Published:Updated:

`கனிமொழிக்கு நோ... உதயநிதிக்கு எஸ்!'  - அறிவாலய ஆட்டம் 

கட்சி தொடர்பான விஷயங்களைக் கூர்ந்து கவனிக்கும் உதயநிதி, கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை. இதனை சீனியர்கள் விரும்புகின்றனர்.

`கனிமொழிக்கு நோ... உதயநிதிக்கு எஸ்!'  - அறிவாலய ஆட்டம் 
`கனிமொழிக்கு நோ... உதயநிதிக்கு எஸ்!'  - அறிவாலய ஆட்டம் 

முரசொலி நாளிதழின் இரண்டு முழுப் பக்கங்களை ஆக்ரமித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு அவர் செய்த உதவிகளைப் பற்றித்தான் இவ்விரு பக்கங்களும் விவரிக்கின்றன. `கட்சியின் பொதுக்கூட்டம் உட்பட அனைத்திலும் உதயநிதியை முன்னிலைப்படுத்தத் தொடங்கிவிட்டனர்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் டெல்டா மாவட்டங்கள் நிலைகுலைந்துவிட்டன. கிராமங்களில் மின் இணைப்பை சீர்செய்வது, மின்கம்பங்களை மாற்றுவது, அடிப்படைக் கட்டமைப்புகளைச் சரிசெய்வது போன்ற பணிகளை அரசு இயந்திரம் செய்து வருகிறது. புயல் பாதிப்பின் கோரத்தை உணர்ந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினும், லாரி லாரியாக நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்தார். `அரசு செய்யும் எனக் காத்திருக்காமல் சீருடை அணியாத ராணுவமாக நாம் களத்தில் நிற்க வேண்டும்' என உடன்பிறப்புகளுக்கு அவர் கடிதமும் எழுதினார்.

அரசு, எதிர்க்கட்சிகள், தனியார் அமைப்புகள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் டெல்டா பகுதிகளில் ஓரளவுக்கு இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றன. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு விசிட் அடித்திருக்கிறார் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்து இன்று விரிவாக விவரித்துள்ள முரசொலி, உதயநிதியின் நிவாரண செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டியிருக்கிறது.

``தி.மு.க பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, அரசியல் தலைவர்கள் வரும்போது உடனிருப்பது என அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார் உதயநிதி. அவரது அரசியல் என்ட்ரிக்கு முழுவடிவம் கொடுத்திருக்கிறது டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம்" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` கட்சி தொடர்பான விஷயங்களைக் கூர்ந்து கவனிக்கும் உதயநிதி, கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை. இதை சீனியர்கள் விரும்புகின்றனர். அதேசமயம், உதயநிதி முன்னிறுத்தப்படுவதை கனிமொழி, அழகிரி உள்ளிட்டவர்கள் ரசிக்கவில்லை. புயல் பாதித்த பகுதிகளுக்கு10 டன் அரிசி, 5 டன் பருப்பு, 5 டன் சமையல் எண்ணெய் ஆகியவற்றை அனுப்பி வைத்தார் கனிமொழி. அந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார் கனிமொழி. இதற்குத் தலைமையிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறார் துர்கா ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாகத்தான் கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார். நேற்று நடந்த நிகழ்ச்சியிலும் இளைஞரணி சார்பாகத்தான் நிவாரண உதவிகளை வழங்கினார் உதயநிதி. இதற்கான முன்னோட்டம் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது" என்றவர், 

``தி.மு.க இளைஞரணி மாநிலச் செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதனைக் கொண்டு வந்தார் ஸ்டாலின். இந்தப் பதவியை குடும்பத்தில் உள்ள வேறு சிலர் எதிர்பார்த்திருந்தனர். அப்படி யாருக்கும் பதவி கிடைத்துவிடக் கூடாது என்பதால்தான் சாமிநாதன் முன்னிறுத்தப்பட்டார். அந்தச் சமயத்தில், `இளைஞரணி சார்பாக மாநாடு ஒன்றை நடத்த வேண்டும்' என நிர்வாகிகளிடம் பேசினார் ஸ்டாலின். `சாமிநாதனுக்காக இந்த மாநாடு நடத்தப்பட வாய்ப்பில்லை. இளைஞரணி பதவிக்கு உதயநிதி வரவிருக்கிறார். அதை மனதில் வைத்துதான் ஸ்டாலின் இப்படிச் சொல்கிறார்' என நிர்வாகிகள் பேசினர். தற்போது கட்சியின் நிகழ்ச்சிகளில் இளைஞரணி சார்பாக தலைகாட்டத் தொடங்கியிருப்பதை அதற்கான அறிகுறியாகப் பார்க்கலாம். இதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்" என்றார் நிதானமாக.