றோம். உடுமலைப்பேட்டையில் எம்.பி மகேந்திரனுக்குச் சொந்தமான சி.எம் லாட்ஜ் உள்ளது. இதன் முதல் மாடியில் எம்.பி அலுவலகம் செயல்படுகிறது. ஒரு மீட்டிங் ஹால். நிறைய நாற்காலிகள் போட்டிருக்கிறார்கள். ஆறு உதவியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். சி.சி.டி.வி கேமராக்கள் எங்கும் இருக்க, அலுவலக செயல்பாட்டை எம்.பி தன் அறையில் இருந்து கண்காணிக்கிறார்.
டேனியல் கடிதம் பற்றி அங்கிருந்த உதவியாளர்களிடம் கேட்டபோது, கம்ப்யூட்டர் பதிவுகளைப் பார்த்துவிட்டு ‘‘கடிதம் வரவில்லை’’ என்றனர். உடனே, எம்.பி ஆபீஸிலிருந்து கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக வந்த ரசீது நகலைக் காட்டியதும் அங்கிருந்தவர்களின் முகம் மாறியது. அதன்பிறகு ஆகஸ்ட் 31-ம் தேதி நம்மிடம் பேசிய எம்.பி., ‘‘கடிதம் நேராக என் தோப்பு வீட்டுக்குப் போயிருக்கிறது. இப்போது என் கைக்குக் கிடைத்துவிட்டது. அதற்கான பதிலை டேனியலுக்கு அனுப்புகிறேன்’’ என்றார்.

எம்.பி எப்படி?
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியுள்ள தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 600 பேரைச் சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:
