Published:Updated:

`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்!'- பழனியப்பன் எச்சரிக்கையுடன் அட்வைஸ் 

`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்!'- பழனியப்பன் எச்சரிக்கையுடன் அட்வைஸ் 
`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்!'- பழனியப்பன் எச்சரிக்கையுடன் அட்வைஸ் 

தி.மு.க.வில் செந்தில்பாலாஜி சேரப்போவதாகக் குறித்த கேள்விக்கு, ``ஜெயலலிதா காலத்திலேயே அவருடன் இருந்தவர்கள் எத்தனை பேர் போனார்கள். அவர்களின் கதி என்னன்னு பார்த்திருப்பீங்க'' என்று பதில் அளித்தார் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் பழனியப்பன்.

முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க அமைப்புச் செயலாளருமான பழனியப்பன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும் வருமாறு:

மு.க.ஸ்டாலினை சந்தித்துப்பேசியதாகச் செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார். அது குறித்து உங்கள் கருத்து? 

``தி.மு.க.வைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அந்த மாதிரியான செயலுக்கு செந்தில்பாலாஜி போகமாட்டார். பொறுத்திருந்து பார்ப்போம்.''

தலைமையிடம் இருந்து யாராவது அவரிடம் தொடர்புகொண்டார்களா?

``தலைமையில் இருந்து தொடர்புகொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்படவில்லையே. அடுமட்டுமல்ல. இன்றைக்கு அமைச்சராக இருக்கக்கூடியவர்களில் பல பேர், எல்லோரும் எங்களிடம் வந்துவிடுவார்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். யாரும் அவர்களிடம் போகப்போவதில்லை. இந்தியாவில் பார்த்தால் இந்தக் கட்சி நல்ல வளர்ந்து வருகிற இயக்கம். எப்படி குட்டையைக் குழப்பினாலும் அது எடுபடாது. காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளிலிருந்து எத்தனை பேர் சென்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஜெயலலிதா காலத்திலேயே அவருடன் இருந்தவர்கள் எத்தனை பேர் போனார்கள். அவர்களின் கதி என்னன்னு பார்த்திருப்பீங்க. நால்வர் அணியெல்லாம் உருவாக்கினாங்க. மீண்டும் என்னாச்சு.

அவர்கள் மீண்டும் ஜெயலலிதாவிடம் வந்து மண்டியிட்டதால் அவர்களை மன்னித்து பொறுப்புக்கொடுத்தார். சசிகலா தலைமையில் நாங்கள் பயணித்துச் சென்றுகொண்டிருக்கிறோம். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எங்களை நன்றாக வழிநடத்துகிறார். அமைச்சர்கள் எல்லாம் சொல்வார்கள், பிரிந்து சென்றவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று. இவர்கள் எங்களிடம் வந்துசேருகிற வரலாறு வருமேயொழிய இங்கிருந்து யாரும் போகிறதுக்கு வாய்ப்பில்லை. தொண்டர்கள் நன்றாக இருக்கிறார்கள். தமிழக மக்களின் ஆதரவு மிக எழுச்சியாக இருக்கிறது. இதான் இன்றைக்கு இருக்கிற நிலைமை. கட்சிக்குள் எந்தவிதமான பிரச்னையும் கிடையாது.''

ஸ்டாலினின் ஆலோசனையின் பேரில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், செந்தில்பாலாஜியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளதே?

``அந்த மாதிரி இல்லை. இது ஊடகங்கள், செய்தித்தாள்கள் மூலம் வந்த தகவல்கள்தான். இதுகுறித்து முழுத் தகவல் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அவர் மறுப்பு தெரிவித்திருக்கலாம். அந்தமாதிரி இல்லையென்னு. அவர் மறுப்பு தெரிவிக்காதது கஷ்டமாகத்தான் இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம். எங்களைப் பொறுத்தவரை இந்த மாதிரி தவறான ஒரு முடிவு எடுக்க மாட்டார் என்று நினைக்கிறோம். இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு முடிவு எடுத்தார் என்றால் தன்னுடைய தலையிலேயே மண்ணைவாரி போட்டமாதிரிதான் இருக்கும்.''

செந்தில் பாலாஜி மெளனமாக இருக்கக் காரணம் என்ன?

``அவர் வெளியிடங்களுக்கு அதிகமாக செல்லக்கூடியவர். அந்த வகையில் அவர் சொல்லாமல் இருக்கலாம். அவர் சொல்வதற்கு முன்பு நாங்கள் எப்படி சொல்லமுடியும். யார் போனாலும்கூட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் தமிழகத்தை ஆளக்கூடிய இயக்கமாக நிச்சயமாக மாறும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப்போல இந்த இயக்கம் வீறுகொண்டு எழுந்து, எப்போது தேர்தல் வந்தாலும் வெற்றிபெறும். பிரகாசமான எதிர்காலமும் இந்த இயக்கத்துக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்தத் தொகுதிக்குப் போனாலும் தினகரன் பேச்சால் மக்கள் கவர்ந்து, அவரது செயலால் மக்களை ஈர்த்து, அவரது நற்பண்புகளால் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு அடுத்த தலைமுறை அதாவது அ.தி.மு.க.வின் மூன்றாவது தலைமுறை தலைவர் என்ற முறையில் அவருக்குச் சிறப்பான ஆதரவு இருக்கிறது. மேலே போகிறவர்களுக்கு சின்னச்சின்ன இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும்.

சிலர் வேண்டுமென்று குழப்ப வேண்டும் என்பதற்காக குழப்பிக்கொண்டுதான் இருப்பார்கள். அப்படி இருந்தாலும்கூட அதையும்தாண்டி பெரியபெரிய விஷயங்களைக்கூட அவர் சர்வசாதாரணமாக கையாளக்கூடிய திறமைமிக்கவர். எல்லோரும் எங்களிடம் வந்துவிடுவார்கள் என்ற சூழ்நிலை நிச்சயம் ஏற்படாது. அரசுக்கு ஏதாவது சிக்கல் வரும்போது பாருங்க. அங்குள்ளவர்கள் எல்லோரும் எங்களிடம் வந்துவிடுவார்கள். இதுதான் உண்மை. அரசு இருக்கிற வரைக்கும் நாம சந்தோஷமாய் இருக்கலாம் என்ற புண்ணியத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட கொள்கையோ அல்லது ஜெயலலிதாவின் பாதையில் வருகிறமாதிரி அவர்களது நடவடிக்கை சமீபகாலமாக இல்லை. சுயநலத்தோடுதான் செய‌ல்பட்டு வருகிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். என்றைக்குத் தேர்தல் வந்தாலும் யார் போனாலும் பலபேர் வந்தாலும் மீண்டும் ஆட்சி அமைப்பது அ.ம.மு.கதான்.''