பிரீமியம் ஸ்டோரி

(கருணாநிதி போலவே இப்போது தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினும் ‘முரசொலி’ நாளிதழில் கடிதம் எழுத ஆரம்பித்திருக்கிறார். இதற்கு முன்னோட்டமாக அவர் முரசொலி நாளிதழில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2006 ஜனவரி 1-ம் தேதி முரசொலியில் அவர் எழுதிய முதல் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)  

முரசொலி இதழில் நான் எழுதும் முதல் கட்டுரையின் மூலமாக உங்களைச் சந்திக்கின்ற இந்நாள் என் வாழ்வில் ஒரு பொன்னாள். இக் கட்டுரையின் மூலம் கழகக் குடும்பத்தின் இல்லங்களுக்குள் - இதயங்களுக்குள் நுழைகின்ற வாய்ப்பினைப் பெற்றுள்ளேன்.

போக்குவரத்து வசதிகளே பெரிதும் இல்லாத அந்தக் காலத்திலேயே, தமிழ்நாட்டிலுள்ள குக்கிராமங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சமூகக் கொடுமைகளை ஒழித்திட, பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பிட, தள்ளாத வயதிலும் தளராது, அயராது பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் பகுத்தறிவுத் தந்தை பெரியார்; தந்தை பெரியாரின் பெரும்படையின் போர்ப்படைத் தளபதியாகக் களத்தில் இறங்கி, கருத்துப்போர் நடத்தி, தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் ஆட்சியைத் தோற்றுவித்த ஒப்பற்றத் தலைவர் பேரறிஞர் அண்ணா; இருபெரும் தலைவர்கள் விட்டுச்சென்ற, அரசியல், சமூகப் பணிகளை இன்றளவும் ஓயாது உழைத்து அறிவுப் புரட்சி நடத்தி, கழகத்தையும், தமிழ் இனத்தையும் கட்டிக்காத்து வரும் தமிழினத் தலைவர் கலைஞர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் பாதமலர்களைத் தொட்டு வணங்கி, இக்கட்டுரை கொண்டு கழகத்தின் போர்வாள் முரசொலியின் மூலம் உங்களை நாடுகிறேன்.

உங்களில் ஒருவன்!

‘வாள்முனையைவிட பேனாமுனை கூர்மையானது, வலிமையானது’ என்பார்கள். ‘படியுங்கள் - படியுங்கள் - படியுங்கள்; எழுதுங்கள்-எழுதுங்கள்-எழுதிக்கொண்டே இருங்கள்’ என்றார் லெனின். இந்தப் பணிகளைத்தான் பேரறிஞர் அண்ணா செய்துவந்தார். தலைவர் கலைஞரும் அதே பணியைத்தான் செய்துகொண்டே இருக்கிறார்.

செய்தித்தாள்கள் வாழ்க்கையில் இன்றியமையாத கருவிகளில் ஒன்றாகிவிட்டன. எல்லாத்துறைகளையும் வளர்க்கின்ற சாதனமாகச் செய்தித்தாள்கள் விளங்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைய செய்திகள் நாளைய வரலாறு. எனவே, இன்றைய காலகட்டத்திலுள்ள செய்திகள், நாட்டு நடப்புகள் ஏடுகளில் பதிவுசெய்யப்படுவது அவசியம். ஒரு காலத்தில் திராவிட நாடு, காஞ்சி, நம் நாடு, மாலைமணி, ‘Home land’ - ‘Home rule’ என்று பல ஏடுகள் கழக ஏடுகளாக விளங்கி வந்தன. இன்றைக்குக் கழகத்திற்கு என்று உள்ள அதிகாரபூர்வமான ஒரே ஏடு முரசொலி மட்டுமே. தற்பொழுதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் முயற்சியால் மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களால் தொடங்கப்பட்ட The Rising Sun என்கிற ஆங்கில வார ஏடு மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, தொடக்கத்திலேயே வெற்றிநடை போட்டுவருகிறது. அறிஞர் அண்ணா குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, தமிழ் இதழ் உங்களோடு உறவாட; ஆங்கில இதழ் பிறர் நெஞ்சைத்தொட!

1939-ம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தம் நண்பர் திரு.தென்னன் அவர்களுடன் சேர்ந்து மாணவநேசன் என்ற கையெழுத்து ஏடு ஒன்றினைத் தொடங்கினார். 1942-ல் முரசொலி துண்டு வெளியீடாக வெளிவந்தது. சேரன் எனும் புனைப்பெயரில் கலைஞர் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரே நிரந்தர எழுத்தாளராக இருந்தார். 1948-ம் ஆண்டு முரசொலி வார இதழாக வெளிவந்தது. 1960-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பெரியார் பிறந்தநாள் அன்று முரசொலி நாளிதழாக வெளிவரத் தொடங்கியது.

நான் எழுதத் தொடங்குவதற்கு முதற்காரணம், கழக நண்பர்களோடு முரசொலி மூலம் உறவாட விரும்புகிறேன். இரண்டாவதாக என் உணர்வுகளை வெளிப்படுத்த மேடைப்பேச்சு மட்டுமே போதாது - எழுத்துப் பணியும் ஒரு படைக்கருவியாக இருக்கட்டும் என்றே எழுதத் தொடங்குகிறேன். மூன்றாவதாக, தலைவர் கலைஞர் எழுத்தாளர்களை வரவேற்கின்றார். அவர் வரவேற்பில் நானும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். எழுத்தாளராக அறிமுகம் செய்துகொள்வதற்காக எழுதவரவில்லை. கழகக் குடும்பங்களோடு கலந்துரையாடிட வருகின்றேன்.

உங்களில் ஒருவன்!

பழந்தமிழ் இலக்கியங்களில் முதன் முதலில் சிலப்பதிகாரத்தில்தான் கடிதம் அல்லது மடல் இடம்பெற்றது. மாதவி கோவலனுக்கு மடல் தீட்டியது, இலக்கியம். சீவக சிந்தா மணியில் சீவகனுக்கு காந்தருவதத்தை எழுதியது கடித வரலாறு. ஏசுநாதரின் சீடர்கள் எழுதிய கடிதங்கள் விவிலிய ஏட்டின் புதிய ஏற்பாட்டில் அமைந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் எழுத்துலக மேதை அறிஞர் பெர்னார்ட்ஷா, 25,000-க்கு மேற்பட்ட மடல்களை எழுதி அறிவுப்புரட்சி ஏற்படுத்தினார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தவாறே இந்தியாவில் நண்பர்களுக்குக் கடிதம் எழுதி, அகவளர்ச்சி - ஆன்மிக வரலாறு ஏற்படுத்தினார். அண்ணல் காந்தியடிகள் எண்ணற்ற கடிதங்களை எழுதிக் தொண்டு மனப்பான்மை, சமூக மாற்றத்தைத் தந்தார். பண்டித ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தவாறே அருமைப் புதல்வி இந்திரா பிரியதர்சினிக்கு கடிதம் வரைந்து பூவுலகத்தையே காட்டினார். டாக்டர் மு.வ. அவர்கள் தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு, நண்பர்க்குக் கடிதங்கள் எழுதித் தமிழ் இனத்திற்கு மொழிப்பற்றையும் சமூக உணர்வையும் ஊட்டினார். பேரறிஞர் அண்ணா, தம்பிமார் களுக்கும் பொதுமக்களுக்கும் தான் சொல்ல நினைத்ததையெல்லாம் கடிதம் மூலம் வெளிக்கொண்டு வருவார். கலைஞர் அவர்களும் அண்ணாவைப் போன்றே தான் சொல்ல நினைக்கின்ற செய்திகளை யெல்லாம் உடன்பிறப்புகளுக்கான கடிதத்தில் வெளியிட்டுவருகிறார். சமூக மாற்றங்களை ஏற்படுத்தியதும் அவரது அயராத எழுத்துப் பணிதான். இன்றைக்கு உங்களில் ஒருவனாக இருந்து எனது எழுத்துப் பணியையும் தொடங்கியிருக்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு