Published:Updated:

‘ரெய்டு’ பாஸ்கர்!

‘ரெய்டு’ பாஸ்கர்!
பிரீமியம் ஸ்டோரி
‘ரெய்டு’ பாஸ்கர்!

‘ரெய்டு’ பாஸ்கர்!

‘ரெய்டு’ பாஸ்கர்!

‘ரெய்டு’ பாஸ்கர்!

Published:Updated:
‘ரெய்டு’ பாஸ்கர்!
பிரீமியம் ஸ்டோரி
‘ரெய்டு’ பாஸ்கர்!

2013 மே 8-ம் தேதி

கோடிகளில் கரன்சிகள் கொட்டுவதற்கும்... அமைச்சர், அதிகாரிகள், காக்கிகளின் லாக்கர்கள் நிரம்புவதற்கும்... ரெய்டுகள் நடத்தப்பட்டதற்கும்... இப்போது கைதுகள் அரங்கேறுவதற்கும் காரணமான நாள் அது!

‘ரெய்டு’ பாஸ்கர்!

வழக்கம் போலவே சட்டசபையின் அன்றைய அலுவல்கள் தொடங்கின. சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தினமும் ஓர் அறிக்கை வாசிக்கும் முதல்வர் ஜெயலலிதா, அன்றைய தினமும் ஒரு அறிக்கையைப் படித்தார். ‘புற்றுநோயைத் தடுக்க குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது’ என்றது அந்த அறிக்கை. நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக எடுத்த இந்த முடிவு, ஒரு சிலரின் நல்வாழ்வுக்குத்தான் பயன்படப்போகிறது என்பதை ஜெயலலிதா அப்போது அறிந்திருக்க மாட்டார். அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் விஜயபாஸ்கர் முன்னாள் அமைச்சர் ஆகியிருப்பார். குட்கா, பான் மசாலாவுக்குத் தலைவி தடை விதித்தார். அவர் அமைச்சரவையில் இருந்த சுகாதாரத் துறை அமைச்சரோ அதைவைத்து, அறுவடை செய்தார்.

ஜெயலலிதா தலைமையில் மொத்த அமைச்சரவையும் 2011-ல் பதவியேற்றபோது கேபினெட்டுக்குள் விஜயபாஸ்கரால் நுழைய முடியவில்லை. சிலபல ஜிகினாத் தோரணங்களைக் கட்டிதான், 2013-ம் ஆண்டின் இறுதியில்தான் மந்திரியானார். விஜயபாஸ்கருக்கு ‘கேபினெட் அந்தஸ்து’ பெற்றுக்கொடுத்தது கருணாநிதியும் விஜயகாந்த்தும்தான். இவர்களைப் பற்றி மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த வார்த்தைகளை வாடகைக்கு வாங்கி, சட்டசபையில் முழங்கினார். தீப்பொறி ஆறுமுகமும் வெற்றிகொண்டானும் விஜயபாஸ்கருக்குள் கூடுபாய்ந்தார்கள். கருணாநிதியை ‘`தள்ளு வண்டி’’ என்றார். விஜயகாந்தை ‘`தண்ணி வண்டி’’ என்றார். விளைவு, அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் விஜயபாஸ்கருக்கு முடிசூட்டு விழா.

நுழைவுத் தேர்வு, ஐந்து வருடப் படிப்பு, ஹவுஸ் சர்ஜன் பயிற்சி ஆகியவற்றைத் தாண்டிதான் விஜயபாஸ்கர் டாக்டர் ஆனார். ஆனால், அவர் மந்திரி ஆவதற்கு வெறும் அரசியல் தந்திரங்கள் மட்டுமே போதுமானவையாக இருந்தன. தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷின் நட்பு விஜயபாஸ்கருக்குக் கிடைத்தது. 2001 சட்டசபைத் தேர்தலில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. ஆனார். மந்திரி ஆவதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 2006 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட சீட் கேட்டபோது, கிடைக்கவில்லை. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட முயன்றார்; முடியவில்லை. இதனால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, 2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் குவாரித் தொழிலில் கண் பதித்தார்; லாபம் குவித்தார்.   

‘ரெய்டு’ பாஸ்கர்!

முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி, கரூர் சின்னசாமி வாரிசுகள் அண்ணாமலை, கௌதம் சிகாமணி, முரளி ஆகியோர் விஜயபாஸ்கருக்குக் கல்லூரி நண்பர்கள். தி.மு.க ஆட்சிக்காலத்தில் விஜயபாஸ்கரின் குவாரித் தொழிலுக்கு ஆதரவு கிடைத்துக்கொண்டிருந்தது.  சட்டமன்றம் முதல் நீதிமன்றம் வரையில் இன்றைக்கு விஜயபாஸ்கருக்கு எதிராக வாள் சுழற்றும் ஸ்டாலின், அன்றைக்குத் துணை முதல்வராக இருந்த காலத்தில்தான் விஜயபாஸ்கர் தொழிலில் ‘அமோகமாக’ வளர்ந்தார்.

2016 தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா, விஜயபாஸ்கருக்கு மீண்டும் அதே துறையைக் கொடுத்து அமைச்சர் ஆக்கினார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என பெயரெடுப்பதற்குப் பதில் `குட்கா’ அமைச்சர் என்கிற அவப்பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சி.பி.ஐ. விசாரணை வளையம் விழுந்திருக்கிறது.

