Published:Updated:

"இது கோவை கலாட்டா..." -அமைச்சருக்கு விசுவாசம் காட்டும் தி.மு.க-வினர்!?

கருணாநிதி இல்லாத முதல் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது தி.மு.க. ராகுல்காந்தியைப் போலவே, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

"இது கோவை கலாட்டா..." -அமைச்சருக்கு விசுவாசம் காட்டும் தி.மு.க-வினர்!?
"இது கோவை கலாட்டா..." -அமைச்சருக்கு விசுவாசம் காட்டும் தி.மு.க-வினர்!?

ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், தேசிய அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகள்வரை பப்புவாகக் கலாய்க்கப்பட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தற்போது அரசியல் தந்திரி என்று புகழப்பட்டு வருகிறார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும், எப்போது நடக்கும் என்று தெரியாமல் உள்ளாட்சித் தேர்தலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் சட்டமன்றத் தேர்தலும் வரிசைகட்டி நிற்கின்றன. கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதல் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது தி.மு.க. ஐந்து மாநிலத் தேர்தலில் ராகுல்காந்தி மேற்கொண்ட உத்தியைப் போலவே, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஒகி மற்றும் கஜா புயல்களால் சின்னாபின்னமான கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆளுங்கட்சி மீது எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. இதெல்லாம் தி.மு.க-வுக்குச் சாதகம்தான். ஆனால், தி.மு.க-வுக்கு எப்போதும் கொங்கு மண்டலத்தில்தான் கண்டமே. குறிப்பாக, கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிவாகை சூட, ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் தி.மு.க-வால் வெற்றிபெற முடிந்தது. கொங்கு மண்டலத்தில் பிற மாவட்டங்களிலும் இதே நிலைதான் எதிரொலித்தது. இந்நிலையில், ``ஸ்டாலினின் கள ஆய்வு, களையெடுப்பு போன்றவை தி.மு.க-வுக்கு கொங்கு மண்டலத்தில் பலத்தைக் கூட்டியிருக்கிறதா?” என்று கேட்டால், ``இல்லை” என்று தி.மு.க-வினரே அடித்துச் சொல்கின்றனர்.

``எல்லாக் கட்சியிலும் உட்கட்சிப் பூசல் இருப்பது இயல்புதான். ஆனால், கோவை மாவட்ட தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் தலைவிரித்தாடுகிறது. எந்த அளவுக்கு என்றால், சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தொடங்கிப் பல சீனியர் நிர்வாகிகள் தி.மு.க-வுக்கு வேலையே செய்யவில்லை. மாறாக அ.தி.மு.க-வுக்காக வேலை பார்த்தனர். அதனால், இங்கு தி.மு.க `வாஷ் அவுட்' ஆனது. அ.தி.மு.க அரசு மீண்டும் அரியணை ஏறியவுடன், தி.மு.க-வின் சீனியர் நிர்வாகி ஒருவர், `இதில் இரண்டு அமைச்சர்கள் சூப்பர்’ என்று சக நிர்வாகிகள் மத்தியில், தங்களின் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நெகிழ்ந்திருக்கிறார். அந்த அளவுக்கு, ஜாதிய ரீதியாக ஒற்றுமையாக இருக்கின்றனர். இங்கு தி.மு.க-வுக்கு எதிரி அ.தி.மு.க இல்லை. தி.மு.க-வுக்கு எதிரி தி.மு.கவேதான்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை வடக்குத் தொகுதியில் மீனா லோகு வேட்பாளராக நின்றார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல், வீரகோபால் தொடங்கி பலரும் அவருக்கு எதிராக வேலை பார்த்தனர். பல சீனியர் நிர்வாகிகள், வடக்குத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடவேயில்லை. இதனால், ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மீனா லோகு தோல்வியடைந்தார். அதன்பிறகும் அவர் ஆக்டிவாகத்தான் இருந்தார். ஆனால், உட்கட்சிப் பூசலில் அவர் மீது பல்வேறு புகார்களைச் சொல்லி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் பதவியையும் பறித்துவிட்டனர்.

