Published:Updated:

ஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்!

ஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
ஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்!

‘‘சாட்டையைச் சுழற்றினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகும். ‘ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டினால், இ.பி.கோ பிரிவு 124-ன் படி 7 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்’ எனக் காவல்துறை சுட்டிக்காட்டியதால் கறுப்புக்கொடி காட்டுவது முடிவுக்கு வந்துள்ளது’’ - கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தமிழகம் முழுக்க ஆய்வு என்ற பெயரில் வலம்வந்தபோது எழுந்த சர்ச்சையில் ஹெச்.ராஜா போட்ட ட்வீட் இது. 

ஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்!

அன்றைக்கு ஐ.பி.சி. செக்‌ஷன்கள் பேசிய... காவல்துறையின் பெருமையைச் சொன்ன ஹெச்.ராஜாதான், இன்றைக்கு சட்டத்தை அமல்படுத்தும் உயர்நீதிமன்றத்தையும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் காவல்துறையையும் படுகேவலமான வார்த்தைளைப் பயன்படுத்தி அவமானப்படுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசுத்துறையை அவமானப்படுத்தும் வகையில் விமர்சித்தல் என்கிற ஐ.பி.சி-யின் செக்‌ஷன்கள் ஹெச்.ராஜாவுக்கு ஞாபகம் வராமல் போனது ஏனோ?

காஷ்மீர் கத்துவா விவகாரத்தில், ‘ஒரு சிறுமியைக் கோயிலுக்குள் எப்படி அடைத்து வைக்க முடியும்?’ எனக் கேட்டார் ராஜா. ‘இம்ரான்கான் முன்னிலை வகிப்பதற்கு மோடிதான் காரணம்’ என ட்வீட் தட்டினார். ‘ஜோசப் விஜய்க்கு மோடிமீதான கோபமே மெர்சல் படத்தின் வசனம்’ என சர்ச்சைக்குத் திரி கிள்ளினார்.

 ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமியின் சிலை’ எனச் சீண்டினார். பெண் நிருபரின் கன்னத்தில் தட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைக் கனிமொழி கண்டித்தபோது, ‘கள்ள உறவு’ என்றெல்லாம் கொச்சையாகக் கருத்து தெரிவித்தார். இப்படியெல்லாம் தொடர்ந்து சர்ச்சைக் கருத்துகளைச் சொல்லிவிட்டு, ‘இது நான் போட்ட ட்வீட் இல்லை. அட்மின் எனக்குத் தெரியாமல் போட்டார்’ எனச் சொல்லி எஸ்கேப் ஆவதையும் வழக்கமாகவே வைத்திருக்கிறார் ஹெச்.ராஜா. அட்மினோடு இப்போது ‘வீடியோ எடிட்டரும்’ சேர்ந்துவிட்டார். 

பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளிலும் தரம் தாழ்ந்து பேசுவதற்கு என்று நாலாந்தரப் பேச்சாளர்கள் இருப்பார்கள். ஆனால், கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இப்படிக் கேவலமாகவெல்லாம் இறங்க மாட்டார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சி என்னும் தேசியக் கட்சியின், தேசியச் செயலாளராக இருந்துகொண்டு, நாலாந்தரப் பேச்சாளர்களைவிட மோசமாக நடந்து கொள்பவர் ஹெச்.ராஜா.

சில நாள்களுக்கு முன்பு, சென்னையில் நடந்த இந்துக்கோயில் சொத்துகள் மீட்பு ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், ‘`ஆயிரம் இளைஞர்களை ராஜாவுக்குக் கொடுங்கள். அவர், இந்து மதத்தையும் இந்துக்களையும் காப்பாற்றிவிடுவார்’’ என்றார்கள். “நூறு இளைஞர்களைத் தாருங்கள்’’ எனக் கேட்ட விவேகானந்தர்தான், ‘`ஒரு தலைவனிடம் ஒழுக்கம் இல்லாவிட்டால் மக்களுக்கு அவரிடம் பக்தி ஏற்பட முடியாது. தூய்மை இருந்தால் அவரிடம் நிரந்தரமான பக்தியும் நம்பிக்கையும் மக்களுக்கு நிச்சயமாக இருக்கும்’’ என்கிறார். ஆனால், ஹெச்.ராஜாவிடம் அத்தகைய நம்பிக்கையும் பக்தியையும் வைக்க முடியுமா?

 ஹெச்.ராஜா அவர்களே... உங்கள் கட்சியில் சேர்ந்திருக்கும் அ.தி.மு.க-வின் முன்னாள் வேலூர் மேயர் கார்த்தியாயினியிடம் கேட்டுப் பாருங்கள், நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக அவர் பட்டபாடு என்ன என்பதை உங்களுக்குப் பால பாடமாகச் சொல்வார். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பை விமர்சித்து, வேலூர் மாநகராட்சியில் தீர்மானம் போட்டுவிட்டு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வரலாறு எல்லாம் மறந்துபோய்விட்டதா?

