Published:Updated:

`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்!' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்

`தூத்துக்குடி தொகுதியை அண்ணன் எனக்குக் கொடுத்துவிட்டார். நான் போட்டியிடப் போகிறேன்' என உற்சாகத்தோடு பேசினார். இந்த 20 நாள்களில் என்ன நடந்தது என்பதை கனிமொழி மட்டுமே அறிவார்.

`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்!' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்
`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்!' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்துப் பேசியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்தச் சந்திப்பில் கனிமொழியும் உடனிருந்தார். அதேநேரம், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் முன்னிறுத்தப்பட்டது சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ` கனிமொழி மீது ஸ்டாலின் கோபப்படுவதற்கு சில விஷயங்கள் காரணமாக அமைந்துவிட்டன' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைக்க வருகை தர இருக்கிறார் சோனியா காந்தி. இதனையொட்டி, டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று, சிலை திறப்பு விழா அழைப்பிதழினை அவரிடம் அளித்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார் ஸ்டாலின். கனிமொழியும் அதே மனநிலையில்தான் இருந்தார். இதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரைச் சந்தித்தபோதும் கனிமொழி உடனிருந்தார். கடந்த சில நாள்களாக கனிமொழி மீதிருந்த ஸ்டாலினின் கோபம் ஓரளவு தணிந்துவிட்டதாகவே இந்தச் சந்திப்புகளைப் பார்த்தனர் தி.மு.க முன்னணி நிர்வாகிகள். ``ஆனால், இதே சந்திப்பில் ஸ்டாலின் மருமகனும் முன்னிறுத்தப்பட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், 

``கஜா புயல் பாதித்த காவிரி டெல்டா பகுதிகளில் நிவாரண உதவிகளை கடந்த வாரம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்த விவரங்கள் முரசொலியில் இரண்டு பக்க அளவில் வெளியானது. உதயநிதி செய்த உதவியை மிகுந்த வர்ணிப்போடு விவரித்திருந்தது முரசொலி நாளேடு. அதேநேரம், கஜா புயல் பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் செல்ல விரும்பிய கனிமொழிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆதங்கத்தை ஜெயலலிதா நினைவுநாளில் அவர் வெளிப்படுத்தினார். `ஆணாதிக்க அரசியலில் ஒரு பெண்ணாக இருந்து வெற்றி பெறுவது கடினம்' எனக் குறிப்பிட்டிருந்தார் கனிமொழி. ஸ்டாலினை மையப்படுத்தியே இந்த வார்த்தைகள் அமைந்திருந்ததாகக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேச்சு எழுந்தது. உதயநிதி முன்னிறுத்தப்படுவதும் கனிமொழி ஓரம்கட்டப்படுவதாகவும் விவாதம் கிளம்பியது. ஸ்டாலின் கோபத்துக்கும் கனிமொழியின் சில செயல்பாடுகள்தான் காரணமாக அமைந்துவிட்டன" என்றவர், 

``தென்மாவட்டங்களில் கட்சிக்கு வேண்டிய சிலரிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் கனிமொழி. அப்போது, `தமிழ்நாட்டில் பெண்களைத்தான் மக்கள் அதிகம் விரும்புவார்கள்' எனக் கூறிவிட்டு, முதல்வர் பதவி தொடர்பாகவும் சில வார்த்தைகளைக் கூறியிருக்கிறார். இதே கருத்தை வேறு சிலரிடம் அவர் பேசியிருக்கிறார். அவர்களில் சிலர் ஸ்டாலின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றுள்ளனர். இதைக் கேள்விப்பட்டு மிகுந்த கொதிப்புக்கு ஆளாகிவிட்டார் ஸ்டாலின். ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத இடத்தில், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் அவர் விரும்புகிறார். அதனால்தான், ஜெயலலிதா நினைவுநாளில் அப்படியொரு பதிவை வெளியிட்டார். `தி.மு.க-விலிருந்து கொண்டு ஜெயலலிதாவைப் பற்றிப் பேசலாமா. அதுவும் கருணாநிதி மகளாக இருந்துகொண்டு பேசலாமா?' எனவும் சில நிர்வாகிகள் ஆதங்கப்பட்டனர். இந்த மாற்றம் எல்லாம் கடந்த 20 நாள்களில் நடந்தவை' என்றவர்,  

``அதற்கு முன்னர் நிர்வாகிகளிடம் பேசிய கனிமொழி, `தூத்துக்குடி தொகுதியை அண்ணன் எனக்குக் கொடுத்துவிட்டார். நான் போட்டியிடப் போகிறேன்' என உற்சாகத்தோடு பேசினார். இந்த 20 நாள்களில் என்ன நடந்தது என்பதை கனிமொழி மட்டுமே அறிவார். அழகிரி பேரணி நடத்த இருந்த சமயத்தில், ராஜாத்தி அம்மாவைச் சந்தித்து ஆசி வாங்கினார் ஸ்டாலின். அந்தளவுக்குக் கனிமொழி குடும்பத்தையும் அரவணைத்துத்தான் செல்கிறார். அவர் இதுபோல் பேசுவதை அறிந்துதான், கஜா உட்பட சில விஷயங்களுக்கு ஸ்டாலின் சிக்னல் கொடுக்கவில்லை. இந்த விவகாரம் அவ்வளவு எளிதில் முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. இதுதொடர்பாக, ஸ்டாலினிடம் நேரடியாக விளக்கம் கொடுத்தால் காட்சிகள் மாறலாம்" என்றார் விரிவாக. 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கனிமொழி தரப்பினர், ``நீங்கள் சொல்வதுபோல் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. எந்த இடத்திலும் ஸ்டாலினை விட்டுக் கொடுத்து கனிமொழி பேசியதில்லை. ஜெயலலிதாவின் ஆளுமை தொடர்பாக(தலைவர் கலைஞர் இருக்கும் போதே) அவர் பல இடங்களில் பேசியிருக்கிறார். நினைவுதின நாளில் அதைச் சுட்டிக்காட்டிதான் ஃபேஸ்புக் பதிவும் வெளியிட்டார். இதில், எந்தவித உள்நோக்கமும் இல்லை. ஸ்டாலினுக்கு எதிராகக் கனிமொழி பேசினார் என்பதே தவறானது. இப்படி ஒரு தகவல் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது’’ என்கின்றனர்.