மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - ராஜேந்திரன் (விழுப்புரம்)

என்ன செய்தார் எம்.பி? - ராஜேந்திரன் (விழுப்புரம்)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - ராஜேந்திரன் (விழுப்புரம்)

“எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை!”

#EnnaSeitharMP
#MyMPsScore

‘‘உங்களையே சுற்றிச் சுற்றி வருவார். எந்த நேரத்திலும் அவரை அணுகலாம். அவரை வெற்றிபெறச் செய்யுங்கள். அவர் உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருவார்’’ என்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் ராஜேந்திரனுக்காக ஓட்டு கேட்டார் ஜெயலலிதா. அதை நம்பி ஓட்டுப் போட்டார்கள் மக்கள். ராஜேந்திரன் வெற்றி பெற்று நான்கரை ஆண்டுகள் ஓடிவிட்டன. எப்படி இருக்கிறது அவரது செயல்பாடுகள்? விழுப்புரம் தொகுதியைச் சுற்றி வந்தோம். ‘‘ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிப்படி, அவர் எளிதில் சந்திக்கக்கூடியவர். பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்திருந்தாலும் மிகப் பெரிய திட்டங்கள் என்று எதையும் செய்யவில்லை’’ என்பதுதான் மக்கள் சொல்லும் கசப்பான கள நிலவரம்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில், 2,797 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வென்ற தொகுதி இது. இதைத்  தக்கவைத்துக்கொள்ள, 2014-ல் வேட்பாளரை மாற்ற நினைத்தார் ஜெயலலிதா. அப்போதைய லோக்கல் அமைச்சர் மோகன், மாவட்டச் செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.பி., ஆகியோர் ஆசியுடன் ராஜேந்திரன் வேட்பாளர் ஆனார். அ.தி.மு.க விவசாய அணி மாவட்டச் செயலாளர், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் போன்ற பதவிகளில் இருந்தது அவருக்கு உதவியது.

என்ன செய்தார் எம்.பி? - ராஜேந்திரன் (விழுப்புரம்)

விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்தத் தொகுதியில் வருகின்றன. கரும்பு உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம்; நெல் விளைச்சலில் தஞ்சைக்கு அடுத்த இடம் என்று பெயரெடுத்துள்ள இந்தப் பகுதி, முழுக்க முழுக்க விவசாயிகள் நிறைந்தது. அதேசமயம், தேசிய அளவில் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று என மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய இங்கு, நிறைய எதிர்பார்ப்புகளுடன் ராஜேந்திரனைத் தேர்ந்தெடுத்தார்கள். மக்களை அவர் ஏமாற்றவில்லை என்றாலும், ‘‘அவரிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம்’’ என்பதுதான் தொகுதி மக்களின் ஒட்டுமொத்தக் குரலாக இருக்கிறது.

திண்டிவனத்தைச் சேர்ந்த ரயில் பயணி மேனகா, ‘‘சென்னை - திருச்சி மார்க்கத்தில்தான் இந்தத் தொகுதி உள்ளது. அருகில், பாண்டிச்சேரி உள்ளது. மேலும், இந்தத் தொகுதிக்குள்தான் திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையங்கள் வருகின்றன. இப்படி, இந்தத் தொகுதியின் முதுகெலும்பாக இருக்கும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டார். சென்னை - திருச்செந்தூர் ரயில், இரு மார்க்கங்களிலும் திண்டிவனத்தில் ஆரம்ப காலத்தில் நின்று சென்றது. பின்னர், நிற்கவில்லை. இந்தப் பிரச்னையைச் சொன்னோம். இப்போது அந்த ரயில் திண்டிவனத்தில் நின்று செல்கிறது. விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு காலை, மதியம், மாலை நேரங்களில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற இனியாவது அவர் முயற்சி எடுக்க வேண்டும்’’ என்றார்.