கோவை தெற்கு மாவட்டச் சிறுபான்மை நல உரிமை அணியின் துணை அமைப்பாளராக இருந்தவர் டேனியல் ஜேசுதாஸ். தகவல் உரிமைச் சட்டம் மூலம் ஆளுங்கட்சியின் பல ஊழல்களைத் தோலுரித்து வருகிறார் இவர். ஆனால், அதை சீனியர் நிர்வாகிகள் யாரும் கண்டுகொள்வதுகூட கிடையாது. மேலும், உட்கட்சிப் பூசலால் அவரது பதவியும் பறிக்கப்பட்டுவிட்டது. 

வடவள்ளியில் சொந்தக்கட்சிக்காரர்களை டாமினேட் செய்ய வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க-வினருடன் கைகோத்துக்கொண்டு சிலர் இயங்கி வருகின்றனர். ஆளுங்கட்சியினரின் தூண்டுதலில் காவல்துறையினரை வைத்துப் பொய் வழக்குப் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், `அமைச்சர் வேலுமணியா கைது செய்யச் சொல்கிறார்? அவருக்கு இதுவா வேலை? இதெல்லாம் அவரது உறவினர்கள் செய்யும் வேலை’ என்று தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் இ.பி.ராஜேந்திரன் வெளிப்படையாகவே பேசினார்.

தெற்கு மாவட்ட அவைத் தலைவராக இருக்கும் அக்‌ஷயா நாகராஜ், வியாபார ரீதியாக ஆளுங்கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமாக இருக்கிறார். தொண்டாமுத்தூரில் நாகராஜின் நிலம், அமைச்சர் வேலுமணியின் மாமியார் வேலாத்தாள் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அதேபோல, வடவள்ளியில் உள்ள மற்றொரு சொத்தும் ஆளுங்கட்சியின் பினாமி ஒருவருக்கே விற்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாகராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஓட்டுகூட போடவில்லை. நாகராஜ் ஒத்தகால்மண்டப பேரூராட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவர் தன் பங்குக்கு சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தி தி.மு.க-வுக்கு எதிராக வேலை பார்த்தார். 

இந்த விவகாரம் பூதாகரம் ஆன நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பூத் கமிட்டிக் கூட்டத்தில் அக்‌ஷயா நாகராஜன் ஆதரவாளர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி மோசமான வார்த்தையில் அர்ச்சனை செய்ய, இந்த விஷயம் தலைமைவரை சென்றுவிட்டது. இதையடுத்து, தலைமையும் அவர்களை எச்சரித்துள்ளது. இப்படி, பலர் தி.மு.க-வில் இருந்தாலும், அமைச்சருக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான் விசுவாசமாக உள்ளனர். இவர்களுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து தனிக் கவனிப்பும் இருக்கிறது. மேலும் பலர், இதையெல்லாம் கண்டும் காணாமல் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டால் போதுமென்று இருக்கின்றனர். இதுபோன்ற ஸ்லீப்பர் செல்களை களையெடுத்துவிட்டு, தி.மு.க-வுக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தால்தான் கோவையில் உதய சூரியன் உதிக்கும்” என்கின்றனர் கலைஞர் காலந்தொட்டுக் கட்சியில் இருந்துவரும் அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகள்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அக்‌ஷயா நாகராஜனிடம் பேசியபோது, ``அப்படி எல்லாம் இல்ல. நான் ரியல் எஸ்டேட் பண்றேன். எங்க கட்சிக்காரங்கக்கிட்ட மட்டுமா பிசினஸ் பண்ண முடியும்? இடம் வாங்கறவங்க யாருன்னு முழுசா விசாரணை பண்ண முடியாது. குறை சொல்றவங்க சொல்லிட்டேதான் இருப்பாங்க. தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க வெற்றி பெறுவது உறுதி” என்றார். 

114 அடி உயரத்தில் கொடி அமைத்ததைவிட, 234 தொகுதிகளையும் தி.மு.க எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதில்தான் ஸ்டாலினின் ஆளுமை தெரியவரும்.