Published:Updated:

'ஒரு விரல் புரட்சி' ஏற்படுத்திய 'வெற்றிகரமான தோல்வி' எத்தகையது? #VikatanInfographics

ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையையும் வைத்து, பி.ஜே.பி எத்தனை இந்தியர்களை ஆள்கிறது எனக் கணக்கிட்ட போது, 2017-ம் ஆண்டு மிக அதிகமாக 71 சதவிகிதம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை குறைந்து 51 சதவிகித இந்தியர்கள்தாம் பி.ஜே.பி-யால் ஆளப்படுகின்றனர்.

'ஒரு விரல் புரட்சி' ஏற்படுத்திய 'வெற்றிகரமான தோல்வி' எத்தகையது? #VikatanInfographics
'ஒரு விரல் புரட்சி' ஏற்படுத்திய 'வெற்றிகரமான தோல்வி' எத்தகையது? #VikatanInfographics

ந்து மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து, கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. ஐந்து மாநிலங்களிலும் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். மிசோரம் மாநிலத்திலும், தெலங்கானாவிலும் மாநிலக் கட்சிகளின் முதல்வர்களாக முறையே ஜோரம் தங்காவும், சந்திரசேகர ராவும் பதவியேற்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராகிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் யார் என்பது பற்றி காங்கிரஸ் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் பி.ஜே.பி-யின் வாக்கு சதவிகிதம் அதிகரித்தது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சரிந்தது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே, நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. முந்தைய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும், ஆட்சி மாற்றத்தை மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே கணித்தன. அதன் காரணமாகவே, ஐந்து மாநிலத் தேர்தல்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், `செமி ஃபைனல்' என்றும் கருதப்பட்டது. 

பி.ஜே.பி-யின் வாக்கு வங்கி அண்மையில் முடிந்த ஐந்து மாநில தேர்தல்களிலும் பெரியளவில் சரிந்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. `காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற முழக்கத்தை முன்வைத்த பி.ஜே.பி தற்போது 11 மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகின்றது. பீகார், கோவா, மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பி.ஜே.பி. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி, தற்போது நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடனும், கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியிலும் உள்ளது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி கேரளாவில் ஆட்சி செய்து வருகிறது. எட்டு மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளின் ஆட்சி நடைபெறுகின்றது. 

ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையையும் வைத்து, பி.ஜே.பி எத்தனை இந்தியர்களை ஆள்கிறது எனக் கணக்கிட்ட போது, 2017-ம் ஆண்டு மிக அதிகமாக 71 சதவிகிதம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை குறைந்து 51 சதவிகித இந்தியர்கள்தாம் பி.ஜே.பி-யால் ஆளப்படுகின்றனர். இந்தி மொழி பேசும் மாநிலங்களான இந்தியாவின் மிகவும் பின் தங்கிய பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகியவற்றுள் இரண்டு மாநிலங்கள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.

சமீபத்திய தேர்தலில் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதிகளில் பி.ஜே.பி. கடும் தோல்வியைத் தழுவியுள்ளது. பி.ஜே.பி-யின் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சி செய்த மத்தியப் பிரதேசத்தில் 2013-ம் ஆண்டு முதல் 1,321 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக அளவில் அரிசி விளைவிக்கும் மாநிலங்களுள் ஒன்றான சத்தீஸ்கரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,344 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தற்போதைய தேர்தலில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வென்றுள்ள 68 தொகுதிகளில், 38 தொகுதிகள் இதற்கு முன் பி.ஜே.பி வசமிருந்தவை. ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு அதிக வாக்குறுதிகள் கொடுத்த கட்சிகளே வெற்றிபெற்றுள்ளன.

பி.ஜே.பி. தோல்வியடைந்த தொகுதிகளில் மூன்றில் ஒன்று தனித்தொகுதி எனத் தெரிகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பட்டியலின பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தனித்தொகுதிகளில் பி.ஜே.பி. 4 தொகுதிகளையும், காங்கிரஸ் 24 தொகுதிகளையும் வென்றுள்ளன. கடந்த தேர்தலில் பழங்குடியினர் தொகுதிகளில் பி.ஜே.பி 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தன. பட்டியலின மக்களுக்கான தனித்தொகுதிகளிலும் பி.ஜே.பி-க்கு தற்போது வீழ்ச்சியே கிடைத்திருக்கிறது. கடந்த 2013 தேர்தலில் ஒன்பது இடங்களைப் பிடித்த பி.ஜே.பி. தற்போது இரண்டு தொகுதிகளையும், ஒரு தொகுதியில் மட்டும் வென்ற காங்கிரஸ் தற்போது 6 தொகுதிகளையும் வென்றுள்ளன. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் தனித்தொகுதிகளை அதிகமாகக் கைப்பற்றி இருப்பதையும், பி.ஜே.பி. தோல்வியைத் தழுவியிருப்பதையும் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.   

கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பி.ஜே.பி மீது எழுந்திருக்கும் அதிருப்தி அலை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முதலானவை அந்தக் கட்சியின் தோல்விக்கான காரணங்களாக அடுக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சி, பி.ஜே.பி-யின் இந்துத்துவக் கொள்கையை மிதமாகக் கையாண்டதும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கான மற்றொரு காரணமாகச் சொல்லப்படுகிறது. மதச்சார்பின்மை என்ற கொள்கையின் வழி நிற்பதாகச் சொல்லப்படும் காங்கிரஸ் கட்சியின் இந்த மாற்றம் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி 1989-ம் ஆண்டு தேர்தலை `ராம ராஜ்ஜியம் அமைப்போம்' என்ற முழக்கத்தோடு தொடங்கினார். பி.ஜே.பி-யின் வளர்ச்சியைக் கண்டிக்க, காங்கிரஸ் கட்சி பிற்காலத்தில் மதச் சார்பின்மையை அடையாளமாகப் பேசியது. தற்போதைய தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி கோயில்களில் பிரசாரத்தைத் தொடங்கினார். 

தேர்தல்களில் வாக்குகளைக் கவர்வதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. வாக்குகளை அறுவடை செய்ய சாதியும், மதமும்   பயன்படுத்தப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்திற்கான தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சி பசுக்களுக்கான கோசாலை, பசு கோமியம் விற்பனை முதலானவற்றைத் தருவதாக உறுதியளித்திருந்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது.

தேர்தல்கள் இந்திய இளைஞர்களால் `ஒரு விரல் புரட்சி'யாகக் கருதப்படுகின்றன. இதில் பி.ஜே.பி. `வெற்றிகரமான தோல்வி' அடைந்ததற்கு அதன் கொள்கை முடிவுகள் காரணமாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி, பி.ஜே.பி-யின் நிழலாக மாறியுள்ளதும் ஒரு காரணம். மேலும் மக்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், காங்கிரஸ் கட்சியை இப்படியான நிலைக்குத் தள்ளியிருக்கலாம். காங்கிரஸ் மாற்ற வேண்டியது, மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வெறுப்பைத்தான்; தனது மதச்சார்பின்மை கொள்கையை அல்ல. இந்தியாவின் பழம்பெரும் இயக்கமான காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகப் பதவியேற்ற முதலாம் ஆண்டு விழாவைக் கொண்டாடப் போகும் ராகுல் காந்தி கவனிக்க வேண்டியது அது மட்டும்தான்.