Published:Updated:

“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”

“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”
பிரீமியம் ஸ்டோரி
“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”

“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”

“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”

“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”

Published:Updated:
“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”
பிரீமியம் ஸ்டோரி
“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”

ப்பாவின் மறைவு, அண்ணன் ஸ்டாலினின் புதிய பதவி, அழகிரியின் போர்க்கொடி... கனிமொழியிடம் கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. கேட்டேன். அப்பா இழப்புக்குப் பிறகு முதன்முதலாக விகடனுக்காக மனம் விட்டுப் பேசினார்.

“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”

“உங்கள் அப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது உங்கள் மகன் ஆதித்யன் ஓடிச் சென்று அங்கே இருந்த அதிகாரி தினேஷ் பொன்ராஜிடம் பேனாவை வாங்கி, அதையும் அடக்கம் செய்யப்பட்ட குழிக்குள் வைத்தாரே?”

“ஆமாம். கலைஞரையும் எழுத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஆதித்யன் அந்தப் பரபரப்பான சுழலில் அதிகாரியிடம் பேனாவை வாங்கித் தன் தாத்தாவோடு சேர்த்தான். அப்பாவும் ஆதித்யனும் எப்போதுமே மிக நெருக்கமாக இருப்பார்கள். அவனோடு பேசாமல், விளையாடாமல் தலைவர் இரவு உறங்கச்செல்லமாட்டார். அவனும் தனக்குப் பிடித்த விஷயங்களை எல்லாம் அவரிடம் சொல்லிக்கொண்டிருப்பான். அடுத்த தலைமுறைகளின் இதயங்களையும் வென்றவர் கலைஞர் என்பதற்கு இது ஓர் உதாரணம்!”

“கருணாநிதியின் கருத்துகள் இன்றைக்கு எந்தளவுக்குத் தேவை என்று நினைக்கிறீர்கள்?”

“பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை, ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற ஒற்றைத் தன்மைக்குள் அடைக்க முயலும் போக்குகள் தீவிரமடைந்துள்ளன. சமீபத்தில்கூட மகாராஷ்டிர  பி.ஜே.பி எம்.எல்.ஏ ராம் கதம் என்பவர், ‘ஒரு பெண்ணை ஆணுக்குப் பிடித்துப் போய்விட்டால், அந்தப் பெண்ணைத் தூக்கி வந்து, அவனுக்குத் திருமணம் செய்து வைப்பேன்’ எனப் பேசியுள்ளார். பெண்களை உடைமையாக மட்டுமே பார்க்கும் எண்ணம்தான் அவர்களிடம் உள்ளது. மதவாதம், சாதிவெறி, ஆணாதிக்கம், மாநில உரிமைகள் மறுப்பு... இவைதாம் இந்துத்துவம் முன்வைக்கும் அரசியல்.

மொழி உரிமை, மாநில உரிமை, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அத்தனையும் மீட்க, பாதுகாக்க இன்றைக்கு இந்திய அளவில் கலைஞரின் கருத்துகள், திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள்  தேவைப்படுகின்றன. தனது ஆட்சிக்காலத்தில் மேற்கண்டவற்றை, முடிந்தவரை சாத்தியப்படுத்தியவர் கலைஞர்.”

“ ‘ஒழுக்கமாக இருக்கச் சொல்கிறேன். அதை சர்வாதிகாரம் என்று சொன்னால் எப்படி’ என்கிறாரே மோடி?”

“இன்றைக்கு டாலருக்கும் ரூபாய்க்கும் உள்ள வேறுபாடு என்ன? பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது. வேலைவாய்ப்பின்மையால் இந்திய இளைஞர்கள் தவிக்கின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சர்வதேசப் பத்திரிகைகளே விமர்சிக்கின்றன. ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? ‘பாசிச பா.ஜ.க ஒழிக’ என்று முழக்கமிட்டதற்காக, மாணவி சோபியாவைக் கைது செய்கிறார்கள்.  எழுத்தாளர்கள் கொல்லப்படுகிறார்கள்; கைது செய்யப்படுகிறார்கள். கருத்து, எழுத்து, பேச்சுச் சுதந்திரம் இல்லாத சூழல் நிலவுகிறது. ஆட்சியை விமர்சித்தாலே கொடும் சட்டம் பாய்கிறது. சகிப்புணர்வே அற்றுப்போன சர்வாதிகாரமாகத்தான் மோடியின் ஆட்சி இருக்கிறது. எமர்ஜென்சியைவிடவும் மோசமான அடக்குமுறைகளை நாட்டு மக்கள் சந்தித்துவருகின்றனர். உண்மையில் உங்கள் ஆட்சி அதிகாரத்தை எல்லாம், மக்களின் துயரங்களைத் தீர்க்கத் திருப்புங்கள். எங்களுக்கு ஒழுக்கம் சொல்லித்தராதீர்கள்.”

“தற்போதைய அ.தி.மு.க ஆட்சி குறித்து..?”


“ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது  எதிர்த்த நீட் தேர்வைக்கூட, தற்போது அனுமதித்துவிட்டார்கள். வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி என எதையும் இதுவரை பேசி வாங்கவில்லை. தமிழையும்,  தமிழ்நாட்டையும் காப்பதற்கு  மாறாக எல்லாவற்றுக்குமே மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாகத்தான் இவர்கள் இங்கே ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் பி.ஜே.பி தலைவர் சொன்னதும், மாணவி சோபியாவைக் கைது செய்கிறார்கள். அதேநேரம் பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாகப் பேசியவர், தந்தை பெரியார் சிலையைத் தகர்க்கணும்  என்று பேசியவர்களையெல்லாம் விட்டுவிட்டார்கள்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”

“பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். ஆனால் அங்கேகூட தமிழிசை என்ற பெண், தலைவராக இருக்கிறார். ஆனால் பெண்களுக்குச் சொத்துரிமை, உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொடுத்த தி.மு.க-வில் அப்படியான நிலை இல்லையே?”

 “திறமை, உழைப்பு, இருந்தால் யாரும் கட்சிக்குள் தலைமைப் பொறுப்புக்கு வர முடியும். எங்களைப் பொறுத்தவரை, பெண்கள் முதலில் பெருமளவில் கட்சிப் பொறுப்புகளுக்கும் ஆட்சிப் பொறுப்புகளுக்கும் வரவேண்டும். மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்களாகப் பெண்கள் வர வேண்டும்.”

“ ‘துணைப் பொதுச்செயலாளர் பதவியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்’ என்று சொல்லப்படுகிறதே?”

“நான் வகிக்கும் மகளிரணி மாநிலச் செயலாளர் பொறுப்பே எனக்கு மன நிறைவைத் தருகிறது. பெண்கள் பாதுகாப்பு, பெண்களின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கும் அரசியலைத் தீவிரப்படுத்த எனக்கு வசதியான களமாக இருக்கிறது மகளிரணி. நான் ஏன் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்பட வேண்டும்?”

“நீங்கள் தமிழகத்தில் அதிகாரத்திற்கு வருவதை உங்கள் குடும்ப உறுப்பினர்களே விரும்புவதில்லை. அதனால்தான் ‘கனிமொழிக்கு டெல்லி அரசியல், ஸ்டாலினுக்குத் தமிழ்நாட்டு அரசியல்’ என்று சுமுகமாகப் பிரித்துக்கொண்டார்கள்’ என்று பேசப்படுகிறதே?”


 “ஏங்க இது என்ன சொத்தா, பாகம் பிரிச்சுக்க? டெல்லியில் ஒரு சூழல் உருவானால்,  அதை எப்படி அணுகவேண்டும், அந்தப் பிரச்னையை எப்படி சரி செய்யவேண்டும் என்பது தலைவராக, தளபதிக்கு நன்றாகத் தெரியும். அதனால் ‘இவங்களுக்குள்ள பிரிச்சுக்கிட்டாங்க’ என்று பேசுவதெல்லாம் நகைப்புக்குரியதே. மேலும், நான் எம்.பி-யாக, மகளிரணிச் செயலாளராக இருக்கிறேன். இதை முக்கியப் பொறுப்பு இல்லை, எனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்ல முடியுமா, என்ன?”

“உங்களுக்கும் மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கும் முரண்பாடு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

“வெளியே இருந்து பார்ப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் திரித்து விடலாம். ஆனால் எங்களுக்குள் எந்தவிதப் பிளவுகளோ, கருத்து வேறுபாடுகளோ இல்லை. தளபதிக்கும் எனக்குமான உறவு மிகவும் அழகான ஒன்று. அவர் போராடியே  இந்த உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளார்.”
 
“தலைவராக... கருணாநிதி - மு.க ஸ்டாலின்... ஒப்பிடுங்கள்.”


“இரண்டு பேரையும்  ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறு. கலைஞர் வாழ்ந்த காலம், அவர் அரசியல் களத்துக்குள்  வந்த பின்புலம் என எல்லாமே வேறானது. தளபதி அரசியலுக்கு வந்த சூழல் வேறு. தலைவர் கலைஞரே ‘நான் அரசியலுக்கு அழைத்து வரவில்லை, மிசா கொடுமைதான் மு.க. ஸ்டாலினை அரசியலுக்கு அழைத்து வந்தது’ என்றார். இருவரும் சந்திக்கக்கூடிய பிரச்னைகளும் வெவ்வேறு வகையிலானவை. எனவே இரண்டு தலைவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.”

“தி.மு.க-வின் புதிய தலைவரிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன, அவர் சந்திக்கவிருக்கும் சவால்களாக நீங்கள் கருதுவது என்ன?”

“தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எப்படிக் கொண்டு செல்லப்போகிறார், இளைய தலைமுறையின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு  சமூகநீதிப் பாதையிலிருந்து பிறழாமல் கழகத்தை எப்படிக் கொண்டு செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்புதான் தலைவர்மீது இருக்கிறது. அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திக்காட்டக்கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது என்பதால்தான் அவரைத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளோம். கட்சியைத் தாண்டியும் தமிழகத்துக்குப் பணியாற்ற வேண்டிய பொறுப்பு தலைவருக்கு இருக்கிறது.  இன்று தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. அதைச் சரி செய்ய தமிழ்நாட்டை மீட்க வேண்டும். நிச்சயம் தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் வளம் பெறும்.”

“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”

“மு.க.அழகிரியின் நடவடிக்கைகள், சமீபத்திய பேரணி குறித்து?”

“கருத்து சொல்ல விரும்பவில்லை.”

“நீண்ட காலமாகவே இலக்கியவாதி கனிமொழியைப் பார்க்க முடிவதில்லையே? அவர் எப்போது வெளிப்படுவார்?”

“மறுபடியும் எழுதவேண்டும். விரைவில் எழுதத் தொடங்குவேன்.”

“நவீன இலக்கியவாதியான நீங்கள், உங்கள் அப்பாவின் எழுத்துகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?”

“இலக்கியம் என்பதற்கு ஓர் இலக்கு உண்டு. தலைவருடைய கவிதைகளோ, திரைப்பட வசனங்களோ, கட்டுரைகளோ மாற்றத்தை மையமாகக் கொண்டு இயங்கிய விசை. காலச் சூழலுக்கேற்ப அந்த விசை, பல பரிமாணங்களை எடுத்தாலும், அது தமது இலக்கை விட்டு விலகியதில்லை. சமூக விழிப்பு உணர்வு, பகுத்தறிவின் வழித்தடமாக முன்வைக்கப்பட்டதே கலைஞரின் எழுத்துகளும், படைப்புகளும். எனவே அவர் எழுத்துகளை எந்தக் காலத்திலும் மறுதலித்துவிட முடியாது.”

“தமிழுக்காகத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவர் கருணாநிதி. ஆனால் இன்று அப்படி வீரியமான தி.மு.க-வைப் பார்க்க முடியவில்லையே? தி.மு.க-வின் இன்றைய போராட்டங்கள் வெறும் அடையாளப் போராட்டங்களாகச் சுருங்கிவிட்டதே?”

“இது அபத்தமான விமர்சனம். கட்சியின் மாணவர், இளைஞர் அமைப்புகள் தொடர் போராட்டம், பேரணி என ஒட்டுமொத்தக் கட்சியே, நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியது தி.மு.க. அது மக்கள் போராட்டமாக இருந்ததால் அதற்கு மதிப்பளித்து மக்களைச் சந்தித்தார் தளபதி ஸ்டாலின்.

மீத்தேன் எதிர்ப்பு,  ஜல்லிக்கட்டு ஆதரவு, சமஸ்கிருத, இந்தித் திணிப்பு-க்கு எதிராக என மக்களின் தேவையை உணர்ந்து, இன்றும் காத்திரமாகவும், உறுதியாகவும் போராடிக்கொண்டிருக்கிறது தி.மு.க. எனவே எங்கள் உடன்பிறப்புகளின் உணர்வைச் சிறுமைப்படுத்தாதீர்கள். வரும் 18ஆம் தேதிகூட இந்த அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்களை எதிர்த்து தளபதி அவர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.”

“பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு, ஆளுநருக்குப் பரிந்துரை செய்திருக்கிறதே?”


“எல்லோரையுமே மகிழ்விக்கக்கூடிய செய்தி இது.  குறிப்பாக, தன் மகன் பேரறிவாளனை மீட்பதற்கான அற்புதம்மாளின் போராட்டம் அளப்பரியது. இந்த விடுதலைக்கான பரிந்துரை, அந்தத் தாயின் போராட்டத்துக்கு நாம் தரும் உயர்ந்த மதிப்பாக இருக்கும்.”

“தன்பால் பாலுறவு (LGBT) கொள்வதைக் குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து..?”

“இது பல ஆண்டுகளாக இருந்துவந்த  பிரச்னைக்கான தீர்வாக உள்ளது. சட்டங்களால் மட்டுமே தனிமனித வாழ்வின் முடிவுகளைத் தீர்மானித்துவிட முடியாது. தனி மனித உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். யாரின் நியாயமான  உணர்வுகளையும் நாம் சட்டங்களால் நொறுக்கிவிடக் கூடாது. இந்த நிலையில் இதைப் புரிந்துகொண்டு, உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.”

சே.த இளங்கோவன் - படங்கள்: கே.ராஜசேகரன்