
அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை! - ஆளும்கட்சி எம்.பி-யின் புலம்பல்
#EnnaSeitharMP
#MyMPsScore
2009 நாடாளுமன்றத் தேர்தல். அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது பெரம்பலூர் தொகுதிக்கான சிபாரிசு பக்கத்தில் மருதராஜா பெயர் இருந்தது. மகிழ்ச்சியோடு நிர்வாகிகள் பலரைப் பார்த்து ஒத்துழைப்புக் கேட்டு, பிரசாரப் பயணத்துக்கும் பிளான் போட்டார் மருதராஜா. அந்த மகிழ்ச்சி சில நாட்கள்கூட நீடிக்கவில்லை. மருதராஜா மாற்றப்பட்டு, கே.கே.பாலசுப்பிரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். விரக்தியில் முடங்கிப்போன மருதராஜாவுக்கு, 2014 தேர்தலில் சான்ஸ் கிடைத்தது. மீண்டும் சீட் வாங்க மருதராஜா காட்டிய முயற்சியை, தன்னை வெற்றி பெறவைத்த பெரம்பலூர் தொகுதிக்குக் காட்டினாரா? ‘‘நான் மட்டும் முயற்சி எடுத்து என்ன செய்வது? என் முயற்சிக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லையே’’ என்று புலம்புகிறார் மருதராஜா.
கிளைச் செயலாளராகத் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர் மருதராஜா. பெரம்பலூர், திருச்சி, கரூர் என மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கிறது பெரம்பலூர் தொகுதி. ‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சியில் பெரம்பலூர் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதற்காக, விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளைத் தாண்டியும் அது வரவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எங்களுக்குத் திருப்பி அளிக்கவுமில்லை’’ எனப் புலம்புகிறார்கள் விவசாயிகள்.
“பெரம்பலூர் தொகுதியின் எம்.பி-யாக இருந்தும் பெரம்பலூர் மாவட்டத்துக்குள் அவர் அலுவலகமே வைக்கவில்லை. திருச்சியில் இருக்கிற அவரின் அலுவலகத்துக்குப் போகச் சிரமமாக இருக்கிறது. தொகுதியில் பெரிய அளவில் எந்த வளர்ச்சிப் பணியையும் எம்.பி செய்யவில்லை. பெரம்பலூர் பகுதியில் விளையும் சின்ன வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. அதைப் பதப்படுத்தி வைக்கக் குளிர்பதனக் கிடங்கு வேண்டும் எனப் பல வருடங்களாகக் கேட்டு வருகிறோம். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டா லும், அதன் முழுப்பலன் இன்னும் பெரம்பலூர் பகுதிக்குக் கிடைக்கவில்லை. அவர் எம்.பி-யான பிறகு பிரமாண்ட வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இதுதான் அவர் தொகுதிக்குச் செய்தது” என்கிறார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அருள்.

தி.மு.க-வைச்சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, “மருதராஜா பெரும்பாலும் டெல்லியில்தான் இருப்பார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது, இதுவரை திறக்கப்படவில்லை. கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்காகக்கூட எம்.பி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை” என்றார்.
‘‘ரயில் பாதையே இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் இருக்கிறது . ஆ.ராசா எம்.பி-யாக இருந்தபோது, ரயில் வழித்தடம் அமைப்பதற்காக சர்வே பணிகளுக்குப் பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு மருதராஜாவிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது அரியலூரிலிருந்து துறையூர் வழியாக நாமக்கல் வரை ரயில் வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வுசெய்ய ரூ.16.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கமிட்டியும் அமைத்துள்ளனர். இம்முறையாவது ரயில் சத்தம் எங்கள் ஊருக்குள் கேட்குமா?’’ எனக் கேட்கிறார்கள் பெரம்பலூர் பகுதி மக்கள்.
எம்.பி-யை ‘ஹைமாஸ் மருதராஜா’ என்றுதான் அவர் சார்ந்த அ.தி.மு.க-வினரே அழைக்கிறார்கள். காரணம் தொகுதி நிதியில் அதிகமாகச் செலவு செய்தது ஹைமாஸ் லைட் அமைப்பதற்குத்தானாம். ‘இதில் அவருக்கு நிறையப் பலன் கிடைக்கிறது’’ என்கிறார்கள் அ.தி.மு.க.-வினர். ‘‘பாடாலூர் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் அருகில் உள்ள குவாரி குட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கான அறிக்கையைத் தயார்செய்து எம்.பி-யிடம் கொடுத்தோம். தொகுதி நிதியிலிருந்து செய்து கொடுத்திருக்கலாம். அவர் செய்து தரவில்லை” என்கிறார் பாடாலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் அ.தி.மு.க பிரமுகருமான பாஸ்கர்.
‘‘2013-ம் ஆண்டு, ‘பெரம்பலூரில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்’ என அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்கான இடமும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேர்வு செய்யப்பட்டது. அதோடு சரி. இதுவரை எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. ‘எந்த நிறுவனமும் தொழில் துவங்க விரும்பவில்லை’ என்று மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், ஜவுளிப் பூங்காவுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இடத்தின் அருகில் தனியார் நிறுவனம் ஒன்று ஜவுளி உற்பத்திப் பணியைச் செய்துவருகிறது. அந்த நிறுவனத்தை அடிப்படையாக வைத்து, மாவட்ட நிர்வாகம் இதற்கான பணிகளை மேற்கொள்ளலாம். அதை இதுவரை செய்யவில்லை. ஜவுளிப் பூங்காவுக்காக, மத்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுத்தருவதாக எம்.பி சொல்லியிருந்தார். அதுவும் நடக்கவில்லை’’ என்றார்கள் ஜவுளி வியாபாரிகள்.
முசிறி - துறையூர் சாலையில் அதிகமாகக் கனரக வாகனங்கள் செல்வதால் அந்தச் சாலையே குண்டும் குழியுமாக உள்ளது. வளர்ந்துவரும் நகரமான குளித்தலையின் பேருந்து நிலையம் இன்றுவரை ஒரு கோயில் இடத்தில் இயங்கி வருகிறது. இதனை மாற்றித்தர வேண்டும் என்று பலமுறை மக்கள் வேண்டுகோள் வைத்தும், எந்தப் பயனும் இல்லை.
பெரம்பலூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில் மத்திய அரசின் நிதியில் மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் மருதராஜாவும் பங்கேற்றனர். ‘‘என் முயற்சியால் இந்தப் பாலம் வருகிறது’’ என்று மருதராஜ் சொல்லிவருகிறார். பி.ஜே.பி-யினரோ, ‘‘மத்திய அமைச்சரிடம் சொல்லி நாங்கள்தான் இதனைக் கொண்டு வந்தோம்’’ என மல்லுக்கட்டுகிறார்கள். பி.ஜே.பி-யின் கோட்டப் பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், “தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து நடக்கும் பகுதிகளை ஆராய்ந்து, அங்கு மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு 3,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அந்த அடிப்படையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏழு இடங்களில் இதுபோன்ற மேம்பாலங்கள் அமைய உள்ளன. மருதராஜா ஏதோ அவர் முயற்சியில்தான் மேம்பாலம் வந்தாகச் சொல்கிறார் என்றால், மற்ற ஆறு மேம்பாலங்களுக்கான அனுமதியை யார் பெற்றுக்கொடுத்தது?” என்று கேட்கிறார்.
‘ஒவ்வொரு எம்.பி-யும் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி தொடங்கிவைத்த திட்டத்தின்படி, பெரம்பலூர் அருகில் உள்ள சிறுவாச்சூர், குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி ஆகிய ஊராட்சிகளை மருதராஜா தத்தெடுத்துள்ளார். இந்த இரண்டுமே நகர்ப் பகுதியை ஒட்டியுள்ள, வருமானம் உள்ள ஊராட்சிகள். இதனால், இங்கு பெரிய அளவில் எந்தத் திட்டத்தையும் மருதராஜா கொண்டுவரவில்லை. ‘‘தெருவிளக்குகள் போட்டார். ஒரு சிறிய பாலத்தைச் சீரமைத்துக் கொடுத்திருக்கிறார். சிறுவாச்சூரில் சாலையை விரிவுபடுத்தும் முயற்சி எடுக்கப்பட்டு அது தோல்வியில் முடிந்துவிட்டது’’ என்றார்கள் சிறுவாச்சூர் பகுதியினர். ‘‘பெரிய அளவில் எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. ஒருமுறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எம்.பி நிதியிலிருந்து விளக்குகள் மட்டும் போடப்பட்டன. இங்கு குடிநீர்ப் பிரச்னை நிலவுகிறது. அது தீர்க்கப்படவில்லை. இந்தக் கிராமத்துக்கு இரு முறை மட்டுமே எம்.பி வந்துள்ளார்’’ என்றார்கள் தண்ணீர்பள்ளி மக்கள்.
