Published:Updated:

பப்பு டூ காங்கிரஸ் தலைவர் - நாடாளுமன்றத் தேர்தல்வரை ராகுல் வியூகம் இதுதான்!

பப்பு டூ காங்கிரஸ் தலைவர் - நாடாளுமன்றத் தேர்தல்வரை ராகுல் வியூகம் இதுதான்!
பப்பு டூ காங்கிரஸ் தலைவர் - நாடாளுமன்றத் தேர்தல்வரை ராகுல் வியூகம் இதுதான்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கரங்கள் இன்னும் வலுப்பெற்றால்தான், கார்ப்பரேட் அரசை எதிர்க்க முடியும் என்பதை ராகுல் நன்றாக உணர்ந்திருப்பார். இதை சோனியா விரும்புவாறா என்று தெரியவில்லை. ஆனால் இது ராகுல் 2.0

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர், அந்தக் கட்சிக்கு 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. ராகுலின் வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் வியூகங்களை அவர் எவ்வாறு வகுக்கப் போகிறார்? அவரின் வளர்ச்சி எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம்...

11.12.2017 
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தொடர் தோல்விகளால் சோர்ந்து போயிருந்த காங்கிரஸுக்குப் புதுரத்தம் பாய்ச்ச நினைத்த சோனியா, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் பதவியிலிருந்து விலக, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி, சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

11.12.2018

மிகச்சரியாக ஒருவருடத்தில், ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தன்னை யார் என நிரூபித்திருக்கிறார் ராகுல். `அரசியலில் ஆரம்பம் கூட தெரியாது' என்று தன்னை ஏளனமாகப் பேசிய அத்தனை பேரையும் தன்னுடைய செயலாற்றலால் வாயடைக்கச் செய்திருக்கிறார் `பப்பு' என்று ஏளனப்படுத்தப்பட்ட ராகுல்காந்தி.

மலைவாழ் மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடி, சாமான்யர்களின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, சராசரி அரசியல்வாதிகளுக்கும் தனக்கும் உள்ள வித்தியாசங்களை தன் செயல்களால் நிரூபித்துக் காட்டியவர். பணமதிப்பிழப்பு பிரச்னை முதல் ஜி.எஸ்.டி வரை, மத்திய அரசின் மீதான தன்னுடைய எதிர்ப்பைச் சாமான்யர்களின் குரலாகப் பேசியவர். ஒட்டுமொத்த காங்கிரஸ் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், தன்னுடைய அணுகுமுறையை நிறையவே மாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல்.

ஐந்து மாநிலத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி அங்கு ஆட்சி அமைக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி., பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பி.ஜே.பி மீது இருந்த அதிருப்திதான் இந்தத் தோல்விக்குக் காரணம். `அரசியலில் சாணக்கியன்' என்று பி.ஜே.பி-யால் புகழ்ந்துரைக்கப்பட்ட அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் எந்த மாயாஜாலமும் ஐந்து மாநிலத் தேர்தலில் எடுபடவில்லை. எல்லாவற்றையும் மீறி ராகுல், இந்தத் தேர்தலை எதிர்கொண்ட விதமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

கடந்த ஜூலை மாதம், ஆளும் பி.ஜே.பி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் சார்பாக உரையாற்றிய ராகுல், மத்திய பி.ஜே.பி அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவருடைய பேச்சு, முதிர்ச்சியாக இருந்ததாக அனைவரும் பாராட்டினர். சுமார் இருபது நிமிடங்கள் பேசிய ராகுல், பேச்சின் முடிவில் பிரதமர் மோடியின் இருக்கைக்கே சென்று, அவரைக் கட்டிப்பிடித்துச் சிரித்தது யாருமே எதிர்பார்க்காதது. ராகுலின் இந்தச் செயல் அரசியல் மட்டத்தில் அவருக்கான இமேஜை இன்னும் உயர்த்தியது. 

நாடாளுமன்றத் தேர்தல்.. அதற்கு முன்னதாக, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல். எல்லாவற்றையும் ஒற்றையாளாகக் காங்கிரஸுக்காக சுமக்கத் தயாரானார். மோடி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு, மாநிலக் கட்சிகளை மதிக்காத பி.ஜே.பி-யின் போக்கு, மதவெறி அரசியல் என எல்லாவற்றையும் தன்னுடைய பிரசார மேடையாக்கி, வெற்றிக்கான முதல்படியை எடுத்துவைத்திருக்கிறார் ராகுல். 

ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், மோடி பிரசாரம் செய்த இடங்களில் கிடைத்த வெற்றி விகிதத்தைவிடவும், ராகுல் பிரசாரம் செய்த இடங்களில் கிடைத்த வெற்றி விகிதம்தான் அதிகம். இந்தத் தேர்தலில் மோடியின் செல்வாக்கு தூக்கி வீசப்பட்டிருக்கிறது. அதை ராகுல் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இதே இமேஜை ராகுல் தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறார்.

இதைத்தான் தற்போது நடந்துமுடிந்துள்ள ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் செய்திருக்கிறார் ராகுல். மத்திய பிரதேசத்தில் நடந்த டிஜிட்டல் ஊழலையே பிரசாரத்தின் மையமாகப் பேசினார். பெரும் முதலாளிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்த பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுதான் பேசிய பெரும்பாலான பிரசாரக் கூட்டங்களில் முன்வைத்தார். தொண்ணூறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில், பி.ஜே.பி பயன்படுத்திய அதே மதம் சார்ந்த பிரசாரத்தை ராகுலும் கையிலெடுத்தார். ராஜ்கட்னாவில் உள்ள குருத்வாராவில் ஆதரவாளர்களுடன் சென்று வழிபாடு நடத்தினார். 

 ``மோடி ஆட்சியில் ஒரு முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், மன்மோகன் சிங், நாட்டின் பிரதமராக இருந்தபோது, 3 முறை எதிரிகள் மீது ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆபரேஷனை மேற்கொண்டது. மன்மோகன் பிரதமராக இருந்தபோது, அவரிடம் வந்த ராணுவம், `பாகிஸ்தான் நம் மீது தொடுத்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த அனுமதி தாருங்கள். இது ரகசியமாகவே இருக்கட்டும்' என்று கூறினர். அதற்கு மன்மோகன் சிங்கும் சம்மதம் தெரிவித்தார். ஆனால், ராணுவ விவகாரங்களில் மூக்கை நுழைத்த மோடியோ, அதை அரசியலாக்கி விட்டார். ராணுவ நடவடிக்கை ஒன்றை அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டார் மோடி'' என்று அரசியல்மட்டத்தில் காரசார விவாதத்தைத் தொடங்கிவைத்தார் ராகுல். மோடியை நேரடியாகத் தாக்கிப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்ட ராகுல், அதில் என்னமாதிரியெல்லாம் பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும் என்பதை தெளிவாகக் கையாண்டார்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பெட்ரோல்-டீசல் விலை, கேஸ் மானியம், டிஜிட்டல், கார்ப்பரேட் கொள்ளை என எல்லாவற்றையும் மக்களிடம் மீண்டும் பேசுபொருளாக்கி, அதன்மூலம் பி.ஜே.பி-யை சரிவை நோக்கி அழைத்துச் செல்வதே ராகுலின் அடுத்த திட்டம். வடமாநிலங்களில், அயோத்தியில் கோயில் கட்டுவதாகப் பி.ஜே.பி சார்பில் அறிவிக்கப்பட்டது. ராமர் சென்ற இடங்களில் எல்லாம் சாலை அமைக்கப்படும் என்று `நானும் ஹிந்து' என்று பி.ஜே.பி-யின் அத்தனை பால்களையும் இன்று சிக்ஸர்களாக்கியிருக்கிறார் ராகுல் காந்தி.

தெலுங்கு தேசம், தி.மு.க. உள்ளிட்ட மாநில அளவில் செல்வாக்குமிக்க கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன. மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பிரமாண்டக் கூட்டணியை ஏற்படுத்தி வெற்றிக்கு இட்டுச்செல்வார் ராகுல் என்று எண்ணுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால் ராகுல், மாநிலக் கட்சிகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுப்பார் என்பதைப் பொறுத்தே, இனிவரும் தேர்தல்களில் வெற்றி தீர்மானிக்கப்படும். பதவியில் அதிக நாட்டமில்லாததுபோல் காட்டிக்கொள்ளும் ராகுல், பிரதமர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி அல்லது மாயாவதி என்று யாரோ ஒருவரை முன்னிறுத்தியே காய்நகர்த்துவார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கரங்கள் இன்னும் வலுப்பெற்றால்தான், கார்ப்பரேட் அரசை எதிர்க்க முடியும் என்பதை ராகுல் நன்றாக உணர்ந்திருப்பார். இதை சோனியா விரும்புவாரா என்று தெரியவில்லை. ஆனால் இது ராகுல் 2.0 - சாத்தியப்படுத்திக்காட்டுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு