Published:Updated:

கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!

கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!

கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!

‘பிரதமர் மோடியைக் கொல்ல சதிசெய்தார்கள்’ என்று  குற்றம் சாட்டப்பட்டு, எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமான வரவர ராவ், சுதா பரத்வாஜ், கெளதம் நவலகா, அருண் ஃபெரைரா,  வெர்னான் கான்சால்வஸ் ஆகியோர்  ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ராஞ்சியில் ஆதிவாசிக் குழந்தைகளுக்காகப் பள்ளி நடத்தும் ஸடான்ஸ் ஸ்வாமி, கோவாவைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் அம்பேத்கரின் உறவினருமான ஆனந்த் டெல்டும்டே ஆகியோரின் வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!‘பொதுவாக, ஒருவரைக் கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை’ என்று இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘`ஜனநாயகத்தில் எதிர்ப்புக் குரல் என்பது பிரஷர் குக்கரில் இருக்கும் சேஃப்டி வால்வ் போன்றது. அது இல்லையேல் குக்கரே வெடித்துவிடும்’’ என்று கூறி, கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலிலேயே வைத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஏற்கெனவே இந்துத்துவ அரசியலுக்கு எதிராகக் குரல்கொடுத்த எழுத்தாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே மேற்கண்டவர்கள்மீதான கைது நடவடிக்கையையும் பார்க்கமுடிகிறது.

‘பீமா கோரேகான்’ வன்முறைச் சம்பவத்தைத் தூண்டியதாக இந்த எழுத்தாளர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இந்தக் கலவரத்துக்காகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ள ‘சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்’ என்ற அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடே இதுவரை கைது செய்யப்படவில்லை. ‘மோடியைக் கொல்ல சதி’ என்று காவல்துறையால் வெளியிடப்படும் கடிதங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறிதான். ‘தலைமறைவாக இயங்கும் மாவோயிஸ்ட் இயக்கம் இவ்வளவு வெளிப்படையாகவா இந்தச் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுதுவார்கள்?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் நடுநிலையாளர்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வெளிப்படையாக இயங்கிவருபவர்கள், மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்கள். அவர்கள் மீது  அரசின் கைது நடவடிக்கைகள் மின்னல் வேகத்தில் பாய்கின்றன. ஆனால், எழுத்தாளர்கள், முற்போக்குவாதிகள் என பலரும் கொலை செய்யப்படுகின்றனர்; அடிப்படைவாத கருத்துக்களுடன் கூடிய போராட்டங்களில் வன்முறைகளும் விதைக்கப்படுகின்றன. ஆனால், இதில் தொடர்புடைய அமைப்புகள் அல்லது நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மட்டும் வேகம் காட்டப்படுவதில்லை.

கைதுசெய்யப்பட்டவர்களின் கருத்துகளில் உடன்படாதவர்கள் இருக்கலாம். ஆனால் எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்தவும் இயங்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதை மறுப்பது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கருத்துவேறுபாடுகளை மறந்து கருத்துச்சுதந்திரத்துக்காகக் கைகோப்போம்!

#UrbanNaxals #MeTooUrbanNaxal #IAmUrbanNaxal