Published:Updated:

``நீங்கள் தனிக்கட்சி தொடங்குவது நல்லது!” - தமிழிசைக்கு இளங்கோவன் அட்வைஸ்

``நீங்கள் தனிக்கட்சி தொடங்குவது நல்லது!” - தமிழிசைக்கு இளங்கோவன் அட்வைஸ்
``நீங்கள் தனிக்கட்சி தொடங்குவது நல்லது!” - தமிழிசைக்கு இளங்கோவன் அட்வைஸ்

ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஈரோட்டில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

ஈரோடு மூலப்பட்டறை பகுதியிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றபோது, ‘மோடிக்கு இவர் சரி சமமாக இருப்பாரா... என்றெல்லாம் பலரும் பேசினார்கள். ஆனால், இன்றைக்கு மோடியை வீழ்த்தக்கூடிய மிகப்பெரிய சக்தியாக ராகுல் காந்தி மாறியிருக்கிறார். ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பா.ஜ.க-வின் மிகப்பெரிய கோட்டைகளாகத் திகழ்ந்தவற்றை, ராகுல் காந்தி தகர்த்திருக்கிறார். இன்னும் நான்கு மாதங்களில் நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலிலும், காங்கிரஸை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் பலம் ராகுல் காந்திக்கு உண்டு.

காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிபெறும் என்பது மட்டுமல்ல, ராகுல் காந்தி விரைவில் இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கான நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ராகுல் காந்தியை சிறுவன், பொடியன் என்றும், என்னை வீழ்த்த இந்தியாவில் யாரும் பிறக்கவில்லை என்றெல்லாம் மோடி எள்ளி நகையாடினார். ஆனால், இன்றைக்கு மிகப்பெரிய தோல்வியைப் பெற்றிருக்கின்ற மோடிக்கு, கொஞ்சமாவது ரோஷம் இருந்தால், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 24 மணி நேரமாக எதை எதையோ பிதற்றிக்கொண்டிருக்கிறார். அவரது பேச்சு, மரண ஓலம் போல் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, தமிழிசை பா.ஜ.க-வை விட்டு வெளியேறி, ஒரு தனிக்கட்சி ஆரம்பித்தால், ஏதாவது கொஞ்சம் உபயோகமாக இருக்கும். ஏதாவது ஒரு ஊரிலே, ஒரு வார்டிலே வெற்றிபெறுவதற்கான சூழ்நிலை ஏற்படும். தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தி பிரசாரத்துக்குக் கிடைத்த வெற்றியாகவும், மோடியின் நடவடிக்கைகள், திட்டங்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது” என்றார்.

தி.மு.க கூட்டணி பிரச்னை, குட்கா ஊழல், ரஜினி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, “ தி.மு.க., கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஸ்டாலின் இதை மிகத்தெளிவாக அறிவித்திருக்கிறார். இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை சில செய்திகள் பத்திரிகைகளில் பெரிதுபடுத்தப்படுகின்றன. திருமாவளவனுக்கும் வைகோ-வுக்கும் கருத்து வேறுபாடு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், நேற்றே அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசிவிட்டனர். ஆகவே, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து, 40 இடங்களிலும் வெற்றிபெறும். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு எவ்வளவு எண்ணிக்கை, எந்தெந்த இடங்கள் என்பதெல்லாம், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, ஸ்டாலினும் ராகுல் காந்தியும் பேசி முடிவெடுப்பார்கள். 

குட்கா ஊழலில் அமைச்சர் தவறு செய்திருக்கிறார் என்பதை ஆதாரத்தோடு பிடித்து இருக்கின்றனர். ஆகவே, அவரது உதவியாளரை விசாரணைக்கு அழைப்பது, சமையல்காரரை விசாரணைக்கு அழைப்பது, ஓட்டுநரை விசாரணைக்கு அழைப்பது என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று. நேரடியாக, சம்பந்தப்பட்ட அமைச்சரையே கைதுசெய்து விசாரணை செய்ய வேண்டும்.

கமல் கட்சி ஆரம்பித்துவிட்டார். ரஜினியைப் பொறுத்தவரை அவரது படம் வெளிவரும் முன்பு ஏதாவது ஸ்டன்ட் அடிக்க வேண்டும் என்பதற்காக 20 சதவிகிதம், 30 சதவிகிதம் கட்சிப் பணிகள் முடிந்தது என்று கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கை இல்லை. கட்சி ஆரம்பிக்காமல் நிம்மதியாக இருங்கள்; பா.ஜ.க-வின் வலையில் விழுந்துவிடாதீர்கள் என்பதுதான் ரஜினிக்கு நான் சொல்லும் அறிவுரை” என்றார்.