Published:Updated:

``பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் 90% நிதி பயன்படுத்தப்படவில்லை!” - மரியம் தவாலே

``மகாராஷ்ட்ராவில் ஷனி ஷிங்கனாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்று தீர்ப்பு வழங்கியபோது, பா.ஜ.கவினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், சபரிமலைக்கு ஏன் இவ்வளவு போராட்டங்களும் வன்முறைகளும்?"

``பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் 90% நிதி பயன்படுத்தப்படவில்லை!” - மரியம் தவாலே
``பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் 90% நிதி பயன்படுத்தப்படவில்லை!” - மரியம் தவாலே

ன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். கடந்த 70 ஆண்டுகளாக, இந்த தினத்தை உலகம் முழுவதும் அனுசரித்து, மனித உரிமைகளைக் குறித்து பேசி வருகிறோம். ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல நாம் மனிதத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறோம் என்பதைத்தான் நாம் அன்றாடம் கடக்கும் செய்திகளும் சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன. குறிப்பாக, பெண்களின் உரிமையும், அவர்களின் பாதுகாப்பும் இங்குத் தினமும் ஏதாவது ஒரு விதத்தில் அச்சப்படும் அளவுக்குச் சூறையாடப்பட்டு வருகிறது. 

சபரிமலைக்குச் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தும் பெண்கள் அங்குச் செல்லமுடியாத நிலை, தொடரும் பாலியல் வன்முறைகள், பணியிடத்தில் பாலியல் தொல்லைகள், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் என இந்தியப் பெண்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் பாலின ரீதியான பிரச்னைகள் குறைந்தபாடில்லை. பெண்களின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு, எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மையமாக வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலர் மரியம் தவாலே, இன்று நாடு முழுவதும்  போராட்டங்களும், பேரணிகளும் நடத்திவருகிறார். இதுகுறித்து அவரிடம் பேசினேன்.

``சர்வதேச மனித உரிமை தினம் என்பது, பெண்கள், குழந்தைகளின் உரிமைக்கு உட்பட்டதுதான். அதனால்தான், நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில், மாவட்டங்களில் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நாங்கள் பேரணியும் பொதுக்கூட்டங்களும் நடத்திவருகிறோம்.

சமீபத்தில்கூட, உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, அதிக குழந்தைகள் இறக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. ஆக, பெண்கள் குழந்தைகள் நல விஷயத்தில் ஆளும் மோடி அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. இங்கு `பெண் குழந்தைகளைக் காப்போம்” திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 90 சதவிகித நிதி பயன்படுத்தப்படவில்லை என்கிறது பாராளுமன்ற அறிக்கை.

ராஜஸ்தானில் பா.ஜ.க கட்சி சார்பாக ஒரு தொகுதியில்  போட்டியிட்ட ஷோபா ராணி என்பவர், ``நான் இந்தத் தேர்தலில் வென்றால், குழந்தை திருமணங்களுக்கு முழு ஆதரவை கொடுப்பேன். காவல்துறையினர் இந்த விவகாரத்தில் எந்தவகையிலும் தலையிடாதபடி பார்த்துக்கொள்வேன் !”, என்று பகிரங்கமாகத் தெரிவிக்கிறார். அப்போது குழந்தை திருமணங்களையும் உடன்கட்டை ஏறுவதையும் ஒழிக்கப் போராடியவர்களுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு என்ன?

மகாராஷ்ட்ராவில் ஷனி ஷிங்கனாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்று தீர்ப்பு வழங்கியபோது, பா.ஜ.கவினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், சபரிமலைக்கு ஏன் இவ்வளவு போராட்டங்களும் வன்முறைகளும்? அப்படிச் செய்தால்தான், இங்கு அவர்களின் அரசியல் செல்வாக்கு உயரும் என்பதுதான் மோடி அரசின் திட்டம். அதற்குப் பெண்கள்தான் பலிகடாவா?

இத்தகைய கேள்விகளை முன்வைத்துத்தான், நாங்கள் எங்கள் போராட்டங்களை நடத்துகிறோம். கடந்த செப்டம்பர் 4 ம் தேதி, நடந்த போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக 10,000 பேர் வந்தார்கள். போராட்டங்கள்தான் இத்தகைய சமூகச் சிக்கல்களுக்கு ஒரு தீர்வைத் தரும் என்று நம்புகிறோம்.

வேலையில்லாத திண்டாட்டம், ஊட்டச்சத்த குறைபாடு, வன்முறை, ஏழ்மை என்று பல பிரச்னைகள் உள்ளது நம் நாட்டில். ஆனால், மோடி அரசுக்கு இதை எல்லாம் கவனிக்க நேரமில்லை. உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத்தான் நேரம் இருக்கிறது. அதனால் அவரின் நடவடிக்கைகள் பற்றி இங்கே பேசுவதற்கு ஆள்களே இல்லை. நம் நாட்டில் அடிக்கடி அடிபடும் ஊழல் செய்திகள் வந்த வேகத்திலேயே காணாமல் போவது எதனாலோ தெரியவில்லை...  

பா.ஜ.கவினரும் ஆர்.எஸ்.எஸூம் கொண்டாடும் மனுதர்மமே பெண்களின் உரிமைகளுக்கு எதிரானதுதான். அப்படி இருக்கையில் அவர்களின் அரசும் ஆட்சியும் மட்டும் எப்படி எங்களுக்குச் சம உரிமையை அளித்துவிடப்  போகிறது? அதனால்தான் நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். இனியும் போராடுவோம்”, என்று அழுத்தமாகக் கூறினார் மரியம் தவாலே!