Published:Updated:

``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி

``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி
``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி

சென்னை டு சேலம் அதிவிரைவு போக்குவரத்துக்காக எட்டு வழிச் சாலை என்கிற திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட இருப்பதாகத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்தது. விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த கிராமத்து மக்கள் வெகுண்டெழுந்தார்கள். மக்களின் தொடர் போராட்டத்தால் இத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. 

இத்தகைய சூழலில் நேற்று சேலத்தில் ஸ்மார்ட் சிட்டிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``8 வழிச்சாலை திட்டத்தைத் தொடங்கிய நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். ஏனோ இன்னும் முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க விபத்துகளும் அதிகரிக்கும். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. விலைமதிப்பற்ற மனிதர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க சர்வதேச தரத்துக்கு இணையாகச் சாலை அமைத்தால் என்ன தவறு? நாட்டின் நலன்கருதி எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார். இத்திட்டம் மீண்டும் தொடங்கப்படுமானால் மக்களின் எதிர்வினை எந்த வடிவில் இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.