
“எங்க எம்.பி-யைப் பாத்தீங்களா?” - வெடிக்காத பட்டாசு!
#EnnaSeitharMP
#MyMPsScore
மக்களுக்கு நன்கு அறிமுகமான அரசியல் தலைவரான வைகோ, வர்த்தகர்கள் மத்தியில் நன்கு தெரிந்த ரத்தினவேலு, சுறுசுறுப்பான செயல்பாட்டால் மக்களின் மனம்கவர்ந்த மாணிக்கம் தாகூர் ஆகியோர் களத்தில் நிற்க... இவர்களையெல்லாம் நிராகரித்துவிட்டு விருதுநகர் வாக்காளர்கள் எம்.பி ஆக்கியது, மக்களால் அறியப்படாத ராதாகிருஷ்ணனை. யூனியன் சேர்மனாகவும், அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருந்த காலத்தில்கூட கட்சியினருக்கே தெரியாத நபராக இயங்கியவர். ஊரில் இருந்தால் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வார். மைக் பிடிக்க மாட்டார். யாரையும் சந்திக்க மாட்டார். விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் தன் எல்லைக்குள் இருந்தாலும், சிவகாசியைவிட்டு எங்கும் செல்ல மாட்டார். அப்படிப்பட்டவர், விருதுநகர் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார்? தொகுதியை வலம் வந்தோம்.
‘‘மற்ற தொகுதிகளின் மக்களைப் போல, ‘எம்.பி-யிடம் மனு கொடுத்தேன், கோரிக்கை வைத்தேன்... அதை நிறைவேற்றவில்லை’ என விருதுநகர் தொகுதியில் யாரும் புலம்ப முடியாது. எம்.பி-யை சந்திக்க முடிந்தால்தானே கோரிக்கை வைக்க முடியும்... மனு கொடுக்க முடியும். அதற்கான வாய்ப்புகளையே அவர் உருவாக்கவில்லை. தொகுதிக்குள் எந்த ஒரு நகரிலும் எம்.பி-க்கு என்று அலுவலகம் கிடையாது. ‘சரி, வீட்டிலாவது அலுவலகம் இருக்கிறதா’ என்றால் அங்கும் இல்லை. சாதரணமாக ஒரு வார்டு கவுன்சிலர் வீட்டு முன்புகூட கட்சிக்காரர்களும் பொதுமக்களும் வந்துசெல்வதைப் பார்க்கலாம். ஆனால், சிவகாசி சாட்சியாபுத்தில் இருக்கும் ராதாகிருஷ்ணன் வீடு அமைதியாகக் காட்சி தருகிறது. அது எம்.பி வீடு என்பதற்கான எந்த அறிவிப்பும் அங்கு இல்லை’’ என எடுத்த எடுப்பிலேயே டாப் கியரைப் போட்டார்கள் தொகுதி மக்கள்.

‘‘ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில், அவருக்கு உதவியாக இருந்தவர்தான் இப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. குறுகிய காலத்தில் ராஜேந்திர பாலாஜி வளர்ந்து அமைச்சராகி விட்டார். தன் திடீர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப் படாமல் இருந்த தன் ஆசானுக்கு நன்றிக்கடனாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வாங்கிக் கொடுத்தார் ராஜேந்திர பாலாஜி.
‘வெற்றிபெற்றுவிடுவீர்கள்’ என்று கணித்துச் சொன்ன ஜோதிடரை வீட்டுக்குக் கூப்பிட்டு விருந்து வைத்து கவனித்த ராதாகிருஷ்ணன், தன் தொகுதி மக்களை கவனிக்கவே இல்லை. எங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை, புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. எம்.பி நிதியை எதற்கு செலவழித்தார் என்பதுகூட தெரியவில்லை’’ என பட்டியல் போட்டவர்கள் எதிர்க்கட்சியினர் அல்ல, அ.தி.மு.க-வினர்தான். அந்த அளவுக்கு விருதுநகரில் பெயரெடுத்துள்ளார் ராதாகிருஷ்ணன்.
