Published:Updated:

` தினகரன் விஷயத்தில் பாசிட்டிவ் சிக்னல்தான்!' - மோடியை எதிர்க்கப் போகும் மெகா கூட்டணி?

17 தொகுதிகளுக்குத்தான் கூட்டணி தேவை. இந்தத் தொகுதிகளில் தினகரனுடன் கூட்டணி வைத்தால் நமக்குக் கூடுதல் வாக்குகள் வந்து சேரும். இதைக் கருத்தில் கொண்டுதான் தினகரனுக்கு அழைப்புவிடுத்துப் பேசினார் ஆ.ராசா.

` தினகரன் விஷயத்தில் பாசிட்டிவ் சிக்னல்தான்!' - மோடியை எதிர்க்கப் போகும் மெகா கூட்டணி?
` தினகரன் விஷயத்தில் பாசிட்டிவ் சிக்னல்தான்!' - மோடியை எதிர்க்கப் போகும் மெகா கூட்டணி?

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்துப் பேசியிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ` தேர்தலின்போது எந்தெந்த கட்சிகள் இந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் நேற்று விவாதம் நடந்துள்ளது. இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன' என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தில். 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை, வரும் 16-ம் தேதி திறந்து வைக்க இருக்கிறார் சோனியா காந்தி. இதற்கான அழைப்பிதழை சோனியாவின் இல்லத்தில் வைத்துக் கொடுத்தார் ஸ்டாலின். நேற்று சோனியாவின் 72-வது பிறந்தநாளாகவும் இருந்ததால், அவருக்கு சால்வை அணிவித்து, பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அவரது வாழ்த்துச் செய்தியில், ` மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்ட அவர், நாட்டின் பொதுநலன் கருதியும் அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவமைப்பு கொடுத்திடும் வகையிலும் அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்புக்குத் தூண்டுகோலாகவும் உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறார். பிளவுபடுத்தும் பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும் துணிவும் தெளிவும் மிக்க செயல்பாடுகளும் கொண்ட சோனியா, நலமோடும் மகிழ்வோடும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வழிகாட்டிட வேண்டும்' என நெகிழ்வை வெளிப்படுத்தியிருந்தார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு,  ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.

டெல்லி சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர், `` நாடாளுமன்றத் தேர்தலில் மோடி எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்குச் சிதறாமல் வந்து சேர வேண்டும் என்பதில் ராகுல்காந்தி உறுதியாக இருக்கிறார். இதற்காக சில கட்சிகளை இந்த அணிக்குள் சேர்த்துக்கொள்ளவும் விரும்புகிறார். நேற்றைய சந்திப்பில் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, மோடி எதிர்ப்பு வாக்குகளைக் கணிசமாக எடுக்கப் போகும் தினகரனை சேர்த்துக்கொள்ள விரும்புகிறது காங்கிரஸ். இந்த விருப்பத்தை தி.மு.க தலைமையிடமும் தெரிவித்தனர். துரைமுருகன் பேச்சால் சலசலப்பு எழுந்தபோது, ஆ.ராசாவைப் பேட்டி கொடுக்க வைத்தார் ஸ்டாலின். அந்தப் பேட்டியில், `எங்கள் அணிக்குள் அ.ம.மு.கவும் மக்கள் நீதி மய்யமும் வந்தால் வரவேற்போம். பா.ம.க, தே.மு.தி.கவைச் சேர்த்துக்கொள்வது எங்கள் தன்மானத்துக்கே இழுக்கு' எனப் பேசினார். காங்கிரஸ் வலியுறுத்தலின்பேரில்தான் தினகரனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. 

இதைப் பற்றி விரிவாக விவரித்த டெல்லி நிர்வாகிகள், ` தினகரன் நம்பக்கம் வந்தால் இந்தக் கூட்டணிக்குப் பலமாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சிக்கு இன்னமும் தினகரன் செவிசாய்க்கவில்லை. `தி.மு.க அணிக்குள் போனால் தன்னுடைய முதல்வர் கனவு தகர்ந்து போகும்' என்பதால் மௌனம் காக்கிறார். இந்த விவகாரத்தை மாணிக் தாகூரும் சுதர்சன நாச்சியப்பனும் கையாண்டு வருகின்றனர். இதன்பிறகு பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், ` நீங்கள் (காங்கிரஸ்) கூறியதன் அடிப்படையில் அ.ம.மு.க-வுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் அழைப்புவிடுத்துவிட்டோம். எதிர்ப்பு உள்ள கட்சிகளைச் சேர்த்துக்கொள்வதில்தான் தயக்கம் உள்ளது (எந்தக் கட்சி என சொல்லவில்லை). தினகரனுக்கும் கமல்ஹாசனும் எதிர்ப்பு வாக்குகள் இல்லை. இந்தத் தேர்தலில் 40 தொகுதிகளையும் நாம் வென்றாக வேண்டும். தினகரன் கட்சிக்குப் பாசிட்டிவ் வாக்குகள்தான் உள்ளன. வடமாவட்டங்களில் உள்ளது போல தென்மாவட்டங்களில் நாங்கள் வலுவாக இல்லை. மேற்கு மாவட்டங்களில் நமக்குக் கூட்டணி தேவை. வடக்கில் தி.மு.க, காங்கிரஸ் மட்டும் போதும். டெல்டா, சவுத், வெஸ்ட்டில்தான் நமக்குக் கூட்டணி தேவை. 

அதாவது, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கிறோம். மற்ற 17 தொகுதிகளுக்குத்தான் கூட்டணி தேவை. இந்தத் தொகுதிகளில் தினகரனுடன் கூட்டணி வைத்தால் நமக்குக் கூடுதல் வாக்குகள் வந்து சேரும் என சிலர் சொல்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டுதான் தினகரனுக்கு அழைப்புவிடுத்துப் பேசினார் ஆ.ராசா. தினகரனைச் சேர்த்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது' எனக் கூறியிருக்கிறார். வி.சி.க குறித்து இந்தச் சந்திப்பில் எதுவும் பேசப்படவில்லை. சாதிய முரண்பாடுகள் எதுவும் இந்தக் கூட்டணிக்குள் வந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது" என்றார் விரிவாக.

அதேநேரம் கூட்டணி குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` தி.மு.க அணிக்குள் தினகரன் வர வேண்டும் என்பதில் திருநாவுக்கரசர் தான் உறுதியாக இருந்தார். அவரது முயற்சிக்கு ராகுல் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. தினகரனைப் பொறுத்தவரையில் அவர் அ.தி.மு.க-வுடன் ஐக்கியமாகக் கூடிய சூழல்கள் தான் நிலவி வருகின்றன. அவர் இந்தக் கூட்டணிக்குள் வருவார் என்பது தவறான தகவல். ஊழல் என வரும்போது அ.தி.மு.க-வையும் சசிகலாவையும் தனித்துப் பார்க்க முடியாது. காங்கிரஸ் இருக்கும் அணிக்குள் தினகரன் வருவதற்கு வாய்ப்பில்லை" என்றார் உறுதியாக.