மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)

என்ன செய்தார் எம்.பி? - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)

ஆற்றுநீர் வீணா கடலுக்குப் போகுது... ஒரு குடம் தண்ணீர் 6 ரூபாய்!

#EnnaSeitharMP
#MyMPsScore

‘‘அம்மாவின் ஆசியுடன் நடக்கும் இந்த ஆட்சியில், பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’’  - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பொன்மொழிகள் நூலில் இடம்பெற்ற வாசகம் இது. இப்படி பெண்களை மதிக்கும்  அ.தி.மு.க-வில்தான், ‘என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, அன்வர்ராஜா எம்.பி-யின் மகன் நாசர் அலி ரூ.50 லட்சம் பணம் பறித்தார்’’ என்று புகார் கிளப்பினார் வானொலி தொகுப்பாளர் ரொபினா. நாசர் அலியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்த ரொபினா நடத்திய போராட்டம் வெற்றி பெறவில்லை. தன் மகனின் திருமணத்தை எப்படியாவது நடத்திவிட அன்வர்ராஜா காட்டிய வேகத்தை, தனக்கு வாக்களித்த ராமநாதபுரம் தொகுதி மக்களிடம் காட்டியிருக்கிறாரா?

நீண்ட கடற்கரை பகுதியைக் கொண்டிருப்பது போல, இந்தத் தொகுதியும் நீண்டு கிடக்கிறது. ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை என மூன்று மாவட்டங்களைத் தொட்டு நிற்கிறது ராமநாதபுரம் தொகுதி. மீன் பிடித்தலும், மிளகாய் விவசாயமும்தான் முக்கியத் தொழில். வறட்சியின் பிடியில் இருப்பதை ஆங்காங்கே காய்ந்து கிடக்கும் பனை மரங்களே சாட்சிகளாகச் சொல்கின்றன. ‘‘68 வயதாகும் அன்வர்ராஜா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். அவரின் மகன் ஒரு பெண்ணுடன் பழகிவிட்டு அதிகாரத்தின் துணையுடன் வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்’’ என இரண்டு விவகாரங்களையும் சொல்லித் தொகுதிவாசிகள் எரிச்சல் அடைகிறார்கள்.

என்ன செய்தார் எம்.பி? - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)

அ.தி.மு.க-வின் மூத்த அரசியல்வாதி அன்வர்ராஜா. ஒன்றிய சேர்மன், எம்.எல்.ஏ., அமைச்சர், எம்.பி., வக்ஃபு வாரியத் தலைவர் என அடுத்தடுத்து அரசியலில் வளர்ந்தவர். மாவட்டத்தில் அன்வர்ராஜாவுக்கு அரசியல்ரீதியாக டஃப் ஃபைட் கொடுத்துக்கொண்டிருப்பவர் அமைச்சர் மணிகண்டன். இருவரும் இரு துருவங்களாக இருப்பதால், மக்கள்நலத் திட்டங்கள் முடங்கிப் போயிருக்கின்றன. மாவட்டத்துக்கு வரவேண்டிய மருத்துவக் கல்லூரி, இருவரின் பாலிடிக்ஸில் சிக்கி வேறு மாவட்டத்துக்குச் சென்றுவிட்டதாம்.

‘‘மூக்கையூர், பாம்பன் குந்துகால் ஆகிய ஊர்களில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைய வேலைகள் நடைபெறுகின்றன. இலங்கை அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சி மடம் மீனவர்கள் ஐந்து பேரை மீட்டுவர முயற்சிகளை மேற்கொண்டார் அன்வர்ராஜா. விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகையாக மூன்று ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் பெற்றுத் தந்திருக்கிறார். இதயம், சிறுநீரகம், புற்றுநோய் சிகிச்சைக்காகப் பிரதமர் நிவாரண நிதியைப் பெற 78 பேருக்குப் பரிந்துரை செய்து 2.52 கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்திருக்கிறார்’’ என அன்வர்ராஜாவின் ப்ளஸ் பாயின்ட்களை அடுக்குகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

தண்ணீருக்காகக் குடத்துடன் மக்கள் அலைவதைத் தொகுதி முழுக்கப் பார்க்க முடிந்தது. ‘‘இங்கு குடிநீர்ப் பிரச்னையை ஓரளவு தீர்த்தது, நரிப்பையூரில் செயல்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். இது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பல இடங்களில் உடைந்து கிடக்கின்றன. இதனால் சாயல்குடி, கன்னிராஜபுரம், நரிப்பையூர் மற்றும் கடலாடி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஏராளமான கிராமங்களில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைச் சீரமைக்க அன்வர்ராஜா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இங்கு அதானி குழுமம் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பகுதிகளில் 25 லட்சம் சோலார் பேனல்களை நிறுவி, சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கிறது. நாள்தோறும் இந்த பேனல்களைச் சுத்தம் செய்வதற்காக லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். இதனால், தற்போது கிடைத்து வரும் கொஞ்ச நஞ்ச தண்ணீரும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது’’ எனப் புலம்புகிறார்கள் தொகுதிவாசிகள்.

மாவட்டத்தில் நிலவிவரும் வறட்சிக்கு, இயற்கை எரிவாயு எடுப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், மாவட்டத்தில் மேலும் 22 இடங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு. ‘எரிவாயு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே எம்.பி இருக்கிறார்’ எனக் குற்றச்சாட்டு படிக்கப்படுகிறது. ‘‘ராமேஸ்வரம், தேவிப்பட்டினம், திருப்புல்லாணி உள்ளிட்ட தலங்களை இணைத்து மத்திய அரசின் உதவியுடன் ஆன்மிகச் சுற்றுலாவைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை’’ என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆவியூர் கிராமத்தை அன்வர்ராஜா தத்தெடுத்துள்ளார். அங்கு போனோம். நிழற்குடை, எல்.இ.டி தெரு விளக்குகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடிப்படைத் தேவையான சுகாதார நிலையம்கூட ஏற்படுத்தப்படவில்லை. ஆவியூர் தவிர கீழத்தூவல் (முதுகுளத்தூர்), தினைக்குளம் (ராமநாதபுரம்) கிராமங்களை இவர் தத்தெடுத்துள்ளார். கீழத்தூவலில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் தத்தெடுப்பு விழா நடந்துள்ளது. முறையான சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் ஏதும் இல்லாத நிலையில் திருமண மண்டபம் கட்டும் பணிகள் மட்டும் துவக்கப்பட்டுள்ளன. கீழத்தூவல் கண்மாய் தூர்ந்து கிடக்கிறது. மத்திய அரசின் கழிப்பறைக் கட்டும் திட்டம் முழுமை பெறவில்லை. தினைக்குளத்தில் ரூ.3.50 கோடி செலவில் அடிப்படை பணிகள் மேற்கொள்ள ஆலோசனைக் கூட்டம் போட்டிருக்கிறார்கள். ஆனால், என்னென்ன பணிகள் செய்ய உள்ளனர் என்கிற விவரம் இல்லை. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ரூ.1.18 கோடி செலவிட்டும் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் பயன்படுத்த முடியாமல் வீணாக மூடிக் கிடக்கிறது. இதனால், சுமார் 300 மாணவர்களுக்கும் மரத்தடிதான் வகுப்பறையாக இருக்கிறது. ‘‘இதுபற்றி எம்.பி-யிடம் முறையிட்டும் பலனில்லை’’ என்கின்றனர் தினைக்குளம் ஜமாத் நிர்வாகிகள்.

‘‘மத்திய அரசால் வளர்ச்சிக்குரிய மாவட்டங்கள் பட்டியலில் விருதுநகர் இடம் பெற்றிருந்தபோதிலும், அது தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில்கூட எம்.பி பங்கேற்பதில்லை. கிடைக்க வேண்டிய பலன்களைப் பெற்றுத்தர எம்.பி முயற்சி செய்யவில்லை’’ எனக் குற்றம்சாட்டுகிறார் திருச்சுழி தி.முக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு. ‘‘சட்டமன்றத் தொகுதிவாரியாக எம்.பி அலுவலகம் அமைப்பேன் என்ற வாக்குறுதியை எம்.பி நிறைவேற்றவில்லை’’ என்ற புலம்பல் கேட்கிறது. ‘‘அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி மக்கள், ராமநாதபுரத்துக்கு 100 கி.மீ தூரம் பயணம் செய்து குறைகளை எம்.பி-யிடம் சொல்ல வேண்டிய நிலை உள்ளது’’ என்கிறார் புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கவிவர்மன். முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மலேசியா பாண்டியன், ‘‘எம்.பி-யைத் தொகுதியில் மட்டுமல்ல, அரசு விழாக்களில்கூட பார்க்க முடியவில்லை’’ என்றார். அறந்தாங்கியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், ஒகி புயலில் சிக்கிக் காணாமல் போயினர். அவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தைக்கூட சரிவரப் பெற்றுத் தரவில்லை என்கிற வருத்தம் மீனவர்களிடம் இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட பி.ஜே.பி துணைத் தலைவர் காந்தி, ‘‘இங்கே இருக்கிற பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குப் போகிறார்கள். அவர்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கலாம் அல்லவா? காவிரி, குண்டாறு, வைகை ஆகிய மூன்று ஆறுகளை இணைக்கும் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி பேசினார். மத்திய அரசு அதற்கு உதவ ரெடி. ஆனால், மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க அரசுதான் இன்னும் ரெடியாக வில்லை. இதனால், 130 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துவிடுகிறது. பெண்கள் தண்ணீருக்காகக் குடங்களைச் சுமந்தபடி அலைகிறார்கள். ஒரு குடம் தண்ணீர் ரூ.6-க்கு விற்பனையாகிறது’’ எனச் சொல்லி வருந்தினார்.

தேசிய நெடுஞ்சாலையான ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் குறுக்கே குறுகலான இடைவெளி அமைத்து, இரும்புத் தடுப்புகளை வைத்திருக்கிறார்கள் காவல் துறையினர். பஸ், லாரி, கனரக வாகனங்கள் உள்ளே புகுந்து வெளியேறச் சிரமப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி-க்கு எம்.பி போன் செய்தாலே, பிரச்னை சரியாகும். உச்சிப்புளி கடற்படைக்குச் சொந்தமான விமானத்தளம் உள்ளது. அதைப் பயணிகள் விமானங்கள் வந்து இறங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இதற்கெல்லாம் அன்வர் ராஜா என்ன பதில் சொல்கிறார்? ‘‘டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது, கடல் அட்டைகளைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. அதை நீக்கும்படி ஏழு முறை நாடாளுமன்றத்தில் பேசியும் பலனில்லை. கச்சத்தீவை மீட்கும் விஷயத்திலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட படகுகளுக்குப் பதிலாகப் புதிய படகுகளை வழங்க முதல்வர் எடப்பாடி யோசித்து வருகிறார். பத்து வருடங்களுக்கு முன், ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட கேந்த்ரிய வித்யாலயா பள்ளி, வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதற்காகச் சம்பந்தப்பட்ட துறையிடம் போராடிப் பார்த்தும் பலனில்லை. ஆழ்கடல் மீன்பிடிப்பைத் தீவிரப்படுத்த கூடுதல் நிதி கேட்டும், தமிழக மீனவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இலங்கை அரசின் புதிய சட்டத்தைத் தடுத்து நிறுத்தும்படியும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கேன். மீன்பிடிக் கொள்கை தொடர்பான மீனாகுமாரி ஆய்வறிக்கை மீனவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என நான் வலியுறுத்தியதால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்துக்குள் உள்ள ஆறுகளை இணைக்க நிதி வழங்கவும், முத்தலாக் தடை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளேன். எனது கோரிக்கையின் பயனாக மதுரை - பரமக்குடி நான்குவழிச் சாலைத் திட்டம் தனுஷ்கோடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் 1,300 கோடி ரூபாயில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என நீண்ட விளக்கம் அளித்தவரிடம் ‘‘இந்த வயதில் திருமணம் செய்துகொண்டதை...’’ என ஆரம்பித்ததுமே, ‘‘அது என் தனிப்பட்ட விவகாரம். என் மகன் விஷயத்தில் என் அரசியல் எதிரிகள் சூழ்ச்சி செய்யப் பார்த்தனர். வக்ஃபு வாரியத் தலைவராக நான் வரக்கூடாது என்பதற்காகவே சதி செய்தனர். அதையெல்லாம் மீறி, போட்டியின்றித் தலைவர் ஆனேன்’’ என்றார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- ஆர்.பி., இரா.மோகன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)

தொகுதி மேம்பாடு நிதி செலவழித்தல்!

நா
டாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு     எம்.பி-க்கும் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியை அன்வர்ராஜா பயன்படுத்திய விவரம் இங்கே...

என்ன செய்தார் எம்.பி? - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)
என்ன செய்தார் எம்.பி? - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)

எம்.பி ஆபீஸ்  எப்படி இருக்கு?

ன்வர்ராஜா வீட்டிலேயே எம்.பி-யின் அலுவலகம் இயங்குகிறது. நீண்ட காலமாகக் கிடப்பில் கிடக்கும் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடத் தேவை குறித்து அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான ‘விழுதுகள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உமாநாத் என்பவரை எம்.பி-க்கு மனு அனுப்ப வைத்தோம். அவர், ஜூலை 26-ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஒரு மாதம் கழிந்தும் பதில் வராதநிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி உமாநாத் நேரில் சென்று அங்கிருந்த உதவியாளர்களிடம் கேட்டார். ‘‘உங்கள் புகார், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எம்.பி பரிசீலித்த பிறகு உரிய பதில் அளிக்கப்படும்’’ என்றனர்.

என்ன செய்தார் எம்.பி? - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)

எம்.பி எப்படி?

ரா
மநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் அறந்தாங்கி, திருவாடானை, பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 596 பேரைச் சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

என்ன செய்தார் எம்.பி? - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)