Published:Updated:

கரூர் மாவட்ட ம.தி.மு.க-வில் பிளவு: வைகோ மீது குற்றச்சாட்டு!

கரூர் மாவட்ட ம.தி.மு.க-வில் பிளவு: வைகோ மீது குற்றச்சாட்டு!
கரூர் மாவட்ட ம.தி.மு.க-வில் பிளவு: வைகோ மீது குற்றச்சாட்டு!

``ம.தி.மு.க ஆரம்பிக்க முக்கியக் காரணமாக இருந்த மாவட்டம் கரூர். வைகோவைத் தி.மு.க-விலிருந்து கருணாநிதி நீக்கியதும், அதைக் கண்டித்து ஐந்து பேர் தீக்குளித்து இறந்தார்கள். அதில் ஒருவர் கரூரைச் சேர்ந்த நொச்சிப்பட்டி தண்டாயுதபாணி. ஸ்டாலினைத் தி.மு.க-வில் முன்னிலைப்படுத்தவே வைகோவைக் கருணாநிதி வெளியேற்றினார். ஆனால், இப்போது அதே ஸ்டாலினோடு கைகோத்துகிட்டு, 'ஸ்டாலினை பாதுகாப்புக் கவசமாக இருந்து காப்போம்'ன்னு சொல்றார் வைகோ. இப்படி மாறிப் போய்விட்ட வைகோவை, ம.தி.மு.க உதயமாகக் காரணமாக இருந்து, தீக்குளித்து உயிர்துறந்த அந்த ஐந்து பேரின் ஆத்மாவும் மன்னிக்காது" என்று ஆவேசமாகப்  பேட்டியளித்தார் கலையரசன்.

ம.தி.மு.க-வின் கரூர் மாவட்ட அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளராகவும், `ஆபத்து உதவிகள்' பிரிவின் மாநிலச் செயலாளராகவும் இருந்தவர். 2013-ம் ஆண்டில் திருப்பதிக்குச் சாமிதரிசனம் செய்ய வந்த அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே காருக்கு முன்னால் எட்டுப் பேரோடு பாய்ந்து, கறுப்புக் கொடி காட்டியவர். திருப்பதியில் நடந்த அந்த விவகாரம், அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ம,தி.மு.க-வை அரவக்குறிச்சியில் அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு இணையாக வைத்திருந்தவர். இப்போது இவர்தான் ஏழு ஒன்றியச் செயலாளர்கள், இரண்டு நகரச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மூன்று பேர் மற்றும் எண்ணற்ற ம.தி.மு.க தொண்டர்களோடு கட்சியை விட்டு விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

``கட்சியின் மாவட்டச் செயலாளர் கபினி சிதம்பரம் யாரையும் மதிப்பதில்லை. தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரைப் பற்றி எந்தப் புகாரை வைகோ கவனத்துக்குக் கொண்டு போனாலும், குறுக்காகப் புகுந்து கட்சியின் மாநிலப் பொருளாளர் கணேசமூர்த்தி, கபினி சிதம்பரத்தைக் காப்பாத்துறார். இதுக்கு மேல் அவமானப்பட எங்களுக்கு ஒன்றும் இல்லை" என்றபடி, ம.தி.மு.கவை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள்.
 

`அடுத்து என்ன செய்வது?' என்று தன்னுடைய ஆதரவாளர்களோடு தீவிர ஆலோசனையில் இருந்த கலையரசனைச் சந்தித்துப் பேசினோம். `` `சாகுறவரைக்கு வைகோதான் தலைவர்'ன்னு இருந்தோம். ஆனா, அவர் எங்களை அவமானப்படுத்தி விட்டார். மாவட்டச் செயலாளர் கபினி சிதம்பரம்தான் எல்லாத்துக்கும் காரணம். ஆட்சிக்கே வராத ம.தி.மு.க-வில் இருந்துகொண்டு கடனை வாங்கி இத்தனை காலமும் லட்சலட்சமா செலவு பண்ணி ம.தி.மு.க-வை ஓரளவு வளர்த்து வச்சுருந்தோம். ஆனா, கபினி சிதம்பரம் பொறுப்புக்கு வந்தபிறகு, எங்களை மதிப்பதே இல்லை. மாவட்டப் பொறுப்புகளை போடும்போது, சம்பந்தப்பட்ட நபர்கள் இருக்கும் லிமிட்டுக்குள் வரும் ஒன்றியச் செயலாளர்களை மாவட்டச் செயலாளர் கலந்து ஆலோசிப்பதில்லை. அதோடு, அவர் மாவட்டப் பொறுப்புகளில் போடும் ஆள்கள் அந்தந்த ஒன்றியச் செயலாளர்களை மதிக்காமல், தன்னிச்சையாகச் செயல்பட்டாங்க. புதுசா கட்சிக்கு வந்த சுமங்கலி நந்தாங்கிறவரை, மாவட்டப் பொறியாளர் அணிச் செயலாளரா ஆக்கினார். அப்புறம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கோபிநாத்துங்கிறவரை, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக ஆக்கினார். அந்தப் பையன் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சங்கப்பிள்ளையிடம், `இனி நான்தான் ஒன்றியச் செயலாளர்'ன்னு சொல்லியிருக்கார். அதேபோல், என்னோட அரவக்குறிச்சி ஒன்றியத்தில் என்கிட்ட தகவல் சொல்லாம மூணு நிர்வாகிகளிடம் ஈரோடு மாநாட்டுக்கு நிதி வசூல் பண்ணினார் மாவட்டச் செயலாளர். இப்படி ஒன்றியச் செயலாளர்களை அவர் புறக்கணிப்பது பற்றி வைகோவுக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், கட்சியின் மாநிலப் பொருளாளர் கணேசமூர்த்தி, கபினி சிதம்பரத்துக்கு ஆதரவா வைகோகிட்ட பேசிட்டார்.

