Published:Updated:

அம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா! - குவியும் பாராட்டுகள்

அம்பானி வீட்டுத் திருமணம் என்றாலும் அதே எளிமையையே மம்தாவிடம் காண முடிந்தது.

அம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா! - குவியும் பாராட்டுகள்
அம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா! - குவியும் பாராட்டுகள்

நாட்டின் முக்கிய பதவியில் இருந்தும் எளிமையாகத் தென்படும் தலைவர்கள் இந்தியாவில் உண்டு. கேரள முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி போன்றவர்கள் எளிமையின் அடையாளச் சின்னங்களாகப் பார்க்கப்பட்டவர்கள்.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பனார்ஜியும். எவ்வளவு பெரிய அரசியல் நிகழ்வு என்றாலும் சரி, தனிப்பட்ட நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி... உடைகளில் எந்த மாற்றமும் இருக்காது. சாதாரண காட்டன் சேலை கட்டுவார். காலில் சாதாரண ரப்பர் காலணிதான் அணிந்திருப்பார். 

சமீபத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மகள் இஷாவின் திருமணம் மும்பையில் நடைபெற்றது. ஆடம்பரமாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், அம்பானி உறவினர்கள் பங்கேற்றனர். பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் அமிதாப், அமீர் கான் போன்றவர்கள் கூட விருந்தினர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தனர். வெள்ளித்தட்டுகளில்தான் உணவு பரிமாறப்பட்டது. திருமணத்தில் பங்கேற்றவர்கள்  விலைஉயர்ந்த ஆடைகள், நகைகள் அணிந்து ஆடம்பரத்தை வெளிக்காட்டினர். இஷாவின் திருமணத்தில் யார் எந்த ரக ஆடை அணிந்து வந்தனர். அதில், யார் சிறப்பான ஆடை அணிந்திருந்தனர். யார் மோசமான ஆடை அணிந்திருந்தனர் என்றெல்லாம் சில ஊடகங்கள் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தன. 

இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களில் மேற்கு வங்க மம்தாவும் ஒருவர். அம்பானி வீட்டுத் திருமணம் என்றாலும் இவரின் உடையில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும்போல தான் அணியும் சாதாரண கைத்தறி சேலை கட்டியிருந்தார். காலில் சாதாரண ரப்பர் காலணி அணிந்திருந்தார்.. `அம்பானி வீட்டுத் திருமணத்தில் எளிமையாகத் தெரிந்த ஒரே ஒருவர் இவர்தான்' என்று நெட்டிஸன்கள் மம்தாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

கடந்த 2014-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, `மம்தா பனார்ஜி அணியும் ரப்பர் காலணி  சீனாவில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் தயாராகும் ரப்பர் செருப்புகளை மம்தா அணிவதில்லை ' என்று கேலி செய்ததும் உண்டு. 

யார் என்ன சொன்னாலும் மம்தா தன் எளிமையை மாற்றிக்கொண்டதில்லை. கடந்த 2000-ம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தபோது மம்தா ரயில்வே துறை  அமைச்சராக இருந்தார். கொல்கத்தாவில் ஹாரீஸ் சட்டர்ஜி தெருவில் இருந்த மம்தாவின் வீட்டுக்குச் சென்ற அப்போதையை பிரதமர் வாஜ்பாய் அந்த வீட்டைப் பார்த்து வாயடைத்துப் போனார். வீட்டில் மம்தாவின் வயதான தாயார் காயத்ரி தேவி வசித்தார். மம்தாவின் தாயார் காலைத் தொட்டு வணங்கி வாஜ்பாய் ஆசி பெற்றது பழைய கதை.

டெல்லியில் எண்.10 ஜன்பத் சாலை பங்களா போலவே 30- B Harish Chatterjee Street வீடும் கொல்கத்தாவில் வெகு பிரபலம். மம்தா மேற்கு வங்க முதல்வரான பிறகும் கூட அரசு வீட்டுக்குச் சென்று குடியேறவில்லை. இதே வீட்டில்தான் வசித்து வருகிறார்.  இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எளிமையான அந்த வீட்டைச் சுற்றிலும் இருக்கும் பாதுகாப்புப் படை வீரர்கள் எப்போதும் கண்கொத்திப் பாம்பாகவே இருப்பார்கள். 

மம்தா இன்னும் மாறவில்லை!