‘‘நீங்கள் சொல்லித்தான் விருதுநகர் எம்.பி ராதாகிருஷ்ணன் என்பது தெரிகிறது’’ என எடுத்த எடுப்பிலேயே கிண்டல் அடித்தார் அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன். ‘‘அரசியலில் இருக்கும் எனக்கே இப்படீன்னா, சாதாரண மக்களுக்கு அவரைத் தெரியுமான்னு சந்தேகமாக இருக்கு. வைகோ, மாணிக்கம் தாகூர் எல்லாம் அடிக்கடி தொகுதிக்குள் வலம் வந்து ஓரளவு பணிகளைச் செய்தார்கள். நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களுடன் தொடர்பில் இருந்தார்கள். ஆனால், ராதாகிருஷ்ணன் ஜெயித்த பிறகு தொகுதி மக்களை சந்திக்கவே இல்லை. சிவகாசியில் பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைப் பற்றி எல்லோரும் பேசிவருகிறார்கள். ஆனால், அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் இதுவரை இவர் பேசியதில்லை. உணவுப் பொருள் மொத்த வர்த்தகம் நடக்கும் விருதுநகரில், ஜி.எஸ்.டி-யால் பல தொழிலதிபர்கள் சிக்கலுக்கு ஆளானார்கள். அவர்களின் பாதிப்பு பற்றிக்கூட எம்.பி அக்கறை காட்டவில்லை. விருதுநகர் வளர்ச்சி அடையாத நகரமாகவே உள்ளது. இதற்காக சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம்’’ என்றார் இன்பத்தமிழன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனனிடம் பேசினோம். ‘‘சாத்தூர் தீப்பெட்டித் தொழில் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்று தெரியவில்லை. அதிகப்படியான ஜி.எஸ்.டி-யால் தீப்பெட்டி ஆலைகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்துவரும் பட்டாசுத் தொழில் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது. நாடு முழுவதும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என்று பட்டாசுத் தொழிலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுற்றுச்சூழல் சட்டத்திலுள்ள சில விதிகளைத் தளர்த்தி, மத்திய அரசு உத்தரவு போட வேண்டும். இதற்கான எந்த வேலையையும் எம்.பி செய்யவில்லை. அருப்புக்கோட்டை வட்டாரத்தில் நெசவுத் தொழில் மிகவும் நலிந்து விட்டது. அப்பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைத்து நெசவாளர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் காக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இதையெல்லாம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் ராதாகிருஷ்ணன். பிறகு மறந்தேபோய் விட்டார்.
சிவகாசி உட்பட பல பகுதிகள் போதிய மழை இல்லாமல் நீராதாரமின்றி வறண்டு போயுள்ளன. பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அவர் எப்போது ஊருக்கு வருகிறார், எப்போது டெல்லிக்குப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது. அலுவலகம் இல்லாததால், மக்கள் சந்திக்க முடியாத எம்.பி-யாக இருக்கிறார். விருதுநகரிலிருந்து முக்கிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள் இல்லை. மதுரை முதல் குமரி வரை இரட்டை ரயில் பாதை அமைத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். அதைப்பற்றி எம்.பி அலட்டிக்கொள்ளவே இல்லை. அடிக்கடி ஏற்படும் பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்படும் மக்களின் உயிர்காக்க சிவகாசியில் நவீன வசதிகளுடன் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் கிடப்பில்தான் இருக்கிறது’’ என்றார்.
‘‘விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். எடப்பாடியும் அதை மீண்டும் அறிவித்தார். இவர், அதை நிறைவேற்ற டெல்லியில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ‘சிவகாசி மாநகராட்சி ஆக்கப்படும்’ என எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி சொன்னார். அதுவும் நடக்கவில்லை. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. திருமங்கலம் வட்டாரம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மிகவும் பின்தங்கியுள்ளது. சரியான வேலைவாய்ப்புகள் இல்லாமல் மக்கள் வெளியூர்களுக்குச் செல்கிறார்கள். அப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மத்திய அரசின் எந்தத் திட்டத்தையும் எம்.பி கொண்டுவரவில்லை’’ என்றார்கள் எதிர்க்கட்சியினர்.
எம்.பி-க்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்கின்றன. ‘‘பட்டாசுத் தொழிலுக்கு முட்டுக்கட்டை போடுவதுபோல மத்திய அரசுதான் நடந்துகொள்கிறது. இந்தத் தொழிலைக் காப்பாற்ற தமிழக அரசும், எம்.பி-யும் எங்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார்கள். நாடாளுமன்றத்திலும் ‘பட்டாசுத் தொழிலால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை’ என்று எம்.பி பேசியிருக்கிறார். மத்திய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து நாங்கள் முறையிட ஏற்பாடு செய்து கொடுத்தார். பட்டாசு உற்பத்தியாளர்களிடம் எந்த ஒரு சலுகையையும் எம்.பி எதிர்பார்த்ததில்லை. யாரிடமும் எந்தக் காரியத்துக்காகவும் பணம் வாங்க மாட்டார். எம்.பி என்ற அந்தஸ்தை வைத்து எங்கேயும் அதிகாரம் செய்ய மாட்டார். சிவகாசி, விருதுநகரில் எம்.பி நிதி மூலம் சாலைகள், ஹைமாஸ் விளக்குகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்’’ என்றார் பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர்.
