Published:Updated:

வாஜ்பாய் ஆவாரா மோடி?

வாஜ்பாய் ஆவாரா மோடி?
பிரீமியம் ஸ்டோரி
News
வாஜ்பாய் ஆவாரா மோடி?

வாஜ்பாய் ஆவாரா மோடி?

ட ந்த சில மாதங்களாகவே நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகளும் ஜனநாயக அமைப்புகளும் குற்றம் சாட்டிவரும் நிலையில், ஒருவேளை ‘இந்தியாவில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்படுமோ’ என்ற சந்தேகம் அறிவுஜீவிகள் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது.

வாஜ்பாய் ஆவாரா மோடி?

1975-ல் இந்திராகாந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்தது போன்ற சூழல் இப்போது சாத்தியமா?

*‘மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்புள்ளவர்கள்’ என்ற குற்றச்சாட்டில்தான் வரவர ராவ் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.  எல்கர் பரிஷத் என்ற இந்த நிகழ்ச்சியை மாவோயிஸ்ட்கள் நடத்தியதாக மகாராஷ்டிர போலீஸ் குற்றம் சாட்டுகிறது. இந்தச் சம்பவம் நடைபெற்ற புனே, சிவசேனா கட்சிக்கு வலுவான அடித்தளம் உள்ள பகுதி. பி.ஜே.பி-யும் சிவசேனாவும் சண்டையும் நட்புமான ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள். ‘மராத்தா’ அடையாளத்தை வைத்து அரசியல் செய்து, சிவசேனாவைத் தாண்டி அங்கு வளர்ந்து வருகிறது பி.ஜே.பி. இந்த வழக்கை அதற்கான கருவியாக பி.ஜே.பி பார்க்கிறது. 2019 மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க வேண்டும்; அதைத் தொடர்ந்து செப்டம்பரில் மகாராஷ்டிர சட்டமன்றத்துக்குத் தேர்தல். ‘இந்த இரண்டு தேர்தல்களுக்கும் சேர்த்துக் கூட்டணி பேசுவோம்’ என்கிறது சிவசேனா. ‘தனித்தனி டீலிங்தான். முதலில் நாடாளுமன்றத் தேர்தல். சட்டமன்றத்தை அப்புறம் பார்க்கலாம்’ என்கிறது பி.ஜே.பி. இந்த வாய்க்கால் தகராறு முடிவுக்கு வராத நிலையில்தான், இந்த வழக்கில் வேகம் காட்டுகிறது மகாராஷ்டிர மாநில பி.ஜே.பி அரசு.

*இந்திரா காந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்தபோது, அரசுக்கும் நீதித்துறைக்கும் பெரும் முரண்பாடு எழுந்திருந்தது. இந்திராவின் தேர்தல் வெற்றியையே செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. இப்போது சூழல் அப்படி இல்லை. அமித் ஷா தொடர்பான ஒரு வழக்கையும், ஐந்து பேர் கைது வழக்கையும் ஒப்பிட்டாலே புரியும். 

*இந்திரா அவசரநிலையைப் பிரகடனம் செய்தபோது இருந்த பொருளாதாரச் சூழல் வேறு. இப்போதுள்ள உலகமயச் சூழலில் அவசரநிலை போன்ற ஜனநாயகமற்ற சூழல் ஏற்பட்டால், புதிய முதலீடுகள் வராது; இங்கிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சர்வதேச நாடுகளும் அப்படிப்பட்ட ஒரு நிலையை விரும்பாது.

*இன்றைய சோஷியல் மீடியா யுகத்தில் செய்திகள் தணிக்கை, நெருக்கடி நிலை என்பதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று.

*அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையில் மீண்டும் ஜெயிப்பதற்கு பி.ஜே.பி-க்குத் ‘தேசபக்தி’ அரசியல் முழக்கம் தேவைப் படுகிறது. அறிவுஜீவிகள் கைது மட்டுமே அதற்கு உதவாது. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் அதற்கு உதவலாம். காஷ்மீர் மாநிலக் கூட்டணியிலிருந்து விலகி ஆட்சியைக் கவிழ்த்தது, பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் கணிசமான இடங்களை வென்று ஆட்சி அமைத்தது, அவர் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராகப் பேசிவந்தது ஆகியவற்றின் தொடர் விளைவுகளாக ஏதேனும் நடக்கலாம்.

*2014 தேர்தலில் கிடைத்தது போல தனிப்பெரும்பான்மை இம்முறை பி.ஜே.பி-க்குக் கிடைப்பது கடினம். அடுத்து கூட்டணி ஆட்சி அமைந்தால் கூட்டணியில் இருக்கும் சின்னச்சின்னக் கட்சிகளையும் அனுசரித்து வெற்றிகரமாக ஆட்சி நடத்திய வாஜ்பாய் போல மோடி ஆக முடியுமா என்பதுதான் பா.ஜ.க-வினருக்கும் இருக்கும் கேள்வி.

வாஜ்பாய் கால பி.ஜே.பி., எந்தக் கூட்டணிக் கட்சியையும் உடைத்ததில்லை. எந்த ஆட்சியையும் கவிழ்த்ததில்லை. ஆனால், மோடி ஆட்சியில் இருந்த இந்த ஐந்து ஆண்டுகளில்தான், பி.ஜே.பி-யின் நீண்டநாள் விசுவாசக் கூட்டணிக் கட்சிகளாகக் கருதப்பட்ட சிவசேனா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகின.

சென்ற தேர்தலைப்போல் ‘மோடி அலை’ வீசாத அடுத்த தேர்தல் எப்படி இருக்கப்போகிறது, மோடி எப்படிச் செயல்படப்போகிறார் என்பதில்தான் இருக்கிறது பா.ஜ.க-வின் எதிர்காலம்.

தி.முருகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz