Published:Updated:

`தாமரை மலர்வதை யார் தடுத்தாலும் விடக் கூடாது!’ - இயக்குநர் விசு

பி.ஜே.பி செல்வாக்கு இருந்த இடங்களிலேயே இத்தனை பெரிய தோல்விகள் என்றால் தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் பி.ஜே.பி-யின் நிலை என்னவாக இருக்கும். எதாவது செய்தாக வேண்டும்.

`தாமரை மலர்வதை யார் தடுத்தாலும் விடக் கூடாது!’ - இயக்குநர் விசு
`தாமரை மலர்வதை யார் தடுத்தாலும் விடக் கூடாது!’ - இயக்குநர் விசு

இன்று வெளியாகி இருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து நடிகரும் இயக்குநரும் பா.ஜ.க உறுப்பினருமான விசுவிடம் பேசினேன். 

``இது தோல்வி. ஒரு மகத்தான தோல்வி. பி.ஜே.பி ஆட்சி செய்த மத்தியப்பிரதேசத்திலேயே இழுபறியாக போய்க்கொண்டிருக்கிறது. ஆட்சி பண்ணிக்கொண்டிருந்த ராஜஸ்தான், சத்தீஷ்கரில் தோல்வி முகம். மிசோரம் மற்றும் தெலுங்கானாவில் பி.ஜே.பி எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை. இதைப் பி.ஜே.பி ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மோடியின் முகத்தை மட்டும் வைத்து ஜெயிக்க முடியாது.

தமிழகம் உட்பட, அந்தந்த மாநிலங்களில் ஈர்ப்புக்கொண்ட, விறுவிறுப்பான, சுறுசுறுப்பான பி.ஜே.பி தலைவர் இருக்கிறாரா என்றால் இல்லை என்ற உண்மையை பி.ஜே.பி ஒப்புக்கொள்ள வேண்டும். சென்னையில் ஆர்.கே.நகர் தேர்தலிலேயே இதைப் பார்த்தோம். பி.ஜே.பி செல்வாக்கு இருந்த இடங்களிலேயே இத்தனை பெரிய தோல்விகள் என்றால் தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் பி.ஜே.பி-யின் நிலை என்னவாக இருக்கும். ஏதாவது செய்தாக வேண்டும். 

தமிழகத்தில் பி.ஜே.பி-யை வலுவாக்க வேண்டும். அதற்குத் தடங்கலாகக் கட்சியின் தலைவரே இருந்தாலும் அவர் அகற்றப்பட வேண்டும். நிச்சயம் நல்லது நடக்கும். நான் மனம் தளரவில்லை. தோல்வியால் துவளவில்லை. எங்கேயோ இருந்த காங்கிரஸ் மேலே வர முடிகிறதென்றால் நாளை பி.ஜே.பி-யும் ஏன் வர முடியாது. தமிழகத்தில் பி.ஜே.பி காலடியே எடுத்து வைக்க முடியாது என்று திராவிடப் பாரம்பர்யம் சொல்கிறது. பி.ஜே.பி காலடி வைக்கும். அதற்கு உண்டான முயற்சிகள் எடுக்க வேண்டும். முயற்சி திருவினையாக்கும். மோடியை நம்புகிறேன். மோடியால் இந்த நாட்டுக்குத் திருப்பம் ஏற்படும் என்று நம்புகிறேன்’’ என்றார்.