ஆணவத்தோடும் அநாகரிகத்தோடும் பேசும், எழுதும் ராஜாமீது சிறு துரும்புகூட விழாமல் பம்மிப் பம்மிப் பாதுகாக்கிறது அ.தி.மு.க. அரசு. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பதிவு  வெளியிட்ட எஸ்.வி.சேகர்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர் காவல்துறைப் பாதுகாப்புடன் சினிமா சங்கத் தேர்தலில் வாக்களிக்கிறார். அரசுப்பள்ளியில் நடைபெறும் ஒரு தனியார் விழாவில் கலந்துகொள்கிறார். பா.ஜ.க-வின் புதிய கூட்டாளியான டாக்டர்.கிருஷ்ணசாமியுடன் சிரித்தபடி புகைப்படம் எடுத்து உலவவிடுகிறார். அவர்மீது தொடுக்கப் பட்ட வழக்கு, கொடுக்கப்பட்ட புகார் எவற்றின்மீதும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை தமிழக அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்!

அதேசமயம், மக்கள் பிரச்னைக்காக அரசை எதிர்த்துப் பேசியதற்காகத் திருமுருகன் காந்தியை ‘ஊபா’ என்னும் கறுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்கிறது தமிழக அரசு. கேரளாவுக்காக வெள்ள நிவாரண நிதி வசூலிக்கும்போது ஏற்பட்ட சிறு பிரச்னைக்காக வளர்மதியைக் கைது செய்கிறது. மணல்கொள்ளை உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காகப் போராடும் முகிலன் மாதக்கணக்கில் சிறையில் இருக்கிறார். தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எதிராக விமானத்தில் முழக்கமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்படுகிறார். ஆனால், தமிழிசைமீது சோபியாவின் தந்தை கொடுத்த புகாரின்மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.

சென்னையில் பிரியாணிக் கடைக்காரரைத் தாக்கிய தி.மு.க நிர்வாகிமீது நடவடிக்கை எடுத்ததோடு நேரடியாகவே அந்த பிரியாணிக் கடைக்குச் சென்று வருத்தமும் தெரிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். பெரம்பலூரில் அழகுநிலையத்தில் புகுந்து ஒரு பெண்ணை அடித்த தி.மு.க நிர்வாகியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். சமீபத்தில் கஞ்சா விற்றதாகக் கைதுசெய்யப்பட்ட சென்னை பா.ம.க நிர்வாகியின்மீது தலைமை நடவடிக்கை எடுத்தது. எல்லாக் கட்சிகளுமே இப்படியான ஒழுங்கு நடவடிக்கைகளை, வரம்புமீறி நடப்பவர்களின்மீது எடுக்கின்றன. ஆனால் ‘மற்ற கட்சிகள் எல்லாம் ஒழுக்கமற்ற கட்சிகள்’ என்றும் ‘தேசியத்திலும் தெய்விகத்திலும் நம்பிக்கையுள்ள கட்சி’ என்றும் சொல்லிக்கொள்ளும் பா.ஜ.கவோ ஹெச்.ராஜா மீதோ எஸ்.வி.சேகர் மீதோ சுப்பிரமணியன் சுவாமி மீதோ எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பதில்லை. ‘அது அவர்கள் சொந்தக்கருத்து’ என்று எப்போதும் பழைய பல்லவி பாடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் தமிழிசை.

ஆடியோ மூலம் போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய புல்லட் நாகராஜுக்கும் ஹெச்.ராஜாவுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையே. அதுவும் ஹெச்.ராஜா ஏகவசனத்தில் விமர்சிப்பது அ.தி.மு.க அரசைத்தான்.

‘`போலீஸ் மொத்தமும் கரப்ட் (ஊழல்). போலீஸுக்கு வெட்கமாக இல்லையா... உங்க டி.ஜி.பி வீட்டுல ரெய்டு நடந்தபோதே நீங்க யூனிபார்மைக் கழட்டிட்டு வீட்டுக்குப் போயிருக்கணும்’’ என ஹெச்.ராஜா கேட்டது காக்கிகளை மட்டுமல்ல; காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் எடப்பாடியைப் பார்த்தும்தான். தடை செய்யப்பட்ட குட்காவை விற்க லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரை கேபினெட்டிலும் டி.ஜி.பி ஆபீஸிலும் வைத்துக்கொண்டிருந்தால், இப்படி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி ராஜா கேட்கத்தான் செய்வார். ஆனால், அதற்காக ஒட்டுமொத்தமாக நீதிமன்றங்களையும் காவல்துறையையும் கேவலப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

இப்போது பிரச்னை கரைகடந்துவிட்டது. உயர் நீதிமன்றம் குறித்து ராஜா தரக்குறைவான வார்த்தைகளைத் தெரிவித்தது அம்பலமாகிவிட்டது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கோர்ட்டையும் கடித்திருக்கிறார் ஹெச்.ராஜா. ‘இனியும் தாமதித்தால் தமிழக அரசே நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்ப முடியாது’ என்ற நிலை வந்த பிறகுதான் ராஜாமீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘வீடியோவில் இருப்பது என்னுடைய குரல் அல்ல; எடிட் செய்யப்பட்டிருக்கிறது’ என்றெல்லாம் இப்போது ராஜா மறுப்பு சொல்லியிருக்கிறார். ஆனால், பிரச்னை நடந்த இடத்தில் இருந்த சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியினுடைய புகாரின்பெயரில்தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருக்கிறது. ஆனால், நியாயப்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா, ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களின் ஆணவமும் அநாகரிகப்போக்கும் அடங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism