Published:Updated:

`அரசு பார்வையில் யார் ஏழை?’ பாதிப்பில் சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள்..!

அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், அதிகாரிகள், தொழிலதிபர்கள் போன்றோர், அரிசி அட்டை வைத்திருந்தால் அவர்கள் ஏழை; சைக்கிளில் டீ விற்பவர், டீக்கடைக்காரர்கள், பலகாரம் சுட்டு விற்கும் பாட்டி போன்றோர், தேவைக்காகச் சர்க்கரை அட்டை வாங்கி வைத்திருந்தால் அவர்களெல்லாம் பணக்காரர்கள்.

`அரசு பார்வையில் யார் ஏழை?’ பாதிப்பில் சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள்..!
`அரசு பார்வையில் யார் ஏழை?’ பாதிப்பில் சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள்..!

லவசப் பொருள்களைப் போட்டு எரிப்பது போன்று, அரசுக்கு எதிராகக் காட்சி அமைத்ததற்கே, ‘சர்கார்’ பட பேனர்களைக் கிழித்து தீயிட்டு எரித்தனர் தமிழக ஆளுங்கட்சியினர். 'இதுபோன்ற இலவசங்கள்தான், சமூக மேம்பாட்டை உறுதி செய்கின்றன' என்று விவாதங்களிலும் திராவிடக் கட்சியினர், முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும், தமிழகத்திலுள்ள 10 லட்சம் குடும்பங்களுக்கு, எந்த இலவசமும், விலையில்லாப் பொருள்களும் இல்லை என்று புறக்கணிப்பது 21 ஆண்டுகளாகத் தொடர்வதைப் பற்றி யாருமே பேசத் தயாராக இல்லை. 

மாநிலம் முழுவதும் 2,01,87,466 குடும்ப அட்டைதாரர்களுக்கு 34,733 நியாயவிலைக் கடைகள் மூலமாக, மானிய விலையிலான உணவுப் பொருள்களைத் தமிழக அரசின் உணவு வழங்கல் துறை வழங்கி வருகிறது. இவற்றில் 10,09,115 குடும்ப அட்டைதாரர்கள், சர்க்கரை வாங்குவதற்கான அட்டை வைத்திருப்பவர்கள்.

இவர்களுக்குத்தான், அரசு வழங்கும் எந்த இலவசமும் தரப்படுவதில்லை. அதற்கான ஒரே காரணம், இவர்கள் எல்லோரும் மானிய விலையில் நியாயவிலைக் கடையில் சர்க்கரை வாங்குவதுதான். இவர்களைத் தவிர்த்து, மீதமுள்ள 1,91,78,351 குடும்பங்களுக்கும் அரசு தரும் எல்லா ‘இலவசங்களும்’ எந்த ஒரு மறுப்புமின்றி வழங்கப்படுகின்றன.

அரிசி அட்டை, அந்த்யோதய யோஜனா, காவல் அட்டைகள் போன்ற அட்டைகள் வைத்திருப்போருக்கு, மாதந்தோறும் 20 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ கோதுமை ஆகியவற்றுடன், பொங்கல்தோறும் இலவச சேலை, வேட்டி, பச்சரிசி, வெல்லம், கரும்பு போன்றவை அடங்கிய பொங்கல் பரிசும் கிடைக்கும். இவையெல்லாம் இலங்கை அகதிகளுக்கும் உண்டு.

அரசால் ஏற்கெனவே வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சி, விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் எல்லாமே இவர்கள் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், சர்க்கரை அட்டை வைத்திருந்தால், இலவச அரிசி உட்பட எதுவுமே கிடையாது. மானிய விலையில், மாதந்தோறும் 2 கிலோவுக்குப் பதிலாக கூடுதலாக 3 கிலோ சர்க்கரை மட்டும் வாங்கிக்கொள்ளலாம். 

2017-ம் ஆண்டு வரையிலும், அரிசி, சர்க்கரை என எந்த அட்டை வைத்திருந்தாலும், கிலோ 7 ரூபாய் 50 காசுக்கு, 5–10 கிலோ கோதுமை வழங்கப்பட்டது; இப்போது, காசு கொடுத்துக் கேட்டாலும், 'சர்க்கரை அட்டைதாரர்களுக்கு கோதுமைகூட தர முடியாது' என்பதே அரசின் உயரிய உணவுக் கொள்கை.

இதுபோன்ற பாரபட்சமும் ஓரவஞ்சனையும் தொடங்கியது, தி.மு.க ஆட்சியின்போது. 1997-ம் ஆண்டில், புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பம் வழங்கியபோது, சர்க்கரை அட்டை, அரிசி அட்டை என்று இரு வாய்ப்புகளைக் கொடுத்து, தேர்வு செய்யச் சொன்னார்கள். அரிசி அட்டைக்குத்தான், இதெல்லாம் உண்டு, சர்க்கரை அட்டைக்கு எதுவும் கிடையாது என்று அப்போது எதுவும் சொல்லப்படவில்லை. 

கூடுதலாகச் சர்க்கரை கிடைக்குமென்ற நம்பிக்கையில், சிலர் அரிசி வேண்டாம் என்ற முடிவுடன் சர்க்கரை அட்டை கேட்டு, விண்ணப்பித்தனர். அப்படியே அரசும் பிரித்துக் கொடுத்தது. புதிய அட்டையைக் கொடுத்த பின்புதான், சர்க்கரை அட்டைக் கேட்டவர்கள் எல்லோரும், பணக்காரர்கள் என்ற அரிய உண்மையை அரசு கண்டு பிடித்தது. 

அதாவது... அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், அதிகாரிகள், தொழிலதிபர்கள் போன்றோர், அரிசி அட்டை வைத்திருந்தால் அவர்கள் ஏழை; சைக்கிளில் டீ விற்பவர், டீக்கடைக்காரர்கள், பலகாரம் சுட்டு விற்கும் பாட்டி போன்றோர், தேவைக்காகச் சர்க்கரை அட்டை வாங்கி வைத்திருந்தால் அவர்களெல்லாம் பணக்காரர்கள். இதுதான் அந்த உண்மை.

பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பாரபட்சத்துக்கு, வரும் பொங்கலிலாவது முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். எல்லோரும் தமிழர்கள் தான், என்பதை இந்த அரசு உணர வேண்டும். இலவசத்தை எதிர்ப்போர் கூட, இந்தப் பாரபட்சத்தைக் கண்டிக்கின்றனர். 

சர்க்கரை அட்டை வைத்திருப்பவரெல்லாம், கோடீஸ்வரன் என்று கணக்குப் போடும் சர்க்காரை எப்படிப் பாராட்டுவதோ?