தேர்தல் ஆணையம் இன்னும் தேதியை அறிவிக்கவில்லை; இவர்தான் வேட்பாளர் என்று தெரியவும் இல்லை. ஆனாலும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேலைகளில் ஆளும்கட்சி தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது. தினமொரு பூத் கமிட்டி கூட்டம், பிரசார அணிக் கூட்டம், சைக்கிள் பேரணி என அதகளம் செய்யத் தொடங்கிவிட்டனர். தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் அ.ம.மு.க-வினர் பம்பரமாகச் சுற்றிவந்து, ஆளும்கட்சிக்கு கலவரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். சுவர்களில் இவர்கள் இரட்டை இலையும் குக்கரும் வரைந்து தள்ள, உதயசூரியன் சின்னத்தை அரிதாகவே பார்க்க முடிகிறது. ஏனோ, தி.மு.க தரப்பில் சுணக்கமாகவே இருக்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் வெற்றிபெற்ற தகவலை அறிந்துகொள்ளாமலேயே மரணமடைந்தார் சீனிவேல். அதன்பின், இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஏ.கே.போஸும் சமீபத்தில் மரணமடைந்தார். தொடர் மரணங்களைப் பார்த்து அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் ‘திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா’ என்று ஆரம்பத்தில் யோசித்தனர். ஆனாலும், ஆளும்கட்சியாக இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பணம் செலவழிக்க வேண்டியிருக்காது என்பதால், இப்போது பலரும் சீட்டுக்கு வரிசைகட்டி வருகிறார்கள்.

மதுரை புறநகர் மாவட்டத்தில் இந்தத் தொகுதி வருவதால், புறநகர் மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பாதான் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வார் என அ.தி.மு.க-வினர் சொல்கிறார்கள். அவர் கையில் சில எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால், அவர் கேட்பதை உடனே செய்கிறார் எடப்பாடி. அ.தி.மு.க-வின் ஐ.டி பிரிவு பொறுப்பாளராக இருக்கும் தன் மகன் ராஜ்சத்தியன் அல்லது தன் உதவியாளர் ரமேஷ் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் பெற ராஜன் செல்லப்பா முயற்சி எடுத்து வருகிறார். இதற்காகவே கடந்த மாதம் திருப்பரங்குன்றத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சமீப காலமாக, செல்லூர் ராஜுவுடன் அவர் இணக்கமாகிவிட்டார். அதனால், ராஜன் செல்லப்பா கைகாட்டும் நபரையே அமைச்சர் என்ற முறையில் செல்லூர் ராஜுவும் ஓகே செய்வார் என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், ஜெ. பேரவை மாநிலச் செயலாளராக இருக்கும் மதுரை மாவட்டத்தின் மற்றோர் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார், தான் கைகாட்டும் நபர்தான் வேட்பாளர் என்பதுபோல சில வேலைகளைச் செய்து வருகிறார். சமீபத்தில் திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசார ஆலோசனைக் கூட்டம் ஒன்றை பாண்டி கோயிலில் நடத்தினார். இதில் ராஜன் செல்லப்பா கலந்துகொள்ளவில்லை. 12 ஒன்றியச் செயலாளர்களும் இதைப் புறக்கணித்தனர். ‘மாவட்டச் செயலாளர் இல்லாமல் கூட்டம் நடத்திக் கட்சிக் கட்டுப்பாட்டை உதயகுமார் மீறுகிறார்’ என்ற புகார் உடனே எடப்பாடிக்குச் சென்றது.
அடுத்த சில நாட்களில் திருப்பரங்குன்றத்தில் பூத் கமிட்டி கூட்டத்தை ராஜன் செல்லப்பா ஏற்பாடு செய்தார். அதில் ஆர்.பி.உதயகுமாரும் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பூத் கமிட்டியினர் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே, வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடலாமா’ என்றும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தான் தேர்தல் வேலை செய்வது தலைமைக்குத் தெரிய வேண்டும் என்பதால், செப்டம்பர் 13-ம் தேதி பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, ஒன்பது அமைச்சர்கள் முன்னிலையில் பிரமாண்ட சைக்கிள் பேரணியை திருப்பரங்குன்றத்தில் நடத்தி மக்களை அலற வைத்தார் ஆர்.பி.உதயகுமார். ‘உதயகுமார் இப்படிச் செய்வது நமக்கு எதிராகத் திரும்பும்’ என ராஜன் செல்லப்பா கோஷ்டி புகார் வாசிக்கிறது. இவர்களின் கோஷ்டி மோதலுக்கிடையில் தன் விசுவாசிகளான முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கத்தையோ, நத்தம் விசுவநாதனையோ களமிறக்க ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம், அ.ம.மு.க தரப்பில் தினமும் பூத் வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகின்றனர். தங்க தமிழ்ச்செல்வன் இங்கேயே தங்கியிருக்கிறார். ஆர்.கே.நகரில் பணியாற்றியது போல் இங்கும் இடைத்தேர்தல் பணி செய்யும் பிளானில் இவர்கள் இருக்கிறார்களாம். புறநகர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், மாநகரச் செயலாளர் ஜெயபால் ஆகியோர் போட்டியிட விரும்பினாலும், ஓரளவு மக்களுக்குப் பரிச்சயமுள்ள முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை நிறுத்த தினகரன் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தி.மு.க தரப்பில் மீண்டும் டாக்டர் சரவணனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற பேச்சு உள்ள நிலையில், மேலும் பல தி.மு.க புள்ளிகளும் ஆசையாகக் காய் நகர்த்தி வருகிறார்கள். மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்ஸார் கோபி, ஜெயராமன் ஆகியோர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறனுக்கும் போட்டியிட ஆசை உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
‘தினகரன் அணி வாக்குகளைப் பிரிப்பது தங்களுக்குச் சாதகமாக இருக்கும்’ என்று தி.மு.க-வினர் எதிர்பார்க்கும் நிலையில், ‘அழகிரியை வைத்து தி.மு.க வாக்குகளைப் பிரிக்கலாம்’ என அ.தி.மு.க-வினர் திட்டம் தீட்டிவருகிறார்கள். அதே நேரம், வரவை எதிர்பார்த்து வாக்காளர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்