Published:Updated:

ஆலோசனைக்கூட்டமாக மாறிய பா.ம.க. -ஆர்ப்பாட்டம்

ஆலோசனைக்கூட்டமாக மாறிய பா.ம.க. -ஆர்ப்பாட்டம்
ஆலோசனைக்கூட்டமாக மாறிய பா.ம.க. -ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் பா.ம.க. சார்பில் நடத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டம், போலீசார் கைது செய்து விடுவார்களோ என பயந்து ஆலோசனைக்கூட்டமாக மாற்றி விட்டனர்.

ஆலோசனைக்கூட்டமாக மாறிய பா.ம.க. -ஆர்ப்பாட்டம்

டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று காலையில் மதுரை கட்டபொம்மன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது மதுரை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி. இதைத் தொடர்ந்து அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 11 மணி ஆகியும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வெறும் 8 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர். போலீஸ் படையைக் கண்டதும் பயந்து போன அவர்கள், பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள தங்கள் கட்சி நிர்வாகி திருப்பதியின் டிராவல்ஸ் கடைக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.

ஆலோசனைக்கூட்டமாக மாறிய பா.ம.க. -ஆர்ப்பாட்டம்

போலீசார் கைது செய்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த அவர்கள், ஆர்ப்பாட்டத்தை ஆலோசனைக் கூட்டமாக மாற்றுவது என்று 'ராஜதந்திர' முடிவெடுத்தார்கள். அதன்படி நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் செந்தில்வேல் தேவர் தலைமை தாங்கினார். நகர நிர்வாகி திருப்பதி (டிராவல்ஸ் உரிமையாளர்) முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், "டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிறோம். மரக்காணம் கலவரம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட பா.ம.க.வினரை விடுதலை செய்ய வேண்டும். டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோளின்படி, கட்சியினர் தங்களது வீடுகள் அனைத்திலும் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை கடைக்குள் நின்றபடியே பத்திரிகை பேட்டியாகவும் சொன்னார்கள் நிர்வாகிகள்.

##~~##
பொறுமை இழந்த போலீசார் கடை வாசலுக்கே வந்து, "எப்போது ஆர்ப்பாட்டம்?" என்று கேட்க ஆரம்பித்தார்கள். பயந்து போய், "இல்லை.... இல்லை.... ஆர்ப்பாட்டம் எல்லாம் கிடையாது. சும்மா ஆலோசனைக் கூட்டம் தான் போட்டோம்" என்று சொல்லிவிட்டு, நிர்வாகிகள் 3 பேர் வாகனத்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுவிட்டனர். ஆனால் புறநகர் நிர்வாகிகள் பஸ் பிடித்துத் தான் ஊருக்குப் போக முடியும் என்பதால், பம்மியபடி பெரியார் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றார்கள். மார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து சென்ற அவர்களை போராட்டக்காரர்கள் என்று கருதி போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு சிட்டு, ஜெகதீஷ் நாடார், செல்லம்பட்டி முருகன், மேற்கு ஒன்றியம் அமுதன், நாராயணசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். "சத்தியமா நாங்க போராட்டம் நடத்த வரலைங்க" என்று கதறியும் போலீசார் தங்களை கைது செய்துவிட்டார்களே என்று புலம்பியபடி போலீஸ் வாகனத்தில் ஏறினார்கள் 5 பேரும். "சார் சாயந்திரம் விட்டு விடுவீங்கள்ல... ரிமாண்ட் எல்லாம் பண்ணிடாதீங்க சார்" என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்களாம் அந்த நிர்வாகிகள். அவர்களைக் கைது செய்த போலீசாருக்கு இன்று நன்றாக டைம்பாஸ் ஆகும் போலத் தெரிகிறது.
-கே.கே.மகேஷ்
படங்கள்:
பா.காளிமுத்து