Published:Updated:

`செந்தில் பாலாஜி வருவது பிளஸ்ஸா..மைனஸா?!' - கலங்கும் கொங்கு உடன்பிறப்புகள்

ஸ்டாலினிடம் பேசிய செந்தில் பாலாஜி, `நான் வந்துவிடுகிறேன். கட்சிப் பணி செய்கிறேன். என்னுடைய வேலையைப் பார்த்துவிட்டு, நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யுங்கள்' எனக் கூறிவிட்டார்.

`செந்தில் பாலாஜி வருவது பிளஸ்ஸா..மைனஸா?!'  - கலங்கும் கொங்கு உடன்பிறப்புகள்
`செந்தில் பாலாஜி வருவது பிளஸ்ஸா..மைனஸா?!' - கலங்கும் கொங்கு உடன்பிறப்புகள்

ரூர் செந்தில் பாலாஜிக்காக மும்பை பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டுச் சென்னை திரும்பியிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். `அன்பில் பொய்யாமொழி மகேஷ் மூலமாகத்தான் கட்சிக்குள் வருகிறார் செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தை ஆட்டுவிக்க இனி அவர் பயன்படுத்தப்படுவார்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கட்சியில் இணைய இருக்கிறார் செந்தில் பாலாஜி. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இரு தரப்பும் வெளியிடவில்லை. கடந்த பத்து நாள்களாக தினகரனின் தொடர்பு எல்லைக்குள் வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தார் செந்தில் பாலாஜி. இதையடுத்து, தஞ்சாவூர் ரங்கசாமி உள்ளிட்ட தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் சிலரை அனுப்பி, சமசரம் செய்ய முயற்சி செய்தார் தினகரன். தொடர்ந்து தூது முயற்சிகள் நடந்ததால், ஒருகட்டத்தில் பக்கத்து மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர் ஒருவர் வீட்டில் அடைக்கலமானார். தி.மு.கவில் இணைவாரா என்ற கேள்வி, அ.ம.மு.க நிர்வாகிகள் மத்தியிலும் எழுந்தது. ஒருகட்டத்தில், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவுடன் விமானநிலையத்தில் செந்தில் பாலாஜி நடந்து வருவது போன்ற புகைப்படங்கள் வெளியானது. இந்தக் காட்சிகள் தினகரனுக்குக் கூடுதல் கொதிப்பை வரவழைத்தது. இருப்பினும் அமைதிகாத்த தினகரன், நேற்று செந்தில் பாலாஜியின் பெயரைக் குறிப்பிடாமல் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அந்த அறிக்கையில், `முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யார் வருந்தப்போகிறார்கள்? ஒரு சிறு குழு விலகிச்செல்வதால் அமமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப்போகிறார்கள். ஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சம் இல்லாமல் போய்விடுமா? அமமுகவிலிருந்து சில நபர்களோ, குழுவோ சுயநலனுக்காக விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பது பூனை கண்மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போன்றது. அமமுகவை சீண்டிப்பார்ப்பது உயர் அழுத்த மின்சாரத்தை தொட்டுப் பார்ப்பதற்கு சமம். நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானது' எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கும் செந்தில் பாலாஜி எந்தப் பதிலும் சொல்லவில்லை. சொல்லப் போனால், தினகரனை எதிர்த்து அவர் ஒரு வார்த்தையும் பேச மாட்டார் என அ.ம.மு.க வட்டாரத்தில் விவாதமே நடந்து வருகிறது. 

அதேநேரம், `தி.மு.கவில் செந்தில் பாலாஜி இணைவதை உடன்பிறப்புகள் எப்படிப் பார்க்கிறார்கள்?' என்ற கேள்வி முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``கட்சிக்குள் வருவதற்கு எந்த வாக்குறுதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதைப் பற்றி ஸ்டாலினிடம் பேசிய செந்தில் பாலாஜியும், `நான் வந்துவிடுகிறேன். கட்சிப் பணி செய்கிறேன். என்னுடைய வேலையைப் பார்த்துவிட்டு, நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யுங்கள்' எனக் கூறிவிட்டார். இதற்குப் பதிலளித்த தலைவரும், ` சரி...பார்ப்போம்' என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார். `கொங்கு மண்டலத்தில் கட்சிப் பணி செய்வதற்கு ஆள் இல்லை. அதை ஈடுகட்டுவதற்குச் செந்தில் பாலாஜி சரியான தேர்வாக இருப்பார்' என நம்புகிறார் ஸ்டாலின். தொகுதிக்கு அவர்தான் வேட்பாளராக்கப்படுவார் என்பதால் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுவிலும் உயர்மட்டக் குழுவிலும் உறுப்பினராக இருக்கும் கரூர் கே.சி.பழனிசாமியும் மா.செ நன்னியூர் ராஜேந்திரனும் படு அப்செட்டில் இருக்கிறார்கள். 

இத்தனை நாள்காக இவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜியை எதிர்த்து அரசியல் செய்து வந்தார்கள். இனிக் கட்சிக்குள் அவருடைய ஆதிக்கம் அதிகமாகிவிடும் என பயப்படுகிறார்கள். நமக்கு இனி வேலை இருக்காது என நினைக்கின்றனர். ஈரோடு முத்துச்சாமியை விடவும் வேளாளச் சமூகத்தில் செந்தில் பாலாஜிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகத் தலைமை நம்புகிறது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.கவின் கொங்கு கேபினட்டுக்கு வலுவான எதிரியாகவும் அவர் இருப்பார் எனவும் பேசத் தொடங்கியுள்ளனர். கட்சியின் தீர்மானக் குழுவிலோ அல்லது தேர்தல் பணிக்குழுவிலோ செந்தில் பாலாஜிக்குப் பொறுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கட்சிக்கு இது பிளஸ்தான். ஆனால், தி.மு.கவில் இருக்கும் கொங்கு நிர்வாகிகள் தங்களுக்கான மைனஸாக இதைப் பார்க்கின்றனர். தலைமை நடத்தும் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாமலும் தவிக்கிறார்கள். `இனி கொங்கு மண்டலத்தில் அதிகாரபூர்வ பொறுப்பாளராக செந்தில் பாலாஜி இருப்பார்' எனச் சொல்லாமல் சொல்லிவிட்டது தலைமை. இதன் சாதக, பாதகங்கள் என்ன என்பது போகப் போகத்தான் தெரியும்" என்றார் விரிவாக. 

செந்தில் பாலாஜியின் திடீர் மாற்றம் குறித்துப் பேசும் அ.ம.மு.க நிர்வாகிகளோ, ``தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு இதுவே சரியான நேரம் என நினைக்கிறார் தினகரன். இல்லாவிட்டால், மேலும் சிலர் முகாம் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும் நினைக்கிறார். செந்தில் பாலாஜியின் முடிவு, கட்சியின் இதர நிர்வாகிகள் மத்தியிலும் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் சொந்தக் காசை செலவழித்துத்தான் இத்தனை நாள் அ.ம.மு.க-வின் கூட்டங்களை நடத்தி வந்தனர். தினகரன் தரப்பிலிருந்து எந்தக் கூட்டத்துக்கும் பெரிதாகச் செலவு செய்யவில்லை. அந்தக் கோபம்தான் பல வகைகளில் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது" என்கின்றனர்.