கடந்த மே மாதம் 30 ம் தேதி கோவை வந்த வைகோவை நேரில் பார்த்து முறையிடப் போனோம். ஆனால், `யாரையும் பார்க்க விரும்பலை'ன்னு மூஞ்சியில அடிச்சாப்புல சொல்லிட்டார். பிறகு விசாரிப்பதான், `மாவட்டச் செயலாளரை மாத்துறதுக்காக கலையரசன், நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்குறார்'ன்னு கணேசமூர்த்தி மூலமா கபினி சிதம்பரம் வைகோவிடம் பொய்யான தகவலைச் சொல்ல வச்சது தெரிஞ்சுச்சு. அதனால், நாங்க 13 நிர்வாகிகளும் அதன்பிறகு மாவட்டச் செயலாளர் போட்ட மூன்று மாவட்டக் கழகக் கூட்டங்களுக்குப் போகலை. நாலாவது கூட்டத்துக்குப் போனோம். அப்பவும் எங்களை அவர் மதிக்கலை. இதற்கிடையில், இரு நிர்வாகிகளிடம் என்னைப் பற்றி, `கட்டப்பஞ்சாயத்து பண்றார்'ன்னு ஒரு மணி நேரத்துக்கு மேலாக போன்ல மோசமாப் பேசினார். அவங்க ரெண்டு பேரும் கபினி சிதம்பரம் பேசியதை என்கிட்டச் சொல்லிட்டாங்க. அதைப்பத்தியும் வைகோவுக்குக் கடிதம் எழுதினோம். அதன்பிறகு போனில் பேசிய அவர், `என்னன்னு விசாரிப்போம்'ன்னார். `கணேசமூர்த்தி அண்ணனை வந்து விசாரிக்கச் சொல்லுங்க'ன்னு சொன்னேன். ஆனா, வரலை. கடந்த மாதம் 21 ம் தேதி திருச்சியில் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நடந்துச்சு. அதுல விசாரிக்கறதா சொல்லி எல்லோரையும் வரச் சொன்னார் வைகோ. எல்லோரும் போனோம். `மாவட்டச் செயலாளர் மீது ஏன் பொய்க் குற்றச்சாட்டை வைக்குறீங்க. கலையரசன் மாவட்டச் செயலாளராக ஆசைப்படுறார். உங்கள மாதிரி ஆளுங்களாலதான் கட்சிப் பேர் கெடுது. கபினி சிதம்பரம்தான் மாவட்டச் செயலாளர்'ன்னு எடுத்த எடுப்பிலேயே பேசினார். கபினி சிதம்பரம் என்னைப் பற்றித் தவறாக போனில் பேசிய நிர்வாகி, வைகோவிடம் உண்மையைச் சொன்னார். ஆனா, அதை காதில் வாங்காத வைகோ, `ஆமா இவன் அரிச்சந்திரன் வீட்டுக்குப் பக்கத்துவீட்டுக்காரன்'ன்னு இழிவாப் பேசினார். எங்களுக்கு வெறுத்துப் போயிடுச்சு. `கட்சியில் இருந்தா இருங்க'ன்னும் பேசினார். 

