Published:Updated:

`எனது கனவைத் துறந்த அந்த வழக்கு!'‍ - முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லும் ஃப்ளாஷ்பேக்

`எனது கனவைத் துறந்த அந்த வழக்கு!'‍ - முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லும் ஃப்ளாஷ்பேக்
`எனது கனவைத் துறந்த அந்த வழக்கு!'‍ - முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லும் ஃப்ளாஷ்பேக்

``தமிழகத்துக்குப் புதுச்சேரிதான் வழிகாட்டி” என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களின் பதவியேற்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அவர்களுக்குத் துணைவேந்தர் குர்மீத் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த விழாவில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``மாணவர் அரசியல் என்பது அசுத்தமான வார்த்தை கிடையாது. எனது சிறுவயதிலிருந்தே நான் மாணவர் பேரவையில் பங்கு பெற்றிருக்கிறேன். மருத்துவராகும் எனது கனவைத் துறந்து சட்டத்துறையைத் தேர்வு செய்ததற்குக் காரணம் சிதம்பரம் உதயகுமார் வழக்குதான். வழக்கறிஞரான பிறகு தொழிற்சங்க வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காகப் புதுச்சேரி வந்தேன்.

வழக்கறிஞர்கள் ஆஜராவதற்கு அப்போது எதிர்ப்புக் கிளம்பியதால் தொழிற்சங்க நிர்வாகியாகி வாதிடும் சூழல் நிகழ்ந்தது. மாணவர்களாகிய உங்களுக்கு முதலில் கேள்விகேட்கும் திறன் தேவை. சமூகத்தின் அவலங்களை அதுதான் மாற்றும். அது நம் அடிப்படை உரிமையும்கூட. கேள்விகள் மட்டுமே அனைத்துக்குமான திறவுகோல் என்பதால் அதைக் கேட்பது தவறில்லை. வகுப்பறை தொடங்கி அனைத்து இடங்களிலும் கேள்விகள் கேட்பது மரியாதை குறைவானது இல்லை என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியம். தேர்தல் மூலம் மாணவர் பேரவையின் நிர்வாகிகள் தேர்வாகும் சூழல் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிலவுகிறது.

அதே நேரத்தில் தமிழகத்தில் 17 பல்கலைக்கழகங்கள், 29 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் ஒன்றில்கூட மாணவர் பேரவையே இல்லாத சூழல்தான் இருக்கிறது. மேலும், புதுச்சேரிதான் தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது. நாட்டில் வருங்கால ஜனநாயகத்தை உறுதிசெய்ய மாணவர் பேரவை அவசியம். கற்றல், கற்பித்தலுக்குப் பிறகுதான் மாணவர்கள் போராட வேண்டும். அம்பேத்கரின் வரிகளை மனதில் கொள்ள வேண்டும்” என்றார்.

சந்துருவின் கனவைத் துறந்த வழக்கு

`தான் மருத்துவராகும் எனது கனவைத் துறந்து சட்டத்துறையைத் தேர்வு செய்ததற்குக் காரணம் சிதம்பரம் உதயகுமார் வழக்குதான்'' என்று பேசினார். யார் இந்த உதயகுமார் என்றால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இவர். 1974-ல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் இவரும் கலந்துகொண்டவர். காவல்துறையினர் தாக்குதலில் இவர் பலியானதாக வதந்தி பரவியது. இறந்த அவரது உடலைப் பார்த்து, இது என் மகன் இல்லை என்ற வாக்குமூலத்தை அவரது தந்தையிடமிருந்து பெற்று, காவல்துறை அத்துடன் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது. இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது என்று கூறப்படுகிறது. இதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.