Published:Updated:

` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது!' - காளான், இமயமலை பேச்சால் தகிக்கும் அ.ம.மு.க.

அனைவருமே கொஞ்சம் இறங்கி வர வேண்டும் என்றுதான் சொல்கிறேன். எதுவுமே நினைத்தால் முடியும். ஜெயலலிதா சொன்ன சொல்லை இவர்கள் மதிக்கிறார்களா... இல்லையா...?

` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது!' - காளான், இமயமலை பேச்சால் தகிக்கும் அ.ம.மு.க.
` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது!' - காளான், இமயமலை பேச்சால் தகிக்கும் அ.ம.மு.க.

` அ.தி.மு.கவுடன் அ.ம.மு.க இணையுமா?' என்ற விவாதம் அனைத்து தளங்களிலும் நடந்து வருகிறது. `காளானுடன் இமயமலை இணைய முடியுமா?' என நேற்று அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த விளக்கம், தினகரன் தரப்பினரைக் கொதிக்க வைத்துள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். 

இணைப்பைப் பற்றிப் பேசினால், உங்களைக் `காளான்' என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்? 

`` அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு ஆகிய இருவரும் கொஞ்ச நாள் வாயை அடக்கி, மௌனமாக இருந்தாலே விரைவில் நல்லது நடக்கும். மிகவும் மேதாவி போலப் பேசினால், டெபாசிட் கூட வாங்க முடியாது. அதை அவர்கள் இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். எதார்த்த நிலவரத்தை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் பெரியவர்கள் என்று பேசவில்லை. பிராக்டிக்கலாகப் பேசுகிறோம். இணைப்பு நடக்கின்ற வரையில் பேசாமல் இருந்தாலே போதும். மரணிப்பதற்கு ஒரு மாதம் முன்பாக சட்டசபையில் ஜெயலிலதா பேசியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ` நான் இறந்த பிறகும் 100 ஆண்டுகளுக்கு அண்ணா தி.மு.க ஆட்சியமைக்கும்' என தெய்வ வாக்காகப் பேசிவிட்டுச் சென்றார். இப்படிப் பிரிந்து கிடந்தால் எப்படி ஆட்சியமைக்கும்? அம்மா சொல்லுக்கு இவர்கள் மதிப்பு கொடுக்கிறார்களா. கொஞ்சம் விட்டுக் கொடுத்து வாருங்கள் என இரண்டு தரப்பையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்". 

நீங்கள் சொல்வது தினகரனுக்கும் சேர்த்துதான் என எடுத்துக்கொள்கிறேன். ஆனால், இணைப்பு முயற்சியை தினகரன் விரும்பவில்லை என்கிறார்களே?

`` அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது. இந்தக் கட்சியை அழிப்பதற்காக நாங்கள் வெளியேறவில்லை. `முதலமைச்சரை மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கையோடுதான் ஆளுநரை சந்தித்துக் கடிதம் கொடுத்தோம். இந்த விவகாரம் எங்கேயோ போய் நின்றுவிட்டது. கடந்த வாரம் நடந்த ஜெயலலிதா நினைவு நாளில் அ.ம.மு.க சார்பில் வெளியான அறிக்கையில், `எங்களிடம் இருந்து போன அ.தி.மு.க-வையும் இரட்டை இலையையும் மீட்டெடுப்பதுதான் லட்சியம்' எனக் குறிப்பிட்டிருந்தோம். அந்த வழியில்தான் பயணிக்கிறோம்". 

முதல்வர் பதவி, ஒருங்கிணைப்பாளர் பதவியை இருவரும் விட்டுத் தர வாய்ப்பில்லாதபோது, இணைப்பு முயற்சியை தினகரன் எப்படி விரும்புவார்? 

`` அனைவருமே கொஞ்சம் இறங்கி வர வேண்டும் என்றுதான் சொல்கிறேன். எதுவுமே நினைத்தால் முடியும். ஜெயலலிதா சொன்ன சொல்லை இவர்கள் மதிக்கிறார்களா...இல்லையா...என்பதை அவர்களிடமே கேளுங்கள். சட்டசபையில் அம்மா பேசிய வார்த்தைக்கு இவ்வளவுதான் மதிப்பா?".  

அப்படியானால், தினகரன் என்ன மனநிலையில் இருக்கிறார்? 

`` அ.தி.மு.க-வில் சின்னம்மா பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்ற மனநிலையில்தான் எங்கள் அமைப்பின் தொண்டர்கள் இருக்கிறார்கள். தினகரனும் இதே மனநிலையில்தான் இருக்கிறார். புதிதாகக் கட்சி தொடங்கி மந்திரியாக வேண்டும் என்பதெல்லாம் என்னுடைய நோக்கம் இல்லை. ஆரம்பகாலத்தில் இருந்தே நாங்கள் அண்ணா தி.மு.க-தான். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அ.தி.மு.கவில் இருக்கிறோம். இரண்டு அணியாகப் பிரிந்து சேவல் சின்னத்தில் ஜெயலலிதா நின்றபோதுகூட, அவர் பக்கம்தான் நின்றோம். இத்தனை ஆண்டுக்காலம் அந்தக் கட்சியில் சிறு பிளவுகூட எங்களுக்கு வந்ததில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் பிரிந்து நிற்கிறோம். அம்மாவுக்குப் பிறகு சின்னம்மா பின்னால் போனோம். அவர் அம்மாவுக்குப் பக்கபலமாக உழைத்தவர். அவரையே நீக்க வேண்டும் என ஆட்சியில் இருப்பவர்கள் சொன்னதால்தானே பிரிய நேரிட்டது". 

மக்கள் மத்தியில் அ.ம.மு.க நிலைபெற்றுவிட்டதால், அ.தி.மு.கவில் இணைவதை சிலர் விரும்பவில்லை என்கிறார்களே? 

`` அ.ம.மு.க என்ன தனியாக வளர்ந்துவிட்டதா? அண்ணா தி.மு.க தொண்டர்கள் சேர்ந்ததால்தான் அது வளர்ந்தது. எங்கள் பக்கம் 75 சதவிகித அ.தி.மு.க தொண்டர்கள் உள்ளனர். அதனால்தான் அ.ம.மு.க தனித்துத் தெரிகிறது". 

தகுதிநீக்க வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? 

`` எங்களுக்குத் 90 நாள்கள் அவகாசம் இருக்கின்றன. ஜனவரி 20-ம் தேதிக்குள் நாங்கள் அப்பீல் செய்துவிடுவோம். `தேர்தலை நிறுத்தக் கூடாது; வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யக் கூடாது' என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைக்க இருக்கிறோம். இதைப் பற்றி துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடமும் பேசியிருக்கிறோம். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்". 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? 

`` அவர் கொஞ்சம் மனவருத்தத்தில் இருக்கிறார். என்ன பிரச்னைகள் என்பதையும் அவர் சொல்ல மறுக்கிறார். தி.மு.க பக்கம் போவதற்கான முடிவில் அவர் இல்லை".