Published:Updated:

``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு!” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி

``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு!” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி
``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு!” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ஆதரவாளர்களுடன் சற்றுமுன் தி.மு.க-வில் இணைந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் 2,000 பேருடன் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணைந்துகொண்டார். 

மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

``தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே சிறந்த தலைவர். சிறந்த தலைமைப் பண்பும் அதுதான். தி.மு.க தலைவரிடம் இந்தப் பண்பை நான் பார்க்கிறேன். அவர் ஒரு சிறந்த தலைவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் ஒரு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டேன். தற்போது தளபதி ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் என்னை இன்று தி.மு.க-வில் இணைத்துக்கொண்டேன்.   


 

கரூர் மாவட்ட மக்களுடைய உணர்வுக்கு எண்ணங்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தி.மு.க -வில் இணைந்தேன். தமிழகத்தில் ஆட்சி செய்யும் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அவர்களின் ஆட்சி மக்கள் நலனுக்கு எதிரானது. தமிழக மக்களின் உரிமைகளை சூறையாடும் ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி. பா.ஜ.க அரசுக்கு அடிபணிந்து செல்கின்றனர். குறுக்கு வழியில் முதல்வர் பதவிக்கு வந்தவர் ஈ.பி.எஸ். தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக ஈ.பி.எஸ் அரசு விட்டுக்கொடுத்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடக் கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் கரத்தை வலுப்படுத்தவே தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக்கொண்டேன். என்னோடு சேர்த்து பல்லாயிரக்கணக்கான கரூர் மாவட்ட தொண்டர்கள் தி.மு.க-வில் இணைந்துகொள்வார்கள்.

இருள் அகற்றி ஒளிதருவது சூரியன். இன்று என் மனதில் இருந்த இருளை அகற்றி எனக்கு புதிய வழி தந்திருக்கிறார்கள். எப்போது நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மக்கள் விரோத ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஒரு மகத்தான வெற்றியை தி.மு.க பெறும். மு.க.ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் தமிழக மக்கள் அமர வைப்பார்கள். நான் அதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு உழைப்பேன் .


 

ஊடகங்களில் சொல்வதுபோல நான் பல்வேறு இயக்கங்களில் இருந்து வந்துவிடவில்லை. 1996-ம் ஆண்டு முதல்முறையாக கவுன்சிலருக்கு சுயேச்சையாக நின்று போட்டியிட்டேன். அதன்பிறகு அ.தி.மு.க-வில் இணைந்தேன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒரு தலைமையை ஏற்றுச் செயல்பட்டோம். இப்போது ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் தி.மு.க-வில் இணைந்தேன். என்னுடைய அரசியல் பயணம்  ஸ்டாலின் தலைமையில் கரூரில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும், நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு மகத்தான வெற்றி பெறுவதற்கு உழைப்பேன்” என்று பேசினார்.

மனதில் இருந்த இருள் என்று டி.டி.வி தினகரனை குறிப்பிடுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி  ``நான் ஒரு தலைமையின் கீழ் இயங்கினேன். என்னோடு இணைந்து பணியாற்றியவர்கள் ஆதங்கத்தில் என்னைப் பற்றி விமர்சிக்கிறார்கள்.  அதேபோல் நானும் செய்யமாட்டேன். நான் தி.மு.க-வில் இணைந்தது ஒருவேளை அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். நான் இருந்த இயக்கத்தைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. மேலும், அந்த இயக்கத்தில் இருக்கும் யாரையும் நான் இங்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை. கடந்த ஒரு மாத காலமாக அ.மு.மு.க களப்பணிகளில் நான் ஈடுபடவில்லை. என்னை யாரும் தி.மு.க-வுக்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை. நான் ஸ்டாலின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டேன். தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பவராக ஸ்டாலின் என் கண்களுக்குத் தெரிந்தார்''’ என்றார்.