Published:Updated:

`ஸ்ரீநகரில் 144 தடை; வீட்டுச் சிறையில் அரசியல் தலைவர்கள்!' - தொடர் பதற்றத்தில் ஜம்மு - காஷ்மீர்!

கலிலுல்லா.ச

`இது போன்ற கடினமான சூழலில் நான் என் மக்களுக்கு ஒன்றை மற்றும் உறுதியளிக்கிறேன். எது நடந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம்; எதிர்த்துப் போராடுவோம்”

பாதுகாப்புப் படை
பாதுகாப்புப் படை

`ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், அமர்நாத் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் விரைவாக வெளியேறவேண்டும்’ என்று இரண்டு நாள்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. `சுற்றுலாப்பயணிகள் வெளியேறவேண்டும்’ என்று மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார். இதையடுத்து அங்கிருந்த பக்தர்கள் அவசரமாக மாநிலத்தைவிட்டு வெளியேறினர். `காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆஸ்திரேலியா, ஜெர்மன் நாட்டு அரசுகள் தங்கள் நாட்டு மக்கள் காஷ்மீருக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். பாதுகாப்புக்காரணங்கள் என்று கூறி ஏராளமான ராணுவப் படைகள் காஷ்மீரில் குவிக்கப்பட்டனர்.

144 தடை உத்தரவு
144 தடை உத்தரவு

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு அதிக பதற்றம் ஏற்பட்டுள்ளது. `காஷ்மீர் மூன்றாக பிரிக்கப்படும்’ என்று பல்வேறு தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதனால் என்ன நடக்கப்போகிறது என்ற அச்சமும், பதற்றமும் கடந்த 3 நாள்களாகவே அம்மாநில மக்களிடையே அதிகரித்துள்ளது. காஷ்மீரில் நிலவும் பதற்றம் தொடர்பாக டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். அதேபோல ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று மாலை அவசரமாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிலையில் நள்ளிரவு முதல் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மெஹபூபா முஃப்தி
மெஹபூபா முஃப்தி
ANI

மறு உத்தரவு வரும்வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. காஷ்மீரில் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை காலவரையறையின்றி மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், `காஷ்மீர் மக்களே, என்ன நடக்கப்போகிறதென்பது தெரியவில்லை. ஆனால், கடவுள் என்ன திட்டமிட்டுள்ளாரோ அது நல்லதாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். நம்மால் இப்போது அதை உணரமுடியாவிட்டாலும், சந்தேகம் கொள்ளக்கூடாது. பாதுகாப்பாக இருங்கள்; அமைதியுடன் இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மெஹபூபா முஃப்தி, `இது போன்ற கடினமான சூழலில் நான் என் மக்களுக்கு ஒன்றை மற்றும் உறுதியளிக்கிறேன். எது நடந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம்; எதிர்த்து போராடுவோம். நம் உரிமையை நிலைநாட்ட பாடுபடுவோம்” என்று கூறியுள்ளார். ஜம்முவில் மொபைல், இன்டர்நெட் தொடர்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மத்திய அரசு தரப்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.