Published:Updated:

`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்?’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்

வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் யார் யாரெல்லாம் போட்டியிட வேண்டும் என்பதையும் முதல்வரே முடிவு செய்கிறார். இந்த முடிவுகள் எல்லாம் சேலத்தில் வைத்தே எடுக்கப்படுகின்றன. இதற்குப் பக்கபலமாக முதல்வரின் வலதுகரமான `கூட்டுறவு' இளங்கோவன் இருக்கிறார்.

`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்?’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்
`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்?’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதாகச் சொல்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். `பெயரளவுக்குப் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதைவிட ராஜினாமா செய்வது மேல்' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் பன்னீர்செல்வம். 

`எனக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுக்க அந்தக் கொடியவர்களின் கூடாரம் இந்தச் சதிவலையைப் பின்னியிருக்கிறது. நான் இந்த அரசில் துணை முதல்வர். நான் எதற்கு இந்த அரசை கவிழ்க்க வேண்டும். ஓர் அரசை கலைத்துவிட்டு முதல்வராக வேண்டும் என்கிற ஈனத்தனமான ஆசை எனக்கு இல்லை’ - தினகரனுடனான ரகசிய சந்திப்புக்கு பதில் அளித்தபோது இவ்வாறு பேசினார் ஓ.பன்னீர்செல்வம். இந்தச் சந்திப்பு குறித்த தகவல் வெளியான நேரத்தில் இருந்தே ஆட்சியில் இருந்தும் கட்சியில் இருந்தும் பன்னீரை ஓரம்கட்டும் வேலைகளைத் தீவிரப்படுத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம், `நானும் முதல்வரும் இணைந்தே செயல்படுகிறோம்' எனப் பேசுவதற்கும் ஓ.பி.எஸ் தயங்கவில்லை. 

இருவருக்கும் இடையிலும் நீடித்து வந்த பனிப்போர், கடந்த டிசம்பர் 11-ம் தேதி உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், `கட்சியில் ஒரு சிலரிடம் பல பதவிகள் குவிந்திருக்கின்றன. என்னிடம் பொருளாளர் பதவியோடு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் இருக்கிறது. இதில் ஒரு பதவியில் மட்டும் இருக்கலாம் என நினைக்கிறேன்' என `ஒருவருக்கு ஒரு பதவி' என்ற முழக்கத்தை முன்வைத்தவர், தர்மயுத்தம் செய்தவர்கள் விலக்கி வைக்கப்படுவது பற்றியும் தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்தார். இந்தக் கட்சியில் சொல்லிக்கொள்ளும்படியாக யாருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்தப் பேச்சு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது. 

இதுகுறித்து அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். அவர், ``ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் 25 நிமிடங்கள் மட்டுமே கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் இப்படிப் பேசுவார் என எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கவில்லை. கட்சியில் மட்டுமல்ல, ஆட்சியிலும் கொங்கு கேபினட்டின் தலையீடு அதிகமாக இருக்கிறது. அவர்களில் இரண்டு அமைச்சர்களைத் தவிர, வேறு எந்த அமைச்சர்களும் மகிழ்ச்சியாக இல்லை. அரசு ஒப்பந்தம் உட்பட அனைத்து விஷயங்களிலும் பல அமைச்சர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், அவரைக் கேட்டு எந்த முடிவையும் முதல்வர் அலுவலகம் எடுப்பது இல்லை. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் யாரெல்லாம் போட்டியிட வேண்டும் என்பதையும் முதல்வரே முடிவு செய்கிறார்.