‘மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்குத் தாங்கள்தான் காரணம்’ என்று பலரும் உரிமை கொண்டாடிவரும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி தனது விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் வருவதுகூட தெரியாமல் அசட்டையாக இருந்திருக்கிறார் ராதாகிருஷ்ணன். இப்போதுதான் யாரோ சொல்லியிருக்கிறார்கள் போல! நன்றி தெரிவித்து புதிதாக போஸ்டர்கள் தென்படுகின்றன.
ராதாகிருஷ்ணன் தத்தெடுத்த கிராமம் எப்படி இருக்கிறது? ஏழு கிராமங்களைக் கொண்ட சாமிநத்தம் ஊராட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ‘‘தத்தெடுக்கும் விழாவுக்கு வந்துபோனதோடு சரி. பிறகு இந்தப் பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை. எங்க கிராமமும் தலை தூக்கவே இல்லை’’ என்றார்கள் மக்கள்.
ராதாகிருஷ்ணனின் விளக்கம் என்ன? அலைபேசியில் தொடர்பு கொண்டும், வீட்டுக்கு நேரில் சென்றும், பெரும் போராட்டத்துக்குப் பிறகே அவரிடம் பேச முடிந்தது. ‘‘என்னால் முடிந்தவரை தொகுதி பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பேசி, தீர்வு கண்டிருக்கிறேன். இது தெரியாமல் வேண்டுமென்றே சிலர் குறை சொல்கிறார்கள். விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலம் கட்ட சிலர் தடை ஏற்படுத்தினர். அந்த வழக்கில் நானே ஒரு பார்ட்டியாக சேர்ந்து, வழக்கு நடத்தி வெற்றி பெற்றேன். விரைவில் அந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்காக நான்கு முறை நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். சீனப் பட்டாசை தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசினேன். அதன்பின் நடவடிக்கை எடுத்து தற்போது அதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. மானாமதுரை வரை சென்றுகொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் செங்கோட்டை வரை இயக்க வைத்தேன். வாரம் இரண்டு முறை இயங்கி வந்த அந்த ரயிலை, ரயில்வே அமைச்சரைச் சந்தித்து மூன்று முறையாக்கினேன். பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களின் பழைய பெட்டிகளை ரயில்வே துறையிடம் சொல்லி மாற்றினேன். சிவகாசி பகுதியில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. விரைவில் பிரச்னை சரியாகிவிடும்.
பட்டாசுக்கு 28 சதவிகித ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருந்தது. இங்குள்ள உற்பத்தியாளர்களை டெல்லிக்கு அழைத்துச்சென்று, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் முறையிட்டு, அதை 18 சதவிகிதமாகக் குறைத்தேன். ஜி.எஸ்.டி காமர்ஸ் கமிட்டியில் நான் உறுப்பினராக இருக்கிறேன். 18 சதவிகித ஜி.எஸ்.டி-யால் பாதிக்கப்பட்டுள்ள தீப்பெட்டி தொழிலைக் காக்கும் வகையில் அதை 5 சதவிகிதமாகக் குறைக்க கமிட்டியில் கோரிக்கை வைத்துள்ளேன். அதிலும் வெற்றி கிடைக்கும்.
நான் மக்களைச் சந்திப்பதில்லை என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய். சட்டமன்றத் தொகுதிவாரியாக சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். பொது விஷயங்களுக்கு சொந்த பணத்தைச் செலவழிக்கிறேன்’’ என்றார் ராதாகிருஷ்ணன்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- செ.சல்மான்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

எம்.பி. ஆபீஸ் எப்படி இருக்கு?
தொகுதி முழுவதும் வலம் வந்தபோது, ‘‘எம்.பி-க்கு என தனியாக ஆபீஸ் இல்லை’’ என்கிற புலம்பல்கள் கேட்டன. வீட்டிலோ, வேறு இடத்திலோ எம்.பி-யிடம் மனு கொடுக்கக்கூட ஓர் அலுவலகம் இல்லை. அலுவலர்கள் இல்லை. எனவே, எம்.பி ஆபீஸுக்கு மனு அனுப்பி அதன்மீது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை.


எம்.பி எப்படி?
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கி யிருக்கும் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 600 பேரை சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

