Published:Updated:

அம்பேத்கர் புகைப்படம் முன் பெண்களை இழிவாகப் பேசிய குற்றவாளி யார்?

இந்த நிகழ்வில் சம்பந்தப்படாத சாலமன், அன்புராஜ், வினோத் ஆகிய மூவரையும் உள்நோக்கத்துடன், எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் கைது செய்திருக்கின்றனர்.

அம்பேத்கர் புகைப்படம் முன் பெண்களை இழிவாகப் பேசிய குற்றவாளி யார்?
அம்பேத்கர் புகைப்படம் முன் பெண்களை இழிவாகப் பேசிய குற்றவாளி யார்?

டிசம்பர் 6-ம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளன்று, அவரின் உருவப் படத்தின் முன்னால் நின்று, குறிப்பிட்ட சமூகப் பெண்களை தகாத முறையில் பேசுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. பின்னர் அந்த வீடியோவில் பேசியவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பது தெரியவந்தது. அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களின் தலைவர்களேகூட சம்பந்தப்பட்ட நபரின் இந்தச் செயலைக் கண்டித்திருந்தனர்.

இந்நிலையில் அன்பழகனின் இந்தச் சாதியம் நிறைந்த பேச்சைக் கண்டித்து, அம்பேத்கர் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த சாலமன், ``இதுபோன்ற ஆணாதிக்க அரைவேக்காட்டு தனங்கள் முழுமையாகக் கண்டிக்கத்தக்க ஒன்று. `சாதி ஒழிப்பு இல்லையேல் பெண் விடுதலை இல்லை; பெண் விடுதலை இல்லையேல் சாதி ஒழிப்பு இல்லை’ என டிசம்பர் 7-ம் தேதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். ஆனால், திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த், இந்த நிகழ்வில் சம்பந்தப்படாத சாலமன், அன்புராஜ், வினோத் ஆகிய மூவரையும் உள்நோக்கத்துடன், எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் கைது செய்திருக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து உரிமை மீட்பு கூட்டியக்கம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது.

அதில் பேசிய மக்கள் சிவில் உரிமைக் கழக துணைத் தலைவர் சரசுவதி, ``சாலமன் மற்றும் அவர்களின் தோழர்களான அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணியைச் சேர்ந்தவர்கள், பல ஆண்டுகளாக மணல் கொள்ளைகளை எதிர்த்தும், அந்தப் பகுதி மக்களின் உரிமை சார்ந்த பிரச்னைகளுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருபவர்கள். வீடியோவில் உள்ள சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் சாலமன், அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி நடத்திய வேறு ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

இந்தக் கைதுச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு முன்பு, அந்தப் பகுதி மக்களைத் திரட்டி மணல் திருட்டில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களுக்குச் சொந்தமான லாரிகளைச் சிறைபிடித்து, சாலைமறியல் போராட்டங்களை மேற்கொண்டார். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்தக் கைதுச் சம்பவம் உள்ளது” என்றார் கோபமாக.

சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா, ``பெண்களை இழிவுப்படுத்துவது மாதிரியான அந்த வீடியோவில் இடம்பெற்ற நிகழ்வுகள் முழுமையாகக் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கரிய, பெரியாரியக் கொள்கைகள், பெண் விடுதலையை மையமாகக் கொண்டவை. எல்லாப் பொது அமைப்புகளும் இதுமாதிரியான நிகழ்வுகள் நடப்பதை அனுமதிக்கக் கூடாது. தவறுதலாகப் பேசியவருக்கும், அதைக் கண்டித்தவருக்கும் ஒரே மாதிரியான நீதிதான். இது மாதிரியான உள்நோக்கம் கொண்ட கைது நடவடிக்கைகள்தான், மக்களுக்காக உழைக்கிற சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன” என்றார்.

தமிழகப் பெண்கள் இணைப்புக் குழுவைச் சேர்ந்த ஷீலா பேசுகையில், ``பெண்களை போகப் பொருளாக பார்க்கிற ஆணாதிக்கச் சமூகத்தின் மனோநிலை முதலில் மாற வேண்டும். அவற்றை மாற்றுவதற்கான முன்னெடுப்புகளை ஊடகங்களின் வாயிலாகத்தான் நிகழ்த்த முடியும். கொசஸ்தலை ஆற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காகத்தான், இந்தக் கைது. கைதுசெய்யப்பட்டபோது மனித உரிமையின் அடிப்படையில்கூட சாலமன் நடத்தப்படவில்லை. இது மனித உரிமைகளுக்கு எதிரானது” என்றார்.

அம்பேத்கர் பொதுவுடைமை கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் சந்தோஷ், ``தகாத முறையில் பேசி காணொலி வெளியிட்ட அன்பழகன் என்பவருக்கும் அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் நடத்திய நிகழ்வில் அன்பழகன் பங்கேற்றுப் பேசவில்லை. ஆனால், சாலமனைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் இல்லாத ஒரு தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்தக் கைதுச் சம்பவமும் மனித உரிமைகளுக்கு எதிரானது.

நள்ளிரவு 1 மணி அளவில், வீட்டில் இருப்பவர்களுக்கு எந்தச் சரியான விளக்கமும் அளிக்காமல் போலீஸார் கைது செய்துள்ளனர். சாலமனை செருப்பு அணியக்கூட அனுமதிக்காமல் இழுத்துச் சென்றுள்ளனர். ஆனால், அந்த வீடியோவில் பேசியவரை இன்னும் கைது செய்யவில்லை. கைது சம்பவத்தை அதிகாலை நிகழ்த்தியுள்ளனர். ஆனால், முதல் தகவல் அறிக்கை அன்று காலை பத்து மணிக்குத்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொசஸ்தலை ஆற்றிலிருந்து ஒரு டன் மணலை 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். ஆனால், ஆற்றில் ஏற்படும் பள்ளங்களை கூவத்திலிருந்து ஒரு டன் மணல் 3,000 ரூபாய்க்கு வாங்கி நிரப்புகின்றனர். இந்த மணல் கொள்ளைக்குக் காவல்துறையும் துணை நிற்கிறது. சாலமன் இதை எல்லாம் எதிர்த்து போராட்டங்கள் நடத்தியதால் சாதிய காழ்ப்புஉணர்ச்சியோடு நிகழ்ந்த கைது நடவடிக்கை இது” என்றார்.