2015 ல் அப்போதைய மாவட்டச் செயலாளர் பரணி மணி கட்சியை விட்டுப் போனப்ப, `நீதான் மாவட்டச் செயலாளர். எல்லா ஒன்றியச் செயலாளர்களையும் போய் பாரு'ன்னு என்கிட்டச் சொல்லிட்டு, இன்னொரு பக்கம் கபினி சிதம்பரத்தை மாவட்டச் செயலாளராகப் போட்டவர்தான் வைகோ. அதேபோல், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக என்னை அறிவிச்சுட்டு, கபினி சிதம்பரம் பேச்சைக் கேட்டுகிட்டு, என்னை இரவோடு இரவா மாத்தப் பார்த்தவரும் அவர்தான். இப்படிக் கட்சிக்காக உழைத்த எங்களை கணேசமூர்த்தியின் பேச்சைக் கேட்டுக்கிட்டு, வைகோ தொடர்ந்து அவமானப்படுத்தினார். இதற்கிடையில், `ஆபத்து உதவிகள் பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த என்னை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கினார். பிறகு அதே பிரிவுக்கு இணைச் செயலாளர் ஆக்கினார். கபினி சிதம்பரத்தை அவர்கள் ஆதரிப்பதற்குக் காரணமே கபினி சிதம்பரம் குறிப்பிட்ட சமூகத்தைத் சார்ந்தவர் என்பதால்தான். அதனால், அவர்கள் முழுவதுமா எங்களை அவமானப்படுத்துவதற்குள் நாமே கட்சியை விட்டு விலகிவிடுவோம் என்றுதான் கட்சியை விட்டு விலகுறதா முடிவெடுத்தோம்.  

கரூரில் வைத்துதான், ம.தி.மு.க-வை உருவாக்குவதற்கான முடிவெடுத்தார் வைகோ. ஆனால், தவறான நபர்களின் வழிகாட்டுதலால் அதே கரூரில் எண்ணற்ற ம.தி.மு.கவினரை இப்போ இழந்துள்ளார். அவருக்காக தீக்குளித்த அந்த அஞ்சு பேரின் ஆத்மா அவரை ஒருபோதும் மன்னிக்காது. என்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்களின் ஆலோசனைக்குப் பின் அ.தி.மு.க, இல்லைன்னா அ.ம.மு.கவில் இணைய இருக்கிறோம்" என்றார். 

இந்த விவகாரம் குறித்து ம.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் கபினி சிதம்பரத்திடம் பேசினோம்.

``கலையரசன் நல்ல பையன்தான். நல்லாச் செயல்படுறவர்தான். ஆனா, அவர் ஏன் திடீர்னு இப்படிப் பண்றார்னு புரியலை. நான் வகிக்கும் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற ஆசைப்பட்டார். அது நடக்கவில்லைன்னதும், `மாவட்டச் செயலாளர் தன்னிச்சையா நடக்குறார்', `யாரையும் மதிப்பதில்லை'ன்னு பொய்த் தகவலைப் பரப்பினார். பொதுச் செயலாளருக்கு என்னோட உழைப்பு, கட்சியின் மீதுள்ள அர்ப்பணிப்பு தெரியும். வைகோ நேராக கலையரசனிடம், `உனக்கு மாவட்டச் செயலாளர் பதவியெல்லாம் வேண்டாம். உன்னை என்னோட தம்பி ரவிச்சந்திரனுக்கு அடுத்த சொந்தத் தம்பியா நினைக்கிறேன். உனக்கு மாநில அளவில் பதவி கொடுத்து உயர்த்துறேன்'னு சொன்னார். ஆனால், அதையெல்லாம் கேட்காமல் அவர்தான் தன்னிச்சையாச் செயல்பட்டார். இன்னும் சொல்லணும்னா, கலையரசனை இப்படித் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதே மாநில விவசாய அணி துணைச் செயலாளராக இருந்த அருண் தங்கவேல்தான். அவர் பேச்சைக் கேட்டுப் போனவங்க கடைசியில் அழிஞ்சதுதான் வரலாறு. கலையரசனுக்கும் அந்தக் கதிதான். நிர்வாகிகள் 13 பேர் மட்டும் போயிருக்காங்க. மத்தபடி கரூர்ல ம.தி.மு.க அப்படியேதான் இருக்கு. அரவக்குறிச்சி ஒன்றியத்துல 13 கட்சி கொடிக் கம்பங்களை வெட்டி சாய்ச்சுட்டாங்க. அதை கேள்விப்பட்டுதான், `என் உயிருக்கும் சமமான கொடியைச் சாய்ச்சவங்க நல்லா இருக்கமாட்டாங்க'ன்னு பொதுச்செயலாளர் கொதிச்சுப் போய்ச் சொன்னார். இந்தச் சம்பவங்களுக்கும், கணேசமூர்த்தி அண்ணனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றார்.

ம.தி.மு.க மாநிலப் பொருளாளர் கணேசமூர்த்தியிடம் பேசினோம். ``கலையரசன் நினைச்சது நடக்கலை. அதனால், அவங்க வெளியே போய் இருக்காங்க. வெளியே போனதுக்குக் காரணம் சொல்லணும்லே. அதான் கண்டதையும் சொல்றாங்க. எனக்கும், இந்தச் சம்பவங்களுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. ம.தி.மு.க-வில் சாதி பார்க்கிறோம்ன்னு சொன்னா, பொதுமக்களே சிரிப்பாங்க" என்பதோடு முடித்துக் கொண்டார்.