Published:Updated:

வைகோ.... திருமாவளவன்... பா.இரஞ்சித்…கூட்டணியும் சர்ச்சைகளும்..!

வைகோ.... திருமாவளவன்... பா.இரஞ்சித்…கூட்டணியும் சர்ச்சைகளும்..!
வைகோ.... திருமாவளவன்... பா.இரஞ்சித்…கூட்டணியும் சர்ச்சைகளும்..!

டந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மாற்றுக்கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி, 'இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கே சாத்தியம்' என முழங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க ஆகிய கட்சிகள் ஒரே அணியாகச் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தன. ஆனால், பெரிய அளவிலான கூட்டணி ஏதுமில்லாத போதிலும் தமிழகத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்று தொடர்ந்து ஆட்சியை அமைத்தது. தி.மு.க-வைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியைத் தவிர, பெரிய கட்சிகள் ஏதுமில்லா நிலையில், தமிழக சட்டசபையில் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

இன்னும் ஆறு மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கூட்டணி பற்றிய பேச்சுகளும், அரசியல் களத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தி.மு.க. பொருளாளர் துரை முருகன் அளித்த பேட்டியில் ‘நட்பு கட்சி’ கூட்டணி கட்சி எனச் சொல்லி, கூட்டணி சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார். இப்போது திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித்,‘தலித் கட்சிகள் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும்’ எனத் தெரிவித்து அந்தச் சர்ச்சைகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். 

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த வைகோ, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது, அடுத்த சர்ச்சை.  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,  வைகோ-விடம் தலித்துகள் முதல்வராவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘நான் தலித்துகள் அதிகாரத்திற்கு வருவதை விரும்பாதவனா? நான் அவர்களோடு நெருங்கிப் பழகுகிறவன். என் வீட்டில் தலித்துகள் வேலை செய்கிறார்கள்‘ எனக் கோபமாகப் பதிலளித்துப் பேட்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டு வெளியேறினார்.

வைகோவின் இந்த பதில் பற்றி கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர்  வன்னியரசு, "வீட்டில் வேலை செய்கிறார்கள் என்பதற்கும், அதிகாரப் பகிர்வு என்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?" எனச் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அவை அடுத்தக்கட்ட பிளவைத் தொடங்கி வைத்துள்ளது. இந்தப் பதிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "வன்னியரசை இந்தப் பதிவைப் போட வைத்தது யார்? " எனக் கேள்வி எழுப்பினார்.  திருமாவளவனைத்தான் மறைமுகமாக வைகோ விமர்சிக்கிறாரா என்று அரசியல் விமர்சகர்களுக்கிடையே பேசப்பட்டது.

வைகோ பதிலளிக்காமல் வெளியேறிய அதே தனியார் தொலைக்காட்சிக்குச் சமீபத்தில் திருமாவளவன் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டி குறித்து, வி.சி.க பொதுச்செயலாளர்களில் ஒருவரான  ரவிக்குமார் அவருடைய முகநூல் பக்கத்தில், "அவரின் ஆளுமையை வெளிக்கொண்டு வருவதற்கான ஆழமான கேள்விகள்"  என வைகோ எந்த நெறியாளரிடம் கோபித்துக் கொண்டாரோ, அதே நெறியாளரைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இந்தச் சம்பவங்கள் கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியைச் சேர்த்துக் கட்டமைத்த, தற்போது தி,மு.க-வோடு இணைந்து பயணிப்பவர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்து விட்டனவா என்ற கேள்விகளைத்தான் எழுப்புகின்றன.

ஏற்கனவே,  கூட்டணியில் உள்ளவர்களுக்கிடையே குழப்பங்கள் ஒருபுறமிருக்க, சென்னையில்  அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி, நடந்த நிகழ்ச்சியில் பேசிய பா.இரஞ்சித் ‘தலித் கட்சிகள் தனிக் கூட்டணி அமைத்து ஏழு தனித் தொகுதிகளில் போட்டியிட வேண்டும்’ என்றார். 'பா.இரஞ்சித்தின் இந்தக் கருத்து அம்பேத்கரின் கருத்தியலுக்கு எதிரானது' என வி.சி.க வினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். வி.சி.க-வைப் பொறுத்தவரை ஒருபுறம் தலித் அதிகாரம் என வைகோவுடன் முரண்பாடு, மற்றொரு புறம் தலித் தனிக் கூட்டணி என்ற ரஞ்சித்தின் அரசியல் பேச்சால் ஏற்படும் நெருக்கடிகளுக்கிடையே மாட்டிக் கொண்டிருக்கிறது.

பா இரஞ்சித் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்திருந்தார். குஜராத்தின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக விளங்கிய ஜிக்னேஷ் மேவானிக்கு காங்கிரஸ் முக்கியத்துவமளித்து. இந்நிலையில் இரஞ்சித்தின் இந்தப் பேச்சும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது . கூட்டணியை எப்போதும் உறுதிபடச் சொல்லிவிட முடியாது. ம.தி.மு.க, கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்திவந்த  நிலையில் திடீரென தேர்தலைப் புறக்கணித்தது.

'பி.ஜே.பி-யை வீழ்த்துவோம்' என ஒன்றுசேர்ந்துள்ள தி.மு.க கூட்டணி நிலைபெறுமா? ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியில்  இணைந்து பயணிக்குமா? இரஞ்சித் சொன்ன புதிய தலித் கூட்டணி உருப்பெறுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு வரும் தேர்தல்தான் பதில் சொல்லும்...!