குட்கா விவகாரத்தில் மட்டுமா விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? அதிக முறை ரெய்டு நடத்தப்பட்ட அமைச்சர், விஜயபாஸ்கர்தான். 

‘ரெய்டு’ பாஸ்கர்!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது அவர் வீட்டிலும் அவரின் உறவினர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் விநியோகித்த தற்கான பட்டியலை அவரது வீட்டில் வருமான வரித்துறை கைப்பற்றியது.
 
புதுக்கோட்டையில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியில் மத்தியப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் விதத்தில், அனுமதிக்கப்பட்டதைவிட மூன்று மடங்கு கற்களை வெட்டி எடுத்த குவாரி ஊழலை வருமானவரித் துறையினர் கண்டுபிடித்தனர். 

சோதனையின்போது கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு அமைச்சர் விஜய பாஸ்கர்மீது மேல் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசுக்கு விரிவான அறிக்கைகளை வருமானவரித் துறை அனுப்பி வைத்தது. அந்த அறிக்கையில்தான், ‘விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம்வ ருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அரசுப்பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல் உத்தரவு களைப் பெற்றுத் தர பலரிடம் லஞ்சம் பெற்றதை சின்னத்தம்பி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தி ருக்கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சேகர் ரெட்டியின் டைரியில் விஜயபாஸ்கர் பெயர் இருந்ததற்கான ஆதாரங்கள் வெளியாகின. நாமக்கல் ஒப்பந்ததாரரும் விஜயபாஸ்கரின் நண்பருமான சுப்ரமணியன் மர்மமான முறையில் இறந்துபோனார்.

வணிக வளாகம் வாங்கியதில் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில்,  அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது அவரது கைரேகையை எடுத்த டாக்டர் பாலாஜிக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாகப் புகார் கிளம்பியது. அந்த பாலாஜிக்குத்தான் உறுப்பு மாற்று ஆணையத்தின் செயலாளர் பதவி தரப்பட்டது. 

‘ரெய்டு’ பாஸ்கர்!

இப்படி அடுத்தடுத்து ரெய்டுகள், ஊழல்கள், விசாரணைகள் என விஜயபாஸ்கர் சிக்கிக்கொண்டபோதும் எடப்பாடி வாய்மூடி இருக்கிறார். சரியாக பர்ஃபாமன்ஸ் காட்டாத அமைச்சர்களையே கேபினெட்டிலிருந்து தூக்கி அடித்தவர் ஜெயலலிதா. இத்தனை புகார்களைச் சுமந்திருக்கும் விஜயபாஸ்கரை விட்டு வைத்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆட்சியே விஜயபாஸ்கர் கையில் இருக்கிறது என்றுதானே அர்த்தம். விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்தால் ஆட்சி டிஸ்மிஸ் ஆகிவிடும்.

 ஓர் இதய அறுவை சிகிச்சை மருத்துவர் தனது காரை மெக்கானிக் நண்பரிடம் சர்வீஸுக்குக் கொடுத்தார். மெக்கானிக் நண்பரோ, ‘`காரோட இதயம் போன்றது இன்ஜின். இந்த இன்ஜினை நான் சர்வீஸ் பண்றேன். மனிதனின் இன்ஜின் இதயம். இந்த இதயத்தை நீங்க சர்வீஸ் பண்றீங்க. நான் கார் மெக்கானிக்! நீங்க ஹார்ட் மெக்கானிக்! நம்ப ரெண்டு பேரும் ஒரே வேலையதான் செய்யறோம். ஆனா உங்களை மட்டும் டாக்டர்னு பெருமையா சொல்லுறாங்களே, ஏன்?!’’ என்று கேட்டார். அதற்கு டாக்டர், காரை ஸ்டார்ட் செய்துவிட்டு, “காருக்கு இதயம் போன்றது இன்ஜின், ஓடிக்கொண்டிருக்கும் இன்ஜினில் நீங்க ரிப்பேர், சர்வீஸ் செய்யுங்க” என்றார்். உடனே மெக்கானிக் ‘`ஓடிக்கொண்டிருக்கும் இன்ஜின்ல எப்படிங்க சர்வீஸ் பண்றது?’’ என்று சீரியஸாகக் கேட்டார். டாக்டர் சொன்னார், “நீங்க வேணும்னா இன்ஜினை ஆஃப் பண்ணிட்டு வேலை பார்க்கலாம். நான் இன்ஜினை ஆப் பண்ணிட்டா, எனக்கு வேலையே இருக்காது! அத்தகைய சேவைத்துறைதான் மக்கள் நல்வாழ்வுத்துறை.”

இந்தக் கதையை 2014 ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் சொன்னவர் விஜயபாஸ்கர். ஆனால், இன்று இவ்வளவு வழக்குகளில் சிக்கியும் விஜயபாஸ்கர்மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றாலும் எடப்பாடி ‘ஆஃப்’ ஆகிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சின்னப் புகார் போனால்கூட, அவர்களை விசிறியடிப்பார். ஆனால் ‘நடப்பது அம்மா ஆட்சி’ என்று சொல்லிக்கொண்டே, எந்த நடவடிக்கையும் எடுக்கத் திராணியற்ற, செயலற்ற முதலமைச்சராக இருக்கிறார் எடப்பாடி.

அதுசரி, இப்படிப்பட்ட எடப்பாடியின் அமைச்சரவையில் அப்படிப்பட்ட விஜயபாஸ்கர்தானே அமைச்சராக இருப்பார்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி - ஓவியம்: பிரேம் டாவின்ஸி