நந்தன் கால்வாய்ப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் அன்னியூர் சிவா, ‘‘விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்ட காலக் கனவு, நந்தன் கால்வாய்த் திட்டம். 36 ஏரிகளுக்கு நீர் வரும் பாதையைச் சரிசெய்வதுதான் நந்தன் கால்வாய் திட்டம். இதன்மூலம் செஞ்சி, விக்கிரவாண்டி பாசனப் பகுதிகள் பயனடையும். அண்ணா காலத்திலிருந்து சொல்லப்படும் திட்டம் இது. இதற்காக மத்திய அரசின் மூலம் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இதற்கிடையில், கால்வாய்களின் புனரமைப்புக்காக மாநில அரசு ரூ.14.5 கோடி ஒதுக்கியிருக்கிறது. எப்போதும் தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் ராஜேந்திரன் தொடர் முயற்சி எடுத்திருந்தால் நந்தன் கால்வாய்த் திட்டம் நிறைவேறியிருக்கும். கரும்பு, நெல் விவசாயிகளுக்காக எந்தத் திட்டத்தையும் அவர் கொண்டுவராதது வேதனை’’ என்று வருத்தப்பட்டார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான குலாம் மொய்தீன், ‘‘விழுப்புரம் நகரத்தில் மேம்பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாக நடக்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம், அறிவித்ததுடன் கிடக்கிறது. திண்டிவனம் சாரம் அரசு நூற்பாலையை மீண்டும் செயல்படுத்துவதாகத் தேர்தல் நேரத்தில் அவர் சொன்னார். சிப்காட் தொழிற்பேட்டையைத் தொடங்கியதுடன் சரி. அங்கு எதுவுமே வரவில்லை. விழுப்புரம் ரயில்வே ஜங்ஷனில் இருந்த லோகோ ஷெட் இடம் சும்மா கிடக்கிறது. அங்கு, புதிய ரயில்வே திட்டங்களைக் கொண்டுவந்திருக்கலாம். ஒரு தமிழக அமைச்சர், இரண்டு எம்.பி-க்கள் விழுப்புரத்தில் இருந்தும் இந்தப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை’’ என்றார்.

விக்கிரவாண்டி முன்னாள் எம்.எல்.ஏ ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட்), ‘‘தொகுதி நிதியை ராஜேந்திரன் தவறாகப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இல்லை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய விழுப்புரம் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் அவர் கொண்டு வரவில்லை. ஆளும்கட்சியாக இருந்தும் பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக் என எதையும் திறப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஈகோ இல்லாதவர், அடக்கமானவர், வம்பு தும்புகளுக்குப் போகாதவர் என்ற வகையில் ராஜேந்திரனின் செயல்பாடுகள் ஓகே-தான். இதுவரை இல்லாத வகையில் எம்.பி அலுவலகத்தை விழுப்புரத்தில் வைத்துள்ளார். இது, தொகுதியின் மையப்பகுதி என்பதால் அனைத்துப் பகுதி மக்களும் அவரை எளிதில் தொடர்புகொள்ள முடிகிறது’’ என்றார்.

ராஜேந்திரன் எம்.பி தத்தெடுத்துள்ள திருவக்கரை கிராமம், வளர்ச்சிப் பணிகளில் தமிழக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த ஜானகிராமன், ‘‘சாலை, குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகளைச் செய்து தந்துள்ளார். இங்குள்ள வக்ரகாளியம்மன் கோயிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி அன்று லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும், இந்தப் பகுதி மக்களுக்கும் பயன்பட கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. கிராமத் தத்தெடுப்பு என்பது பிரதமர் கனவு திட்டம் என்கிறார்கள். ஆனால், அதற்கு ஏற்ற வகையில் எங்கள் ஊர் ஒன்றும் சிங்கப்பூர் போல ஆகிவிடவில்லை. இந்த ஊரில் உள்ள சிற்பக்கலைத் தொழிலாளர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. இதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தத் தொகுதி எம்.பி-யை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. ஜெயலலிதா சொன்னார் என்பதற்காக அவருக்குத்தான் ஓட்டுப் போட்டேன். இனி, வேட்பாளர் யார் என்பதைப் பார்த்துத்தான் ஓட்டுப் போடுவேன்’’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த லலித்குமார், ‘‘ரயில் நிலையம், ஆங்கிலேயர் காலத்தில் உருவான விமானத் தளம் ஆகியவை அருகருகே இருந்தும், வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைக்காததால் உளுந்தூர்பேட்டை நகரம் காற்று வாங்குகிறது. எம்.பி ஆகி டெல்லி சென்றதுடன் தொகுதியை ராஜேந்திரன் மறந்துவிட்டார். பொது நிகழ்ச்சிகளிலும் அவரைக் காண முடியவில்லை. அவரின் கட்சியினரே அவரை அழைப்பதும் இல்லை; மதிப்பதும் இல்லை. போஸ்டர்களில்கூட அவர் பெயரைப் போடுவதில்லை. உள்கட்சி அரசியலால், அவரே சைலன்ட் மோடுக்குப் போய்விட்டார். உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை ஜங்ஷனாக்கும் அறிவிப்பு தூங்கிக்கொண்டிருக்கிறது. பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இதனால் 2,000-க்கு மேற்பட்ட தொழிலாளர்களும் பல ஆயிரம் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பு ஆலையையே மூடிய நிலையில், ஆலைக் கழிவுகளைப் பயன்படுத்திக் காகிதத் தொழிற்சாலை ஆரம்பிப்பது எப்படி?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, ராஜேந்திரன் எம்.பி-யைச் சந்திக்க அவருக்குத் தெரிவிக்காமலேயே விழுப்புரத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்றோம். கேட் திறந்தே இருந்தது. வரவேற்பறையில் நான்கைந்து பிளாஸ்டிக் சேர்கள்... எதிரில் சின்ன டேபிள், அதன் அருகே இன்னொரு பிளாஸ்டிக் சேர். வந்த விவரத்தைச் சொன்னதும் வீட்டுக்குள்ளிருந்து வந்தார் ராஜேந்திரன். பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து நம்மிடம் பேசினார். ‘‘தேர்தல் பிரசாரத்தில் புரட்சித் தலைவி அம்மா, ‘ராஜேந்திரனை வெற்றிபெறச் செய்யுங்கள். அவர் உங்களது தேவைகளை நிறைவேற்றித் தருவார்’ என்றுதான் வாக்கு சேகரித்தார். நான் எந்த வாக்குறுதியையும் தனியாகக் கொடுக்கவில்லை’’ என்றார்.

