Published:Updated:

நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்

நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்  - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்
நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்

எம்.கார்த்தி

படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்

இயற்கை சீற்றங்கள் வருவது போல் பட்டாசு முதலாளிகளின் பணத்தாசைக்கு அப்பாவி தொழிலாளிகள் கொத்துக் கொத்தாய் செத்துமடிவது விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கதைகளாகிக் கொண்டிருக்கிறது. சம்பவம் நடந்த பிறகு சாக்குப் போக்கு சொல்லி அதிகாரிகள் தப்பிக்கிறார்கள். தவறுக்கு காரணமானவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு முன் ஜாமீன் வாங்கி விடுகிறார்கள். "பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள்"  என்று அரசும் தன் பங்கிற்கு டிரேட் மார்க் அறிவிப்பை வெளியிடுகிறது. இப்படி எல்லாமே சம்பிரதாய சடங்குகளாகவே நடப்பதால் பட்டாசு ஆலை சாவுகளும் சர்வ சாதாரண நிகழ்வுகளாகி விட்டன.
 

நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்  - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தீயின் கொடூர பசிக்கு ஆளாகி இறந்து கரிக்கட்டையாய் கீழே கிடக்கும் சடலங்களை பார்த்திருப்போம். இன்னும் சிலரோ உடலில் பலத்த தீக்காயத்துடன் தோல்கள் உறிந்து ரத்தமும், சதைகள் குதறியபடி 'அய்யயோ, அம்மா' என்ற அலறல்களுடன் சிகிச்சைக்கு கொண்டு செல்பவர்களின் போட்டோக்களை பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பார்த்திருப்போம். பலத்த காயமடைந்து சிகிச்சையின் போது அவர்கள் படும் துயரத்தை வெறும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. ஒவ்வொரு நிமிஷமும் அவர்களுக்கு ரணம்தான். சிகிச்சைக்கு பிறகு கோர தழும்புகளுடன் இதே உலகில் நடை பிணமாக வாழும் அவர்களிடம் யாராவது, 'எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டால் ‘வாழ்றதை விட சாவுறதுதான் மேல்’ என்று அவர்கள் வாயில் இருந்து விரக்தியான வார்த்தைகள் விழும். பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து பிழைத்த அப்படிச் சிலரை சந்தித்தேன்.
 

நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்  - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்

சிவகாசி முதலிப்பட்டி அருகேயுள்ள ஓ.கோவில்பட்டியை சேர்ந்த ராமர், ''குடும்ப சூழ்நிலை காரணமாக 150 ரூபா சம்பளத்துக்கு ஆசைப்பட்டு பட்டாசு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு ரூமில்  என்னை சேர்த்து 4 பேரும் மணி மருந்து தயாரிச்சுக்கிட்டு இருந்தோம். திடீர்ன்னு அது வெடிச்சிருச்சு. என் கூட வேலை செஞ்சிக்கிட்டு இருந்த ஆறுமுகம் பக்கத்து ரூமில் வேலை செஞ்ச மன்னாரு உள்பட 10 பேர் உடல் கருகி ஸ்பாட்டுலேயே செத்துட்டாங்க. என் உடம்பு முழுசும் தீ பத்திக்கிட்டு எரிஞ்சது. உடனே மயக்கமாகிட்டேன். கண் முழிச்சு பார்த்தா மதுரை அரசு மருத்துவமனையில் இருந்தேன். உடம்பு பூராவும் ஒரேடியாக ஏதோ கொதிக்கிற எண்ணெய்யை மேலே ஊத்தி விட்டது மாதிரி எரிச்சல். தொடர்ந்து 10 நாளைக்கும் இதே நிலைமைதான். பகலில் சூரிய வெளிச்சத்துனால் எரிச்சல்ன்னா, ராத்திரி மருத்துவமனையில இருக்கிற டியூப் லைட் வெளிச்சம் உடம்பு மேலே பட்டதுமே உடம்பு தகதகன்னு எரியும்.
 

நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்  - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்

