Published:Updated:

` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது?!'  - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்

`நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் பத்து தொகுதிகளுக்கான செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்' என அவரிடம் கூறியிருக்கிறார் தினகரன். இதை செந்தில் பாலாஜி ரசிக்கவில்லை.

` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது?!'  - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்
` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது?!'  - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்

ம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு அதிர்ச்சிப் பரிசை அளித்திருக்கிறார் கரூர் செந்தில் பாலாஜி. ` அ.ம.மு.க-வைப் பலவீனப்படுத்த தி.மு.க எடுத்துள்ள முயற்சிகளில் இதுவும் ஒன்று' எனக் கொதிக்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். 

தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசாவும் தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜியும் விமான நிலையத்தில் நடந்து வரும் காட்சிகள் நேற்று வெளியானது. இந்தப் புகைப்படம் வெளிவருவதற்கு பத்து நாள்களுக்கு முன்பாகவே செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்த பலவகைகளில் முயற்சி செய்தார் தினகரன். இதற்காக, தகுதிநீக்கத்துக்கு ஆளான தஞ்சாவூர் ரங்கசாமி, சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் எனப் பலரும் முயற்சி செய்தனர். இவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கே போய் சமாதானம் பேச முயன்றனர். ஒருகட்டத்தில், ` அண்ணே...நான் மனதளவில் மிகவும் நொந்து போய் இருக்கிறேன். மீண்டும் அ.ம.மு.க-வில் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை' என உறுதியாகக் கூறிவிட்டார் செந்தில்.

அவரது நிலைப்பாட்டை அறிந்த அ.ம.மு.க நிர்வாகிகள், ` உங்கள் மனவருத்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் ஒரே ஒருமுறை டி.டி.வி சாரிடம் பேசுங்கள். அதன்பிறகு முடிவெடுத்துக்கொள்ளுங்கள்' எனக் கூறியுள்ளனர். ` அவரிடம் இனி பேசுவதற்கு எதுவும் இல்லை' எனக் கண்டிப்பான குரலில் கூறிவிட்டார் செந்தில் பாலாஜி. இதன்பிறகு செந்தில் பாலாஜியிடம் பேசியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அவரிடமும் தன்னுடைய மனவருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். இதைப் பற்றி நம்மிடம் பேசிய தங்கமும், ` தி.மு.க-வில் நிச்சயமாக செந்தில் பாலாஜி இணைய மாட்டார். உளவுத்துறை மூலமாக இப்படிப்பட்ட தகவல்கள் பரவுகிறது' எனக் கொதித்தார். 

இந்த முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், தினகரன் தரப்பினருக்குத் தெரியாமல் நேரடியாக வந்து ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் செந்தில் பாலாஜி. இந்த சந்திப்பின்போது, `மாவட்டச் செயலாளர் பதவி ப்ளஸ் அமைச்சர் பதவி' என சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இணைப்பு குறித்து தி.மு.க-வில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். செந்தில் பாலாஜி கட்சி மாறுவது குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` அ.தி.மு.க-வில் அதிகார மாற்றம் நடந்த பிறகு சசிகலா தலைமையிலான அணிக்குள் வந்தார் செந்தில் பாலாஜி. அ.ம.மு.க-வில் அமைப்புச் செயலாளர் பதவியை வகித்தார். கொங்கு மண்டலத்தில் தினகரன் நடத்திய கூட்டங்களுக்கு எல்லாம் அவரும் சேர்ந்துதான் செலவு செய்தார். தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகுதான் அவருடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது" என்றவர், 

`` தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு 90 நாள்கள் அவகாசம் உள்ளது. 89-வது நாளில்கூட அப்பீல் செய்யலாம். `தொடக்கத்தில் மேல்முறையீடு செய்வோம்' எனக் கூறிய தினகரன், பின்னர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். `இந்த வழக்கில் உண்மையிலேயே தீர்வு கிடைக்குமா?' என அந்த 18 பேரும் ஆதங்கத்தில் உள்ளனர். இதைப் பற்றி தினகரனிடம் பலமுறை விவாதித்தார் செந்தில் பாலாஜி. இதில் தினகரனோடு சில விஷயங்களில் அவர் முரண்பட்டார். மேலும், `நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் பத்து தொகுதிகளுக்கான செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்' என அவரிடம் கூறியிருக்கிறார் தினகரன். இதற்குப் பதில் கொடுத்த செந்தில், ` இந்தக் கட்சிக்காக இதுவரையில் 52 கோடி ரூபாயை செலவு செய்துவிட்டேன். இதற்கு மேலும் செலவு செய்ய என்னிடம் பணம் இல்லை. மேலும், பத்து தொகுதிகளுக்குச் செலவு செய்வது என்பது முடியாத காரியம்' என தன்னுடைய நிலையை எடுத்துக் கூறினார். இதற்குத் தினகரன் கூறிய சில வார்த்தைகள்தான் பிரிவுக்குக் காரணமாகிவிட்டதாக நிர்வாகிகள் சொல்கின்றனர். இனியும் செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்துவது முடியாத காரியம் என்ற முடிவுக்கு வந்தார் தினகரன்" என்றார் விரிவாக. 

அதேநேரம், இந்த விவகாரம் குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்களோ, `` நாடாளுமன்றத் தேர்தலில் மோடி எதிர்ப்புக் கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டார் ஸ்டாலின். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஆ.ராசா, `எங்கள் அணிக்கு அ.ம.மு.க வந்தால் வரவேற்போம்' எனப் பேட்டி கொடுத்தார். மோடி எதிர்ப்பு வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெறுவதற்காகத்தான் இப்படியொரு அழைப்பு அனுப்பப்பட்டது. தி.மு.கவோடு இணைந்து செயல்பட்டு தன்னை பலவீனப்படுத்திக் கொள்ள தினகரன் விரும்பவில்லை. எனவே, ஆ.ராசாவின் அழைப்புக்கும் அவர் செவிசாய்க்கவில்லை. இந்தக் கோபத்தில்தான் அ.ம.மு.கவை பலவீனப்படுத்த முக்கிய நிர்வாகிகளுக்கு வலைவீசி வருகிறது தி.மு.க. நேற்று செந்தில் பாலாஜியை அழைத்து வரும் புகைப்படத்திலும் ஆ.ராசா தான் தென்பட்டார். கரூரில் இருந்து ஒரு விக்கெட் பறிபோனதைப் பற்றி தினகரனும் கவலைப்படவில்லை. ` போகிறவர்கள் போகட்டும். உண்மையான விசுவாசிகள் எங்கள் பக்கம் இருப்பார்கள்' எனப் பேசி வருகிறார். இனி தி.மு.க-வுக்கு எதிராகத் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் தினகரன்" என்கின்றனர்.