Published:Updated:

`அதீத நம்பிக்கை...சொன்னதைக் கேட்பவர்!' - சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI

`அதீத நம்பிக்கை...சொன்னதைக் கேட்பவர்!' - சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI
`அதீத நம்பிக்கை...சொன்னதைக் கேட்பவர்!' - சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI

ஒரே ஒருமுறை துறைமாற்றி நியமிக்கப்பட்டவரை 2014-ல் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு வருவாய் செயலளராக மீண்டும் நிதித்துறைக்குள் அழைத்து அரவணைத்துக் கொண்டது. அந்த வகையில் சக்தி காந்ததாஸ் கிட்டத்தட்ட இந்திய நிதித்துறையின் செல்லப்பிள்ளை.

க்திகாந்த தாஸ், தமிழகக் கேடரைச் சேர்ந்த 1980 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. வரலாறு முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் இவர் பணியாற்றியதெல்லாம் வருவாய் மற்றும் பொருளாதாரத் துறையில்தான். ரிசர்வ் வங்கியின் கடந்த முப்பது வருட வரலாற்றில் முதல்முறையாக அதன் கவர்னர் தானாகவே முன்வந்து ராஜினாமா செய்தார். அதையடுத்து சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சக்திகாந்த தாஸுக்கு 'அரசுடன் பிணைக்கப்பட்ட காந்தம்' போன்ற வரலாறு இருக்கிறது என்பதில்தான் சுவாரஸ்யம். ஆம், எந்த இடத்திலும் அரசு அவரை விட்டுக்கொடுத்ததே இல்லை என்று சொல்லலாம். கடந்த 2017-ல் நடந்த ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக அதன் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கும் குழுவின் தலைவராக (Development sherpa) தாஸ்தான் நியமிக்கப்பட்டார். தன் 37 வருட ஐ.ஏ.எஸ் பணியின்போது பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் என முக்கியமான நிதி அமைச்சர்களின் கீழ் இணைச் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் இறுதி ஆண்டில் ரசாயனத் துறைச் செயலாளராக ஒரே ஒருமுறை துறை மாற்றி நியமிக்கப்பட்டவரை 2014-ல் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு, வருவாய்த் துறைச் செயலாளராக மீண்டும் நிதித் துறைக்குள் அழைத்து அரவணைத்துக் கொண்டது. அந்த வகையில் சக்திகாந்த தாஸ் கிட்டத்தட்ட இந்திய நிதித்துறையின் செல்லப்பிள்ளை எனப்படுகிறார். 

அதற்குக் காரணமும் இருக்கிறது, ``சக்திகாந்த தாஸ் மிகவும் மென்மையானவர். அரசு தெரிவிக்கும் எந்தவித ஐடியாக்களையும் கண்மூடித்தனமாக ஒதுக்காதவர். நிதித்துறைக்குள் ஏற்படும் எவ்வித முரண்பாடுகளையும்  சமாளிக்கக் கூடிய திறன் உடையவர். அதனால்தான் அவரைக் கொண்டு பணமதிப்பு நீக்கத்தை எளிமையாகச் செயல்படுத்த முடிந்தது. காங்கிரஸ் திட்டமிட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பையும் சில மாற்றங்களுடன் பாரதிய ஜனதா கட்சியால் அமல்படுத்த முடிந்தது” என்று அவரை அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.  

உண்மையில் மத்திய அரசு கடந்த 8 நவம்பர் 2016-ல் தனது புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் குறித்து அறிவித்த நிலையில் அதை வெளியிட்டவர் சக்திகாந்த தாஸ்தான். பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து கடந்த மே 2017 வரை ரிசர்வ் வங்கிக்கும் இந்திய நிதித்துறைக்கும் வங்கியில் வைக்கப்படும் இருப்புத் தொகை தொடர்பாகத் தொடர்ந்து முட்டல்களும், மோதல்களும் எழுந்துவந்த நிலையில் சக்திகாந்த தாஸ், அரசுத் தரப்பிலிருந்து அசையாத உறுதியுடனும் தன் பதவிக்காலத்தின் இறுதிவரை ஆதரித்தவர் என்று சொல்லப்படுகிறது. தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்படும் நிலையில் அரசுடன், ரிசர்வ் வங்கி எளிதில் சமரசச் சூழலுக்கு நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மற்றொரு காரணமாக, சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நிலம் வாங்குவதற்காக சக்திகாந்த தாஸ் உதவினார் என்பதாகப் பாரதிய ஜனதா கட்சியின் சுப்ரமணியசாமியே ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தபோது,  நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாமாகவே முன்வந்து தாஸுக்கு ஆதரவாகப் பேசினார். அந்தளவுக்கு அவருக்கு பி.ஜே.பி-யின் செல்வாக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஆனாலும், மத்திய ரிசர்வ் வங்கி தற்போதுவரை சந்தித்துக் கொண்டிருக்கும் பண இருப்புப் பிரச்னைகளுக்கு அரசின் வரவு, செலவுகளின் மீதும் முதலீடுகளின் மீதும் பிரதமர் மோடி கவனம் கொள்ள வேண்டுமே ஒழிய ரிசர்வ் வங்கி கவர்னரை மாற்றுவதால் தீர்வு கிடைத்துவிடுமா? ஏற்கெனவே நிதித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அஜய் நாராயண் ஜா கூட சக்திகாந்த தாஸ் போல பொருளாதார ஆட்சிப்பணி அனுபவம் மட்டுமே உடையவர், பொருளாதாரம் சார்ந்த கல்வியியல் நுணுக்கங்கள் அறியாதவர். இப்படியிருக்கும்போது முழு அதிகாரமும் நிதியமைச்சர் வசம் செல்லுமா என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு