Published:Updated:

`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை!’ - வெற்றிவேல்

`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை!’ - வெற்றிவேல்
`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை!’ - வெற்றிவேல்

எந்தச் சூழலிலும் அ.ம.மு.க, அ.தி.மு.கவுடன் இணையாது என தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கூறினார். 

நாம் பிரிந்திருக்கும் சூழலைப் பயன்படுத்தி தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றுவிடக் கூடாது என ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியிருந்தார். ஆனால், அமைச்சர் ஜெயக்குமாரோ``பந்திக்கு முதலில் நாங்கள் அழைப்பு விடுக்கவே இல்லை; ஆனால், வாழை இலையில் ஓட்டை பாரு என்கிறரீதியில் அ.ம.மு.கவினர் பேசிவருகிறார்கள். அ.ம.மு.கவினர் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆசை இருக்கலாம். அது வரவேற்கத்தக்கது. சசிகலா, டி.டி.வி.தினகரன் தவிர அ.ம.மு.கவில் இருக்கும் யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருக்கிறார்கள்’’ என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், அ.தி.மு.கவுடன் இணைப்பு என்பது எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை என்று தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் தெரிவித்திருக்கிறார். சென்னை அடையாற்றில் உள்ள இல்லத்தில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், ``எந்தச் சூழ்நிலையிலும் அ.தி.முகவில் போய் அ.ம.மு.க இணையாது. தங்க தமிழ்ச்செல்வன் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. `பத்து பன்னிரண்டு பேரைத்தான் துணைப் பொதுச்செயலாளர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

மீதமிருப்பவர்கள் சீக்கிரம் வந்து இணைந்து விடுங்கள்; பின்னால் வந்தால் உங்களுக்கான முக்கியத்துவம் இருக்காது’ என்றுதான் தங்க தமிழ்ச்செல்வன் பேசியிருந்தார். இணைப்பு என்பது எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை. அ.ம.மு.க, ஆட்சியைப் பிடிக்கிற, மக்களுக்காகப் போராடும் இயக்கமாக மாறி அடுத்தகட்டத்துக்குச் செல்லும்’’ என்றார்.