Published:Updated:

தினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன்? - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்

பா.ஜ.க தோல்வியடைந்த 12 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் கருத்து தெரிவித்துவிட்டன. இவர்கள் மூவர் மட்டும் பேசாமல் மௌனம் சாதிக்கிறார்கள்.

தினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன்? - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்
தினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன்? - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்

பா.ஜ.க-வின் தேர்தல் தோல்வியை மையமாக வைத்து ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது தி.மு.க தலைமை. `தேர்தல் முடிவுகள் வெளியாகி 12 மணிநேரம் கழிந்தும் சில தமிழகக் கட்சிகள் இதுகுறித்துப் பேசவில்லை. இவர்களின் மதச்சார்பற்ற தன்மை என்பது இதுதான்' என ராகுல் கவனத்துக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். 

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் கடுமையான பின்னடைவைச் சந்தித்திருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களில் பா.ஜ.கவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது காங்கிரஸ். தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சி, வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தாலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கும் இடையே சிறிதளவே மாறுபாடு உள்ளது. இருப்பினும் 114 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ். ஐந்து மாநிலத் தேர்தலில் கிடைத்த தோல்வியைக் குறிப்பிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ` இது வெற்றிகரமான தோல்வி' என்றார். 

அதேநேரம், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ` பாசிச பா.ஜ.க அரசுக்கான நமது எதிர்ப்பையும் கூட்டணியையும் வலுப்படுத்த இந்த வெற்றி உதவும்' எனக் குறிப்பிட்டார். இதே அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்துள்ளனர். `பா.ஜ.க-வுக்கு ஏற்பட்ட பின்னடைவு' என ரஜினியும் தன் கருத்தைப் பதிவு செய்தார். ஆனால், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து தினகரனோ, ராமதாஸோ, விஜயகாந்தோ எந்தக் கருத்தையும் கூறாமல் இருப்பது அரசியல்ரீதியாக சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதைப் பற்றி நம்மிடம் விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` நாடே எதிர்பார்த்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து இவர்கள் மூவரும் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி வெற்றி பெற்றது குறித்து சந்திரசேகர ராவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். 

அந்தக் கடிதத்தில், `விவசாயம், பாசனம், கல்வி, சுகாதாரம், தொழில்துறை, வேலைவாய்ப்பு  உள்ளிட்டவற்றில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி, பல சாதனைகளைப் படைத்திருக்கிறீர்கள். அதற்கான பரிசாகத்தான் பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கு முதல்முறையாக நடத்தப்பட்ட தேர்தலிலும் மக்கள் உங்களையே தேர்வு செய்துள்ளனர். அந்த வகையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களின் மக்கள் பணியும் முற்போக்குத் திட்டங்களும் தொடர வேண்டும். இரண்டாவது முறை முதல்வராக பதவியேற்கவுள்ள உங்களுக்கும் அமைச்சரவை சகாக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டவர், பா.ஜ.க-வுக்குக் கிடைத்த தோல்வி குறித்தோ காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றி பற்றியோ எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை" என்றவர், 

`` தமிழகக் கட்சிகளின் மௌனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துக்கு தி.மு.க நிர்வாகி ஒருவர் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ` பா.ஜ.க-வின் தோல்வி குறித்து தமிழகக் கட்சிகள் தெரிவித்த கருத்து பற்றி உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இதைப் பற்றி உங்கள் கட்சியின் மாநிலத் தலைமை சொல்கிறதோ இல்லையோ நாங்கள் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். கூட்டணிக்குள் தினகரன் வந்தால் வரவேற்போம் என ஆ.ராசா பேட்டி கொடுத்ததற்குக் காரணம், நீங்கள் கூறியதன் அடிப்படையில்தான். அவரைச் சேர்த்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் ரிசல்ட் குறித்து தினகரன் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. 

காங்கிரஸ் கூட்டணியை எதிர்பார்த்த ராமதாஸும் கருத்து சொல்லவில்லை. இவர்கள் இருவரும் மோடி எதிர்ப்பில் உறுதியாக இல்லை. தே.மு.தி.கவும் உறுதியாக இல்லை. இவர்கள் உறுதியற்றவர்கள் என்பதை இதன்மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவர்கள் பா.ஜ.க-விடம் கூட்டணி வைப்பதற்கும் தயங்க மாட்டார்கள். பா.ஜ.க தோல்வியடைந்த 12 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் கருத்து தெரிவித்துவிட்டன. இவர்கள் மூவர் மட்டும் பேசாமல் மௌனம் சாதிக்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகள் மட்டுமே பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துள்ளன' எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார்" என்றார் விரிவாக.