Published:Updated:

ராகுல் தலைவரான பின் கிடைத்த முதல் வெற்றி; மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்!

ராகுல் தலைவரான பின் கிடைத்த முதல் வெற்றி; மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்!
ராகுல் தலைவரான பின் கிடைத்த முதல் வெற்றி; மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்!

காங்கிரஸ் கட்சி, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கூடப் பெற முடியாத நிலையில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகான நான்காண்டுகளில் மாநிலத் தேர்தல்களிலும் தோல்விகள் தொடர்கதைகளாகின. ராகுல் தற்போது கட்சித் தலைவரான பின் முதல் வெற்றியாக ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களின் வெற்றி அமைந்துள்ளது.

பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் வந்த போதிலும் , கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மாடல் என முன்வைக்கப்பட்ட குஜராத் சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்தே ராகுல் தன் பிரசாரப் பணியைத் தொடங்கினார். மோடியின் குஜராத் மாடல் போலியானது வளர்ச்சி அற்றது என்பதே அவருடைய பிரசாரமாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் பலதரப்பட்ட தலைவர்களிடமும் மக்களிடமும் செல்வாக்கை உயர்த்திக் கொண்ட தருணம் அது.. கிட்டத்தட்டத் தேர்தல் முடிந்த கையோடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

ராகுல் காந்தியின் குஜராத் தேர்தல் பிரசாரங்களும் வியூகங்களும் புதிதாக அமைந்தன. தலித் மக்களுக்காகப் போராட்டங்கள் நடத்திய ஜிங்னேஷ் மேவானி(35) , படேல் மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டங்கள் நடத்திய ஹர்திக் பட்டேல்(24) , இதர பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து உருவான அபிலேஷ் தாக்கூர்( 43) போன்ற இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துத் தேர்தல் வியூகத்தையே மாற்றினார்.

அதே நேரத்தில் ராகுல் காந்தி வகுப்புவாதம் என்ற அடிப்படையில் ஓட்டுகளைச் சேர்க்க நினைக்கிறார் என்பன போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அதேபோல் பிரசாரத்தின் போது அவர் கோயில்களுக்குச் சென்றதும் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டது. `தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக ராகுல் காந்தி கோயிலுக்குச் செல்கின்றார்’ என பாஜகவின் பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் குற்றம் சாட்டினார். ராகுல் தலைவர் பதவியேற்றவுடன் வெளியான குஜராத் முடிவுகளில் காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் மோடியின் கோட்டையாக விலங்கிய குஜராத்தில் கடந்த தேர்தலை விட அதிக இடங்கள் பிடித்தது பாஜகவுக்கு நெருக்கடியாக கொடுத்தது.

அடுத்த ஆறு மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில். சமீபத்தில் நடந்து முடிந்த  ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது. வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களை மையமாக வைத்து ராகுல் காந்தி கூட்டணிகளையும், பிரசாரங்களையும் கூட மேற்கொண்டார்.

மோடியின் பிரசாரங்கள் பிரமாண்டமாகக் காட்டப்பட்ட நிலையில், ராகுலின் பிரசாரம் காங்கிரஸின் முன்னோடி காந்திய பாதையை நோக்கியதாக அமைந்தது. சாதாரண வெள்ளை ஜிப்பா உடன் வளம் வந்தார். கர்நாடகாவில் தெருவோரக் கடைகளில் அமர்ந்து தேநீர் குடித்த வீடியோ இணையதளங்களில் பரவியது. தன்னோடு செல்ஃபி எடுத்துக்கொள்ள நினைப்பவர்களின் செல்போன்களை வாங்கி புகைப்படம் எடுத்துக் கொடுத்தார் அவரின் எளிமையான அணுகுமுறைகள் அவருக்கான செல்வாக்கை வலுப்பெறச் செய்தன.

மற்றொரு புறம், காங்கிரஸ் பாஜகவின் மீது வைக்கும் குற்றச்சாட்டு காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிரசாரங்கள். அதை உடைப்பதாக அமைந்தது ராகுல் காந்தியின் பல்வேறு நடவடிக்கைகள். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது அந்த மாநில காங்கிரஸ் தலைவர்களோடு கோயிலுக்குச் சென்றார். அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கோயிலில் பூசாரி சாதியைக் கேட்க `நான் காஷ்மீரைச் சார்ந்த கவுல் வகுப்பைச் சார்ந்தவன், என் கோத்திரம் தத்தாத்ரேயா’ எனக்கூறிய செய்திகளும் வெளியாகின. எந்தப் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாலும் அங்கே உள்ள கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

மத்திய பிரதேசத் தேர்தல் அறிக்கையில் பாஜகவைப் போல் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பசு மடம் அமைத்துத் தரப்படும் என்ற வாக்குறுதிகளைக் காங்கிரஸ் வழங்கியுள்ளது. இந்தச் சம்பவங்கள் பாஜகவை வீழ்த்த மென்மையான இந்துத்துவா கையில் எடுக்கின்றாரா ராகுல் காந்தி என்று அவர்களோடு கூட்டணியில் உள்ளவர்களே கேட்கிறார்கள்,.

ராகுலின் பாட்டி இந்திரா காந்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 42-வது சீர்திருத்தத்தைக் கொண்டு வந்து `மதச்சார்பற்ற’ (secular) என்ற வார்த்தையை அரசியலமைப்பின் முகவுரையில் சேர்த்தார். தன்னைக் கடைசி வரை ஒரு நாத்திகன் என அறிவித்துக்கொண்டவர் நேரு. அவர்களின் வழியில் வந்த ராகுல் தேர்தல் பிரசாரங்களில் கொள்கை குழப்பத்தில் மாட்டியுள்ளாரா என்ற கேள்விகள் எழுகின்றன.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ``அது என்ன சாஃப்ட் தோசை, சாதா தோசை மாதிரி; சாதா இந்துத்துவா சாஃப்ட் இந்துத்துவா’ எனக் காங்கிரஸைக் கண்டித்தார். இந்தத் தேர்தல் முடிவுகள் ராகுலின் வருங்கால அரசியலுக்கு நம்பிக்கை அளிப்பவையாக அமைந்தாலும், அவரின் செயல்பாடுகள் காங்கிரஸின் முன்னோடிகளான காந்தி, நேரு, காமராஜர் ஆகியோரின் கனவுகளைப் பாதுகாப்பதாக அமைதல் அவசியம்.

கொள்கைகளுக்குச் செயல் வடிவம் அளிக்கவே தேர்தல் வெற்றிகள்; தேர்தல் வெற்றிகளுக்காகக் கொள்கைகள் அல்ல..!