இந்த முடிவுகள் எல்லாம் சேலத்தில் வைத்தே எடுக்கப்படுகின்றன. இதற்குப் பக்கபலமாக முதல்வரின் வலதுகரமான `கூட்டுறவு' இளங்கோவன் இருக்கிறார். தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த இளங்கோவன், தற்போது எந்தப் பதவியும் இல்லாமல் இருக்கிறார். ஆனால், சேலத்தில் நடக்கும் அரசு ஆய்வுக் கூட்டங்களில் அவர் முகமே தென்படுகிறது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிடும் பத்திரிகை செய்திகளிலும் அவர் பெயர் இருக்கிறது. யார் யாருக்கெல்லாம் சீட் என்பதையும் இளங்கோவன்தான் தயாரித்து வருகிறார். அனைத்து முடிவுகளும் சேலத்திலேயே எடுக்கப்படுவதை பன்னீர்செல்வம் விரும்பவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனப் பெயரளவுக்கு மட்டுமே ஒட்டிக்கொண்டிருப்பதையும் அவர் ரசிக்கவில்லை" என்கிறார். 

அதேநேரம், ``இந்த விவகாரம் வெடிப்பதற்கு மேலும், சில காரணங்கள் இருக்கின்றன'' என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம் பேசும்போது, ``துணை முதல்வராக இருந்தாலும் கோட்டையில் பன்னீர்செல்வம் பேச்சு எடுபடுவதில்லை. தனக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 13 பேருக்கு மாற்றல் வேண்டி, அவர் எழுதிக் கொடுத்த பட்டியல் இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை. எத்தனையோ அதிகாரிகள் மாற்றப்பட்டாலும், பன்னீரின் கோரிக்கைக்கு முதல்வர் செவிசாய்க்கவில்லை. துணை முதல்வராக இருந்தாலும் எந்த அதிகாரியும் அவர் பேச்சைக் கேட்பதில்லை. இந்த மனஉளைச்சல் அவருக்கு நீண்டநாள்களாக இருக்கிறது. அப்படியென்றால், துணை முதல்வர் என்ற பதவியில் பெயரளவுக்குத்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறோமா என ஆதங்கப்பட்டிருக்கிறார். ரகசிய சந்திப்புக்குப் பிறகு பல விஷயங்களில் அவர் சற்று ஒதுங்கியே இருந்தார். கொங்கு மண்டலத்தின் செயல்பாடுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தார் எனவும் எடுத்துக்கொள்ளலாம். கிட்டத்தட்ட இந்த இரண்டு பதவிகளிலும் அவர் டம்மியாகத்தான் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் தனக்கு இமேஜ் வேண்டும் என்பதற்காக அவர் கட்சிக் கூட்டத்தில் மைக் பிடிக்கவில்லை. தனக்கு எதுவுமே இல்லை என்ற கொந்தளிப்பின் வெளிப்பாடாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது'' என்றவர்,  

``பன்னீரின் டெல்லி செல்வாக்கு பறிபோனதை தங்களுக்குச் சாதகமாகப் பார்த்துக்கொண்டது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அவர்கள் விருப்பப்பட்டிருந்தால் பன்னீர்செல்வம் ரூட்டிலேயே டெல்லி வேலைகளைக் கவனித்திருக்கலாம். அதைவிடுத்து, அமைச்சர் தங்கமணி மூலமாக சில விஷயங்களை டெல்லிக்குத் தெரியப்படுத்தினார்கள். எந்தக் காரியம் என்றாலும் தங்கமணியைத்தான் டெல்லிக்கு அனுப்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இதைக் கவனித்த பன்னீர்செல்வமும், இவர்கள் போட்டுக் கொடுத்துதான் டெல்லி நம்மைக் கைவிட்டுவிட்டது என நினைக்கிறார். இணைப்பு முயற்சியிலும் பொதுச் செயலாளர் பதவியைத்தான் அவர் கேட்டார். அந்தப் பதவிக்கும் செக் வைத்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போது கட்சியின் தேர்தல் பிரிவிலும் பன்னீர்செல்வத்துக்கு எதிர் அணியில் இருக்கும் இன்பதுரை எம்.எல்.ஏ-வை மாநிலப் பொறுப்புக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதன்மூலம் கட்சித் தேர்தல் நடந்தாலும் ஓ.பி.எஸ் தரப்புக்கு மைனஸ்தான். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான், `இவர்களுக்குக் கீழ் இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொண்டு போக முடியும்' என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பன்னீர்செல்வம்" என்றார் விரிவாக.