தொடர்ந்து அவர், ‘‘ரயில்வே திட்டங்கள் குறித்து சென்னை கோட்டத்திலும் திருச்சி கோட்டத்திலும் பேசியிருக்கிறேன். நெடுஞ்சாலைப் பணிகள் குறித்து மத்திய அமைச்சருக்குப் பல கடிதங்களைக் கொடுத்திருக்கிறேன். மிகப் பெரிய திட்டங்களை நிறைவேற்ற அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புத் தேவை. இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் நலத்திட்டங்களை அக்கறையுடன் நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளேன். குடிநீர், சாலை, பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள், மின்விளக்கு, சுடுகாட்டு வசதிகள் என்று அடிப்படை அத்தியாவசியப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல நலத்திட்டப்பணிகளைச் செய்துள்ளேன். புரட்சி தலைவி அம்மா கூறியபடி, சாதி மதங்களைக் கடந்து வேலை செய்கிறேன். பிரதமர் மருத்துவ நிவாரண நிதி, சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் ஃபவுண்டேஷன் மூலம் இரண்டரை லட்சம் திருமண உதவித் தொகை போன்றவற்றில் அக்கறை எடுத்து அந்த நிதியுதவிகளை பெற்றுக்கொடுக்கிறேன். எம்.பி தொகுதி நிதியை அள்ளி அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளிக் கொடுத்தாவது அடிப்படை வசதிகளுக்கே செலவிட்டுள்ளேன். ஏழை, எளிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி’’ என்று தனது பணிகளை விவரித்தார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், ஜெ.முருகன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

தொகுதியைத் தாண்டி சேவை!

வி
ழுப்புரம் தொகுதி எம்.பி-யாக இருந்தாலும், தன் தொகுதியைத் தாண்டி ஒரு மகத்தான சேவை செய்திருக்கிறார் ராஜேந்திரன். ‘‘சென்னையை அடுத்த மணலியில் இருக்கும் மத்திய அரசுக்குச் சொந்தமான மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம் நிதி நெருக்கடியால் மூடப்படும் நிலைக்கு வந்தது. அதுகுறித்து, மத்திய அமைச்சருடன் பேசி, அந்த ஆலையைத் தொடர்ந்து செயல்பட வைத்தேன். இப்போது அந்த நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. 2,500 தொழிலாளர்கள் வேலை பாதுகாக்கப்பட்டுள்ளது. கெமிக்கல் மற்றும் உரங்கள் நிலைக்குழு உறுப்பினராக இருப்பதால் இதைச் செய்ய முடிந்தது’’ என்கிறார் ராஜேந்திரன்.

என்ன செய்தார் எம்.பி? - ராஜேந்திரன் (விழுப்புரம்)

தொகுதி மேம்பாடு நிதி செலவழித்தல்!

நா
டாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு எம்.பி-க்கும் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியை ராஜேந்திரன் பயன்படுத்திய விவரம் இங்கே...

என்ன செய்தார் எம்.பி? - ராஜேந்திரன் (விழுப்புரம்)
என்ன செய்தார் எம்.பி? - ராஜேந்திரன் (விழுப்புரம்)
என்ன செய்தார் எம்.பி? - ராஜேந்திரன் (விழுப்புரம்)

எம்.பி எப்படி?

வி
ழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியுள்ள விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 625 பேரைச் சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

என்ன செய்தார் எம்.பி? - ராஜேந்திரன் (விழுப்புரம்)