Published:Updated:

`நெல்மணிகளோடு சேர்ந்த களை!’ - செந்தில் பாலாஜியை வசைபாடிய தினகரன்

`நெல்மணிகளோடு சேர்ந்த களை!’ -  செந்தில் பாலாஜியை வசைபாடிய தினகரன்
`நெல்மணிகளோடு சேர்ந்த களை!’ - செந்தில் பாலாஜியை வசைபாடிய தினகரன்

``நெல்மணிகளோடு களைகளும் சேர்ந்து வளர்ந்துவிடுவது நிலத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்தான்'' எனச் செந்தில் பாலாஜி கட்சியிலிருந்து விலகுவது குறித்து டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி. தி.மு.க-வில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. நாளைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் கட்சியில் இணைய உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ``தமிழக மக்களின் அன்புக்குரிய இயக்கமாகவும், எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கும் இயக்கமாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திகழ்வதில் வியப்பேதும் இல்லை. கடந்த 9 மாதமாக அரசியல் இயக்கமாக நாம் அடைந்திருக்கும் அபார வளர்ச்சிக்குத் தமிழகமே சாட்சி. 1.2 கோடி உறுப்பினர்களைப் பெற்றுள்ளோம். மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துதான் இந்த விஸ்வரூப வளர்ச்சியை நாம் அடைந்திருக்கிறோம். அச்சுறுத்தலையும் அராஜகங்களையும் எதிர்கொண்டுதான் இந்த அபார வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம். நமது முன்னேற்றத்தைத் தடுக்க துரோகிகள் முழு மூச்சாக, தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அ.தி.மு.க (அம்மா) பெயரில் நாம் இயங்கியபோது அறிவிக்கப்பட்டிருந்த ஒன்றிய கழகச் செயலாளர் நேற்று கட்சியைவிட்டுச் சென்றுவிட்டாராம். அதைத் தற்போது ஊடகங்களில் பெரிதுபடுத்திக் காட்டப்படுகிறது. ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா. நம் இயக்கம் என்ற கற்பக விருட்சத்தின் ஆணிவேர் அம்மா அவர்களின் கொள்கைகளும், அடிமரமும், நுனிமரமும், கிளைகளும், கனிகளும் என அத்தனையும் தொண்டர்களாகிய நீங்களும்தான்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தலைமை ஏற்றபோது, ஒரு சிலர் தங்கள் சுயநலனுக்காக தலைமையைவிட்டு விலகுவதும், பின் மன்னிப்புக்கோரி இணைவதும் இயல்பான ஒன்றே. நெல்மணிகளோடு களைகளும் சேர்ந்து வளர்ந்துவிடுவது நிலத்தில் மட்டுமல்ல. நிஜவாழ்க்கையிலும்தான். அவற்றைக் காலம் உரிய நேரத்தில் அடையாளம் காட்டிவிடும். ஒருசில நபர்களோ, ஒரு சிறு குழுவோ தங்களின் சுயநலனுக்காக விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என நினைப்பார்களானால் அது ``பூனை கண்மூடினால் உலகம் இருண்டுவிடும்'' என்று நினைப்பது போன்றது. சுத்த தங்கங்களாகிய நீங்கள் இருக்கும்போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப்போகிறார்கள். சசிகலா பல இன்னல்களைச் சந்தித்து வருவதாலும் கஜா புயலால் டெல்டா மற்றும் புதுக்கோட்டை மக்கள் துன்பம் அடைந்ததாலும் என்பிறந்த நாளைக் கொண்டாடிவிட வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.