

சென்னை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிராக செயல்படும் பா.ம.க.வுக்கு வழங்கப்பட்ட அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய இந்திய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரத்தை சேர்ந்த வாராகி ( 38) என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மகாபலிபுரத்தில், கடந்த மாதம் 25ஆம் தேதி பா.ம.க. சார்பில் ‘சித்திரை திருவிழா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த சில நிபந்தனைகளுடன் பா.ம.க.வினருக்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி வழங்கினார். ஆனால், இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பா.ம.க.வினர் மீறியுள்ளனர்.
மேலும் 3 அரசு பேருந்துகள், 3 தனியார் வாகனங்கள், துணை சூப்பிரண்டுகளின் வாகனங்கள் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர். மேலும், மரக்காணத்தில் அப்பாவி தலித் மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை பா.ம.க.வினர் தீ வைத்து எரித்துள்ளனர். நிகழ்ச்சியை இரவு 10 மணிக்குள் முடித்து விடவேண்டும் என்ற போலீசாரின் நிபந்தனையை மீறி, இரவு 11 மணிக்கு மேலும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். மகாபலிபுரத்தில் உள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை சேப்படுத்தியுள்ளனர்.
இத்தனைக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மூன்றாம் தர அரசியல்வாதிகள் கிடையாது. அவர்கள் இருவரும் டாக்டர்கள். ஆனால், அவர்கள் அரசியல் சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறி செயல்பட்டு வருகின்றனர். காதல் திருமணத்தையும், இருபிரிவினரின் ஒற்றுமைக்கும் எதிராக பா.ம.க. கட்சியினர் செயல்படுகின்றனர்.
எனவே இருபிரிவினர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி, அரசியல் சட்டத்துக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிராக செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
##~~## |