இதற்கெல்லாம் மருதராஜா என்ன சொல்கிறார்? “என்னால் என்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்துள்ளேன். ரயில் பாதைக்கு சர்வே பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் ரயில் வரும். டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தில்பாண்டியனைச் சந்தித்து முயற்சி எடுத்து, சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளேன். கட்டி முடிக்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி விரைவில் இயங்குவதற்கான ஆணை வந்துவிடும். வீடற்ற ஏழைகளுக்கு மத்திய அரசு மற்றும் பயனாளிகள் பங்களிப்புடன் கவுள்பாளையத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன. மொத்தம் 2,000 வீடுகளில், 504 வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக, 43 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதியைப் பெற்றுக்கொடுத்தேன். சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட இடம் ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் உள்ளது. அந்த நிலத்தை உரியவர்களுக்கே திருப்பி வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
காமராஜர் ஆட்சியில் துறையூர் - முசிறி பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த ஓர் அணையும் தடுப்பணையும் கட்டத் திட்டமிடப்பட்டு, பிறகு கைவிடப்பட்டது. மத்திய அரசின் ‘சர்பங்கா’ திட்டத்தின் மூலம் இங்கு அணையும் தடுப்பணையும் கட்ட கோரிக்கை வைத்தேன். ஜப்பான் நிறுவனம் ஒன்று இந்தத் திட்டத்தைச் செய்துகொடுக்க முன்வந்துள்ளது. ஆனால், திருச்சி கலெக்டர் அலுவலகத்திலிருந்து அதற்கான பரிந்துரை இதுவரை அனுப்பவில்லை. முதல்வரிடமும் முறையிட்டிருக்கிறேன். அதிகாரிகள் ஒத்துழைத்தால் இந்தத் திட்டம் வரலாற்றுத் திட்டமாக அமைந்துவிடும். லால்குடி நகரில் தேசிய எரிசக்தித் துறையின் மூலம் 200 சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அதிகாரிகள் மூலம் பல்வேறு நிதிகளைக் கொண்டுவர முயற்சி செய்கிறேன். மாநில அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. துறையூரில் மத்தியப் பல்கலைக்கழகத்தின் வளாகம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கட்டடப் பணிகளுக்கான உத்தரவு வந்துவிடும்” என்றார்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- அ.சையது அபுதாஹிர், எம்.திலீபன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி
தொகுதி மேம்பாடு நிதி செலவழித்தல்!
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு எம்.பி-க்கும் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியை மருதராஜா பயன்படுத்திய விவரம் இங்கே...


எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?
மருதராஜா அலுவலகத்தில் மக்களின் கோரிக்கை களுக்கு என்ன ரெஸ்பான்ஸ் இருக்கிறது? பரிசோதித்துப் பார்த்தோம். கிடப்பில் கிடக்கும் ஜவுளிப் பூங்கா, குடிநீர்ப் பிரச்னைகளை நிறைவேற்றக் கோரி, 02.08.18 அன்று எம்.பி அலுவலகத்துக்கு மனு அனுப்பினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்லதுரை. இதற்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. சிறுநீரகப் பாதிப்பு, இதயப் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு எம்.பி சிபாரிசு செய்தால், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவி கிடைக்கும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார், பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூரைச் சேர்ந்த சண்முகம் - கம்சலா தம்பதியின் மகள் லாவண்யா. இவர்களை 07.08.2018 அன்று எம்.பி-யின் வீட்டுக்குச் சென்று கோரிக்கை மனு அளிக்க வைத்தோம். எம்.பி-யின் டிரைவர், ‘‘வீட்டில் மனு வாங்க மாட்டோம். அலுவலகத்தில் கொடுங்கள்’’ என அலட்சியமாகச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் இவர்கள், தங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லியதால், வேண்டாவெறுப்பாக அதை வாங்கியிருக் கிறார் டிரைவர். இதற்கும் எந்தப் பதிலும் வரவில்லை.
மருதராஜாவிடம் இதுபற்றிக் கேட்டபோது, ‘‘நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கேட்டு வந்தால் தயங்காமல் செய்து வருகிறேன். லாவண்யாவின் மனு வந்திருக்கும் என நினைக்கிறேன். பரவாயில்லை. இன்னொரு முறை மனு கொடுக்கச் சொல்லுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன்’’ என மழுப்பலாகப் பதில் சொன்னார்.
எம்.பி எப்படி?
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியுள்ள பெரம்பலூர், துறையூர், குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் 600 பேரைச் சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:


