Published:Updated:

“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது!”

“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது!”

“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது!”

ன்னுடைய பெயருக்கு நியாயம் செய்வதையே வாழ்க்கையாக்கிக்கொண்டவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. அவரைச் சந்தித்தேன். தனது அரசியல் வரலாற்றையும், சமகால அரசியல் நிலையையும் எளிமையான வார்த்தைகளில் பகிர்ந்துகொண்டார். 

“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது!”

‘`விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி-யின் தாக்கத்தால், பள்ளிப் பருவத்திலேயே என்னுள் சுதந்திரத் தாகம் எழுந்துவிட்டது. வ.உ.சி-யைச் சந்திக்க வரும் தலைவர்கள் மற்றும் தூத்துக்குடித் துறைமுகம் வழியாகக் கொழும்பு செல்லும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்ததால், என் சுதந்திரப் போராட்ட உணர்வு இன்னும் அதிகமானது.

நாட்டு மக்களெல்லாம் ஒருமித்து, வெள்ளையர்களுக்கெதிராகப் போராட்டக் குரல் எழுப்பிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்திலும்கூட, கோயில் வழிபாடுகளில் சாதியத் தீண்டாமைகள் விலகாமலே இருந்துவந்தது. தெய்வ பக்தி அதிகம் கொண்டிருந்த நம் மக்களிடையேதான் சாதியக் கொடுமைகளும் அதிகமாக இருந்தன. இந்த முரண்கள் எல்லாம் எனக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதுகுறித்த சிந்தனைகள் ஏற்பட்டபிறகு, நிறைய படிக்க ஆரம்பித்தேன். பட்டறிவும் படிப்பறிவும் சேர்ந்துதான் என்னை முழு நாத்திகனாக மாற்றியது.

விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தபோதே, ஒரு கட்டத்தில் எனக்கு கம்யூனிஸக் கொள்கைகள்மீது ஈடுபாடு வந்தது. அதைத்தொடர்ந்து 1943 ஆம் ஆண்டு பொதுவுடைமைக் கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட என் தந்தை, ‘நீ கம்யூனிஸ்டாகக்கூட இருந்துகொள். ஆனால், கடவுளை மாத்திரம் இல்லைன்னு சொல்லிடாதே...’ என்றார். அப்படி ஒரு வைதீகக் குடும்பம். காரணம், அவர் ரொம்பப் படித்தவரில்லை.’’

‘`திராவிட இயக்கச் சிந்தனைகள் முழு எழுச்சி பெற்றிருந்த காலகட்டத்தில், பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் உங்களை இணைத்துக்கொள்ளக் காரணமாக இருந்தது எது?’’

‘`இரண்டு இயக்கங்களுமே மக்களை மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்டெடுத்து சுய மரியாதையுடன் வாழ வழிசெய்பவை. ஒரே நோக்கத்துக்காக வேறு வேறு வழிகளில் தங்களது போராட்டக் களத்தை அமைத்துக்கொண்டு செயல்படுபவை. கோயிலுக்குள் சென்று வழிபடக்கூட அனுமதிக்க மறுக்கும் கூட்டம்தான் அதே மக்களைக் கோயிலின் நிலத்தில் உழைக்கச் செய்து, உண்டு கொழுக்கிறார்கள். தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்ற அடிப்படை உண்மையைக்கூட உணர முடியாதவர்களாக உழன்றுகொண்டிருக்கும் அந்த எளிய மக்களை ஒன்று திரட்டுவதற்கான அமைப்பாக எனக்குக் கம்யூனிஸ இயக்கம் தெரிந்தது... நானும் கம்யூனிஸ்ட் ஆனேன்!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது!”

‘`இந்தியச் சூழலில், ஏழை - பணக்காரன் என்ற வர்க்கபேதத்தைக் காட்டிலும், வர்ணப் பிரிவினையான சாதிய ஏற்றத்தாழ்வுகள்தானே மக்களை பாதிக்கும் பிரச்னையாக இருக்கின்றன?’’

‘`இவை இரண்டுமே ஒன்றோடொன்று கலந்து, பிரிக்க முடியாததாக இருக்கின்றன. இரண்டுமே ஒழிக்கப்பட்டாக வேண்டும்.’’

‘`ஊழல் - மதவாதங்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிவரும் கம்யூனிஸ்டுகள் தேர்தல் சமயங்களில், அதே குற்றச்சாட்டுப் பின்னணி கொண்ட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து வாக்கு சேகரிப்பது எந்த விதத்தில் சரி?’’

‘`ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனியே கொள்கைகள் இருக்கின்றன. எப்பாடு பட்டாவது இந்தக் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அரசியல் கட்சிகளே இயங்குகின்றன. மத்திய - மாநில ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கக்கூடிய கொள்கைகளைக் கட்சிகளிடையே உருவாக்கி, அந்தப் பொதுக்கொள்கையை நிறைவேற்றுவதற்குக் கூட்டணி சேர்ந்து மக்களின் வாக்குகளைப் பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, ஒரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்றநிலையில், பல கட்சிகள் ஒன்றுசேர்ந்து தேர்தல் கூட்டணி அமைப்பதைச் சந்தர்ப்பவாதம் என்று சொல்ல முடியாது!’’

“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது!”`` ‘திராவிட அரசியல் சித்தாந்தங்களால் கவரப்படவில்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்’ என்ற தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்..?’’


‘‘அது உண்மை! ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி அவர் எழுதிய கவிதை புகழ்பெற்றது. அரசியல்வாதி என்றால் அதிகாரத்துக்கானவர் என்பது மட்டுமே அல்ல.... அறிவும் ஆற்றலும் கொண்டவராகவும் இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் கருணாநிதி. அவரது ஆட்சியில் நிர்வாக ரீதியான சில குறைபாடுகள் இருந்தாலும்கூட, பெரியாரின் தொண்டனாக சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு உள்ளிட்ட சமுதாயக் கொள்கைகளை நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொண்டு தனது இறுதி மூச்சுவரை அதற்காகப் போராடினார்.’’

 ‘`அ.தி.மு.க-வை அடுத்து தி.மு.க-வையும் பலமிழக்கச் செய்யும் முயற்சிகளை மத்திய பா.ஜ.க செய்துவருவதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறதே...?’’


‘`தமிழகத்தின் மீது மத்திய பா.ஜ.க-வுக்கு எப்போதுமே குறி இருந்துகொண்டே இருக்கிறது. அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இல்லை; தி.மு.க-விலும் கருணாநிதி இல்லை என்ற நிலை வந்துவிட்டதால், இந்த இடைவெளியைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வார்கள்தான். ஆனால், தி.மு.க-வைப் பொறுத்தவரையில், அவர்களுக்கென்று கொள்கையும் பாரம்பர்யமும் இருக்கிறது. அதனால், மத்திய பா.ஜ.க-வின் எண்ணம் பலிக்காது!’’

‘`ஜெயலலிதா இல்லாத சூழலில், இன்றைய அ.தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது?’’

“ ‘அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்க வேண்டும்; அதற்கான முயற்சியாக மத்திய அரசை எதிர்க்காமல் இருக்க வேண்டும்’ இதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் எண்ணம். இவர்களுக்கென்று என்ன கொள்கைகள் இருக்கின்றன?

காவிரி விவகாரத்தில் இத்தனை ஆண்டுகள் போராடியிருக்கிறோம்... இப்போது வந்துள்ள காவிரி நீர்கூட இன்னமும் கடைமடைக்குப் போகவில்லை. ‘நாங்கள் இவ்வளவு தண்ணீரைக் கொடுத்தும், கடலில்தானே கலக்க விடுகிறீர்கள்...’ என்று கர்நாடகாக்காரனே கேட்கிறான்.

ஆட்சியை வைத்துக் கொள்ளையடிக்க வேண்டும் என்றுதான் இவர்கள் திட்டமிடுகிறார்களே தவிர... எந்தவித மக்கள் நலத் திட்டங்களுக்கான முன்னேற்பாடுகளும் முயற்சிகளும் இல்லாத அரசாகவே இருக்கிறது அ.தி.மு.க அரசு!’’

‘`உங்கள் மனைவியின் மறைவுக்குப் பிறகு, இந்தத் தனிமைத் துயரை எப்படி எதிர்கொள்கிறீர்கள், பொழுதுபோக்கு என்ன?’’

‘`நிறைய வாசிக்கிறேன்; நல்ல இசை கேட்கிறேன். ‘நல்ல படம்... பாருங்கள்’ என்று எல்லோரும் சொல்லும்நிலையில், குறிப்பிட்ட திரைப்படங்களை மட்டும் பார்க்கிறேன்.’’

‘`சமீபத்தில் எந்தத் திரைப்படம் பார்த்தீர்கள்?’’

‘`கோயம்புத்தூரில், ‘காலா’ பார்த்தேன்.’’

த.கதிரவன் - படங்கள்: பா.காளிமுத்து

ஓவியம்: பிரேம் டாவின்ஸி