அதை விட கொடுமை தீக்காயம் பட்ட இடத்தில கொப்பளம் கொப்பளமாக இருக்கும். ராத்திரி படுக்கையில் படுத்துட்டு காலையில் எழுந்திருக்க முடியாது. ஏன்னா அந்த கொப்புளத்து மேலே படுக்கை விரிப்பு அப்படியே பசை மாதிரி ஓட்டியிருக்கும். மருத்துவமனை ஊழியருங்க தீக்காயத்துல இருந்து படுக்கை விரிப்பை பிச்சுத்தான் எடுப்பாங்க. ரத்தம் வழியும், உயிர் போற மாதிரி வலிக்கும். பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மூலமாகத்தான் இப்ப உடம்பை சரி செஞ்சிருக்காங்க. ஆனாலும், தீக்காய தழும்பு இன்னும் போகலை. ரொம்ப நேரம் வெயிலில் இருக்க முடியாது. வெயில் பட்டால் திரும்ப உடம்பு பூராவும் கொப்பளமாக வெடிக்க ஆரம்பிச்சிரும். இப்ப பட்டாசு வேலையை விட்டு விட்டு தீப்பெட்டி ஆபீஸ்க்கு வேலைக்கு போய்க்கிட்டு இருக்கேன். எனக்கு இவ்வளவு கொடூரம் நடந்திருந்தும் என் மனைவி கடல் கன்னி, வேற வழியில்லாம பட்டாசு ஆலைக்குத்தான் வேலைக்கு போறா.. வேற மாற்று வழியில்லாமத்தான் வயிற்று பிழைப்புக்கு இந்த ஆபத்தான வேலையை செய்ய வேண்டியதிருக்கு... என்றார் வேதனையுடன்.
 

நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்  - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்

சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த சுமதியின் கதை இன்னும் சோகமானது. வெடி விபத்தில் பலத்த தீக்காயமடைந்து மீண்ட சுமதி இன்னும் வெறும் பொம்மையாகத்தான் வலம் வருகிறார்... ''என் புருஷன் முனியப்பன் பட்டாசு ஃபாக்டரியில்தான் வேலை செஞ்சார். பிறகு குடும்ப வறுமை காரணமாக நானும் அவரோ பட்டாசு ஆலையில் வேலைக்கு சேர்ந்தேன். வெடி விபத்து நடந்து 7 வருஷம் இருக்கும். ஃபயர் ஓர்க்ஸ்சில் எப்போதுமே சாம்பிள் வெடியை வேலை முடிஞ்சதுக்கு பிறகுதான் போட்டு பார்ப்பாங்க. அன்னிக்கு பகலில் சாம்பிள் வெடி போடும் போது அது தவறி குவிச்சு வச்சிருந்த வெடி மருந்துகள் மீது பட்டு ஆக்ஸ்டென்ட் ஆயிருச்சு. அன்னிக்கு நானும், என் புருஷனும் ராக்கெட்டுக்கு திரி சொருகும் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தோம். வெடி சத்தம் கேட்கவும் எல்லோரும் பதறியடிச்சு ஓடினோம். அப்ப திடீருன்னு நம்ம புருஷனுக்கு என்ன ஆச்சுன்னு நினைப்பு வந்திருச்சு. உடனே நான் உள்ளே போய் பார்த்தப்ப ஒரே தீப்பிழம்பு. அதில் என் உடம்பு தீ பிடிச்சுக்கிருச்சு. சேலை, ஜாக்கெட் எல்லாம் தீயில் கருகியிருச்சு. திரும்பி பார்க்கும் போது என் புருஷன் முனியப்பன் கேட்டை தாண்டி குதிச்சு ஓடுறது தெரிஞ்சது.
 

நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்  - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்

சரி அவர் பிழைச்சுக்கிட்டாருங்கிற நம்பிக்கையில் நானும் தப்பிச்சு ஓடலாம்ன்னு நினைச்சு காலை தூக்கி கீழே வைக்கிறேன். ஆனா கீழே ஒரே நெருப்பு கங்கு. கொஞ்ச நேரத்துல மயங்கி விழுந்துட்டேன். பிறகு என்னை மதுரையில் தனியார் மருத்துவமனையில் வச்சிருந்தாங்க. 2 மாசமா நினைவே இல்லாமல் கோமாவில் இருந்திருக்கேன். உடம்பு முழுசும் பெரிய பெரிய கொப்புளாக இருந்துச்சாம். கண் இமை பூராவும் தீயில் கருகி பொசுங்கியிருச்சு. கோமாவில் இருந்து நினைவு திரும்பியதும் என் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறேன். நானே பயந்து போயிட்டேன். முகத்துல தோல் எல்லாம் இல்லாம வெறும் வெள்ளையா, ரத்த காயத்தோட இருந்தா எப்படி இருக்கும். உடம்பில் தோல் எல்லாம் கருகி ரொம்பவும் கோரமாயிட்டேன். வீட்டை விட்டு வெளியே வந்தா சின்னக்குழந்தைங்க கூட என்னை பார்த்து பயந்துக்கிட்டு ஓடுவாங்க. உடம்பு பூராவும் வெள்ளையாக இருந்தா பயப்படாமா என்ன செய்வாங்க?
 

நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்  - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்

இப்போ கூட இரண்டு கை, கால் எல்லாம் அப்படியே நின்னு போயிருச்சு. சோறு கூட கையால் எடுத்து சாப்பிட முடியாது. ஸ்பூனில்தான் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட முடியும். உடலில் உணவு குழாய் தீ விபத்தில் கருகி விட்டதால் அது ரொம்பவும் சுருங்கி போச்சு. சாப்பாட்டைக்கூட முழுசா முழுங்க முடியாது. அதுபோல் இயற்கை உபாதையை கழிக்குறதுக்கு ரொம்பவும் கஷ்டம். டாக்டருங்க கிட்ட கேட்டதுக்கு உடம்புக்குள்ள இருக்குற பல உறுப்புகள் தீயில் கருகி ரொம்பவும் சுருங்கியிருச்சு. நீ பிழைச்சதே பெரிய விஷயம். அதனால, எல்லா உபாதையும் இருக்கும்ன்னு சொல்லி கையை விரிச்சுட்டாங்க. பெயருக்கு உடம்புல உசுரு ஒட்டிக்கிட்டு இருக்கு.. மற்றபடி நடை பிணம் போல் தான் இருக்கிறேன்.  வெயில் பட்டா உடம்புல தீ பட்டது மாதிரி எரியும், என் வீட்டுக்காரர்தான் வீட்டில் சமையல் வேலை உள்பட எல்லா வேலையும் செய்யுறாரு. என் நிலைமையை பார்த்துட்டு பட்டாசு வேலை வேண்டாம்ன்னு சொல்லி இப்ப குறைந்த சம்பளத்தில் கூலி வேலை செய்யுறாரு" என்று வேதனையுடன் சொன்னார் சுமதி.
 

நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்  - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்

சிவகாசி அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் பாப்பா. ஒரு வெடி விபத்தில் ஒரு கை முழுவதையும் தீக்கு இரையாக கொடுத்துவிட்டு, வாழ்க்கையை தொலைத்தவர். ''என் புருஷன் ராதாகிருஷ்ணனும், நானும் ஒரே ஃபயர் ஆபிஸ்சில்தான் வேலை செஞ்சோம். எங்க குழந்தை அனிதா அப்போ கை குழந்தை. வேலைக்கு போறப்பம் குழந்தையை அங்கே கொண்டு போய் மரத்தில் தொட்டில் கட்டி படுக்க வச்சுட்டுத்தான் வேலை பார்ப்பேன். ஒரு நாள் மணி மருந்து கலக்கும் போது தீ விபத்து ஏற்பட்டிருச்சு. எல்லோரும் அலறி அடிச்சு ஓடினாங்க. அப்பத்தான் என் குழந்தை தொட்டிலில் தூங்க வச்சது ஞாபகம் வந்துச்சு. குழந்தையை காப்பாத்த போகும் போதுதான் என் உடம்பில் தீ பிடிச்சிருச்சு. நல்ல வேளை அதுக்கு முன்னாடி யாரோ என் குழந்தையை தூக்கிட்டு ஓடிட்டாங்க. அந்த விபத்தில் என் வலது கை முழுவதும் கருகி கரிக் கட்டையாகிருச்சு. இப்போதும் வெயிலில் போக முடியாது. ராத்திரி ஆயிருச்சுன்னு கை பூராவும் ஒரே அரிப்பு எடுக்கும். சீப்பு, கரண்டியால் அதை சுரண்டி விடுவேன். உடனே கை பூராவும் ரத்தக்காயமாகி விடும். பிறகு டாக்டருக்கிட்ட போய் மருந்து போட்டுக்குவேன். ஆனாலும் கை அரிப்பு இன்னும் நின்ன பாடில்லை. அரிப்பை போக்க நான் சுரண்டி விடுறதும் கை புண்ணாகி விடுறதும் தொடர் கதையத்தான் நடந்துக்கிட்டு இருக்கு. ஆனாலும், குடும்ப வறுமையை போக்க புருஷன், பொண்டாட்டி 2 பேரும் அதே ஃபயர் ஓர்க்ஸ்சில் வேலை செஞ்சிக்கிட்டுத்தான் இருக்கோம். ஆண்டவன் விட்ட வழி வேற என்ன செய்யுறது?" என்று ஆதங்க வார்த்தைகளை கொட்டினார் பாப்பா.
 

நடை பிணங்களாய் நடமாடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்  - நெஞ்சை பிழியும் விருதுநகர் அவலம்
##~~##

இப்படி இன்னும் எத்தனையோ ஜீவன்கள் விருதுநகர் மாவட்டத்தில் விதியை நொந்தபடி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இவர்களை காவு கொடுத்து அதிகாரிகளும் முதலாளிகளும் தங்களை வளப்படுத்திக் கொள்ளும் அவலத்திற்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது?